

‘லூசியா' என்ற கன்னடப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்தப் படத்தை இயக்கிய பவன் குமார். பொது நிதித் திரட்டல் மூலம் அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்த அவர், தற்போது 'யூ டர்ன்' என்ற படத்தின் மூலம், தனது அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார். அவரிடம் பேசியதிலிருந்து...
லூசியாவுக்குக் கிடைத்த வரவேற்பு உங்கள் அடுத்த படத்துக்கு எந்த விதத்தில் உதவியது?
எனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவானதால் நம்பிக்கை கிடைத்தது. இன்றைய ரசிகர்கள் புதிதான விஷயங்களைப் பார்க்கிறார்கள். நாயகன் இல்லாமல், பாடல்கள் இல்லாமல், வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு படத்தை இயக்க எனக்குத் தைரியம் அளித்தது. இது லூசியாவின் வெற்றியால் மட்டுமே இது சாத்தியமானது.
இரண்டாவது படத்துக்கு ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறையை ஏன் முயற்சிக்கவில்லை?
நான் முயற்சித்தேன், அது நடக்கவில்லை. எனது இந்த இரண்டாவது முயற்சி புகைப் பழக்கம் கூடாது என்பதைப் பற்றியது. அதை மக்கள் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. எனவே க்ரவுட் ஃபண்டிங் எப்படிச் சாத்தியமாகும் என்பதை ஆராய்வது சுலபமல்ல. அது மக்களின் மனநிலை, அவர்கள் சமூக மனப்பான்மையைப் பொறுத்தது. அது தோல்வியடையலாம், அதிசயமாக வெற்றியும் பெறலாம்.
இரவு நேரக் காட்சிகளும், இருண்ட காட்சிகளும் உங்கள் படங்களில் அதிகம் இருப்பதற்குக் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?
இரவு நேரக் காட்சிகளுக்குத் தனி வசீகரம் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருட்டு அனைத்தையும் மறைத்து, கதைக்குத் தேவையானதை மட்டும் ரசிகர்களைப் பார்க்க வைக்கிறது என்பது எனக்குப் பிடித்துள்ளது.
லூசியா பட இயக்குநர் என்று நம்பி வரும் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் புதிதாக ரசிக்க என்ன இருக்கும்?
ஒரு எளிமையான கருவைக் கொண்டு மிக எளிமையான படம். நான் வேண்டுமென்றே எளிமையாகக் கதையை விவரித்துள்ளேன். கலைத்துப்போட்டு, பல அடுக்குகளில் கதை சொல்லும் நான்-லீனியர் படங்களை விட லீனியர் படங்களை எடுப்பதுதான் சவால். அதனால் அப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று, அந்தச் சவாலை எடுத்துக்கொள்ள முடிவுசெய்தேன். இது ஒரு மர்மமான, க்ரைம் த்ரில்லர் படம். ஒரு போலீஸ் கேஸ், அது எப்படி நடைபெறுகிறது என்பதைப் பற்றி. லூசியாவைப் போல எடுக்க வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. அப்படியே அதற்கு நேரெதிரான படமாக எடுக்க நினைத்தேன்.
தற்போதைய கன்னட சினிமா ரசிகர்களின் ரசிப்புத் தன்மையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கன்னட சினிமா ரசிகர்கள் எப்போதும் உயர்ந்த ரசனையைக் கொண்டவர்கள். அதனால்தான் கன்னடத்தின் வணிகப் படங்களிலிருந்து தங்களை எளிதில் துண்டித்துக்கொண்டுவிட்டனர். கன்னட ரசிகர்கள் அடிப்படையில் நன்கு படித்தவர்கள், அறிவார்ந்தவர்கள். அவர்களது ஒப்புதலைப் பெறுவது மிகவும் கடினம். சாதாரண படைப்புகளில் திருப்தியடையமாட்டார்கள். பெரும்பாலான ரசிகர்கள் இங்கு இப்படித்தான். அவர்களைச் சென்றடைய முயற்சிக்கிறேன்.
தரமான படங்களைத் தர விரும்பும் இயக்குநராக மாநில மொழிப் படங்களையும், பாலிவுட்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எப்படியிருந்தாலும் இது பணம் போடுபவர்களுக்கு ஒரு வியாபாரம்தான். நிறையப் பணம் இதில் சம்மந்தப்பட்டிருக்கும்போது அப்படிப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. போட்ட பணத்தை எடுக்க வேண்டும். ஆனால் எல்லாத் துறைகளும் அப்படியே நினைக்கின்றன. சிறந்த கரு இருக்கும் படங்களை எடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது சுலபம்தான். ஆனால் அனைவரும் எளிதான வழியைப் பின்பற்றுகிறார்கள். ஃபார்முலா படங்கள், ரீமேக் படங்கள், ஒருவரை, ஒரு பெயரை மட்டுமே நம்பிப் படம் எடுப்பது என லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள்கிறார்கள். இதனால் அனைத்து மொழி திரைத் துறைகளும் ரசிகர்களிடம் பாடாவதிப் படங்களைத் திணிக்கின்றன. அதனால் சமூக மனநிலையிலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு திரைப்படம், தனிநபர் முன்னேற்றத்திலும், சமுதாயத்தின் முன்னேற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நான் நினைக்கிறேன். சினிமா மிக மிக முக்கியமான கலை வடிவம். அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பொழுதுபோக்கு எனச் சொல்லிக்கொண்டு எளிமையான வழியில் கமர்ஷியல் இயக்குநர்கள் செல்கின்றனர். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நான் இயக்குவதும் பொழுதுபோக்குதான். ஆனால் இதன் தாக்கமும் அதிகம். இதை இந்திய சினிமா இயக்குநர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்
லூசியாவின் தமிழ்மறுஆக்கமாக வெளிவந்த ‘எனக்குள் ஒருவன்’ வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடையவில்லை. தமிழில் என்ன குறைகள் இருந்தன?
இது மிக எளிதான கதை, அப்படியே மீண்டும் உருவாக்கிவிடலாம் என நினைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். கன்னடத்தில் படம் பல அடுக்குகளில் இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் பல முக்கிய அம்சங்களைச் சேர்த்திருந்தேன். அதில் எதை விடுத்திருந்தாலும் அது ஒட்டு மொத்த படத்தின் ஓட்டத்தையும் பாதிக்கும். இதனால்தான் தமிழ் ரீமேக் தோல்வியடைந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
பரீட்சார்த்த முயற்சியில் வெற்றிபெற்ற ஓர் இளம் இயக்குநர் நீங்கள். வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்வது என்ன?
பணத்துக்காகச் சமரசம் வேண்டாம். அது உங்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. புத்திசாலித்தனமாக இருங்கள். உங்கள் நேர்மையான சிந்தனைகளும், நம்பிக்கையும் உங்கள் படங்களில் இருக்கட்டும். மிகப் பெரிய வணிகப் படம் ஏதோ ஒன்றின் பிரதியை பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். தனித்துவமான சிந்தனைகளையும், கதைகளையும் மட்டுமே பார்க்க விரும்புவார்கள். உங்களது தனித்துவமான சிந்தனையை, உங்களது சொந்தமான தொனியில் சொல்லுங்கள்.