இயக்குநரின் குரல்: வைகைப் புயலோடு வருகிறேன்! - நலன் குமரசாமி பேட்டி

இயக்குநரின் குரல்: வைகைப் புயலோடு வருகிறேன்! - நலன் குமரசாமி பேட்டி
Updated on
2 min read

மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியுடன் மீண்டும் களம் காண்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. இம்முறை அபத்த நகைச்சுவைக்கு வெளியே வந்து காதல் களத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தைப் பற்றிய கவனத்தை விட்டுவிட்டுத் தனது மூன்றாவது படத்துக்கான திரைக்கதை உருவாக்கத்தில் மூழ்கியிருந்தவரைச் சந்தித்தோம்...

‘சூது கவ்வும்’ தமிழ் ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்த படம். ஆனால் ‘காதலும் கடந்து போகும்’ என்ற தலைப்பே உங்கள் இரண்டாம் படத்தின் கதைக்களம் பற்றி சொல்லிவிடுகிறதே?

ஒவ்வொரு தடவையும் நான் புதிய முயற்சிகளைச் செய்ய முடியாது. ‘சூது கவ்வும்’ படத்தை எடுக்கும்போது ஏதோ, புரட்சி செய்ய வேண்டும் என்று எழுதவில்லை. இயல்பாக வந்ததைத்தான் எடுத்தேன். அதேபோலத்தான் ‘காதலும் கடந்து போகும்’ படமும். கொரியன் படம் ஒன்றைப் பார்த்தேன். பிடித்திருந்தது. அந்த மீட்டர் தமிழில் வரவில்லை. எனக்குப் பிடித்ததை ரசிகர்களுக்கும் கொடுக்கலாமேன்னு எடுத்திருக்கிறேன்.

இந்த ரீமேக் அனுபவம் எப்படி இருந்தது?

என் படத்தைப் பண்ணுவதைப் போலத்தான் உணர்ந்தேன். நானும் தமிழ் ரசிகர்களில் ஒருவன்தான். இந்தப் படத்தில் தனித்துவமான ஒரு விஷயம் என்னை ரொம்பவும் ஈர்த்தது. அதை நிறைய பேர் கடந்து போய்விடுவார்கள். ஆனால் எனக்கு அது விருப்பமானதாக அமைந்தது. அதனால்தான் இதைத் தொட்டேன். அதற்கிடையே ‘கை நீளும்’ என்ற என் இன்னொரு கதைக்குள் சில மாதங்கள் பயணித்தேன். அதை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் இந்தக் கதைக்குள் வந்தேன். முறையாகப் படத்தின் மறு ஆக்க உரிமையைப் பெற்று அதில் மூழ்கி வேலை பார்த்தேன். நேரம் நிறைய எடுத்துக்கொண்டு அதற்காக உழைத்ததால் ரீமேக் படத்தை எடுப்பதுபோல் எண்ணம் தோன்றவில்லை.

முறையாக மறு ஆக்க உரிமை பெற்றுப் பண்ண வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

ஒரு படத்தின் பாதிப்பிலிருந்து நமக்கான கதையை எழுதினால் இணையம் வழியே கண்டுபிடித்துவிடுவது சுலபம். இப்படி உரிமை பெற்று எடுக்கும்போது அந்தக் குற்றவுணர்ச்சி இருக்காது. அதனால் மறு ஆக்க வேலையைச் சிறப்பாகவும் செய்யவும் முடியும். அவ்வளவுதான்.

‘எஸ்கிமோ காதல்’ என்ற தலைப்பு ஏன் ‘காதலும் கடந்துபோகும்’ என்று மாறியது?

வேறொண்ணும் பெரிய காரணம் இல்லை. தலைப்பு எல்லோரையும் போய்ச்சேருமா? என்பதில் சின்ன சந்தேகம் இருந்தது. படத்தில் காதலையும் கடந்து சின்னச் சின்ன அழகான உணர்வுகளை வைத்திருக்கிறோம். அதற்குப் பொருத்தமான தலைப்பு இதுவாக இருந்தது.

சூர்யா, சசிகுமார் ஆகியோரோடு திட்டமிட்ட படம் என்னவானது?

அந்தக் கதைதான் ‘காதலும் கடந்து போகும்’. சூர்யாகிட்ட கதை சொன்னபோது அவருக்கு இந்தக் கதை பத்தாதுன்னு சொன்னார். அதுவும் உண்மைதான். சசிகுமாருக்கு வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் அப்போது பிஸியாக இருந்ததால் இணைய முடியவில்லை.

‘நானும் ரௌடிதான்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து வெளிவரும் விஜய் சேதுபதி படம் இது. கூடவே ‘பிரேமம்’ கதாநாயகி மடோனா வேறு?

ஒரு சில நடிகர்கள் கொஞ்சம் கமல் சார் மாதிரியும், ஒரு சாயலில் அஜித்தையும், மற்றொரு கோணத்தில் ரகுவரனையும் நினைவுபடுத்துவார்கள். ஆனாலும் அவர்களுக்குன்னு ஒரு ஒரிஜினல் முகம் இருக்கும். அது இந்தக் கதையின் பாத்திரங்களில் வெளிப்படும். கவுன்சிலர்கூட இருக்கும் ஒரு அடியாள் பையன், வேலை தேடும் பெண் ஒருவர். இருவருக்கும் இடையே ஒரு உறவு உருவாகும். சினிமாவில் காலாகாலமாகப் பார்த்ததுதான். வேறென்ன என்று தோணும். அதைக் கடந்து வேறொரு விஷயமும் சாத்தியமாகும். அதுதான் படம். விஜய் சேதுபதியும், மடோனாவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

திரைப்பட விழாக்கள் வழியே கவனமும் பெறலாம், லாபமும் பார்க்கலாம் என்ற சூழல் வந்துள்ளதே?

தமிழ் சினிமாவின் அற்புதமான கட்டம் இதுதான். இனி அடுத்து இங்கே கிடைக்கும் தியேட்டர் வருமானம், லாபம் இதெல்லாம் இலக்காக இருக்காது. உலக அளவிலான கவனம்தான் டார்கெட்டாக இருக்கும். தைரியமான தயாரிப்பாளர்கள், கம்மியான பட்ஜெட்டில் படம் இதுதான் அதற்கு வேண்டும். இதை இயக்குநர்கள் மணிகண்டன், வெற்றி மாறன் போன்றவர்கள் முன்மாதிரியாக நின்று தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து?

எனக்கென ஒரு ஜாலி ஸ்டைல் எழுத்து இருக்கிறது. அதை சமீப காலமாக மிஸ் பண்றேன். அந்த வேலையில்தான் தற்போது இறங்கியுள்ளேன். அந்தக் கதையில் வைகைப் புயல் வடிவேலு இருக்கணும்னு ஆசைப்படுறேன். அவருக்கான இந்தக் கதை ஃபேண்டஸி டைப் கதை. தற்போது உதிரியாக இருப்பதைக் கோர்த்துவருகிறேன். அடுத்த படம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அவருக்குக் கதை செய்வது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. என் விருப்பத்துக்குக் கதை பண்ண முடியாது. முக்கால் பங்கு அவருக்குப் பிடித்தமாதிரி, அவரோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருக்கணும். அதைத்தான் இப்போது செய்துவருகிறேன். விரைவில் முழுக் கதையோடு சென்று அவரைப் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in