Last Updated : 25 Jun, 2021 03:12 AM

Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

ஓடிடி உலகம்: தாயுமானவனின் தவிப்புகள்!

பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் தாயுமாகி நிற்கும் ஒருவன் எதிர்கொள்ளும் சுவாரசியமான தடுமாற்றங்களே ’ஃபாதர்ஹுட்’ திரைப்படம். தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் கடந்த வாரம் வெளியானது.

காதல் மனைவியைத் தலைப்பிரசவத்தில் பறிகொடுத்தவனின், ஈமச்சடங்கு பிரிவு உரையுடன் திரைப்படம் தொடங்குகிறது. மனைவியின் நினைவுகளில் அவ்வப்போது தொலைந்துபோகும் அவனுடைய கைகளில் தவழும் பச்சிளம் குழந்தையாக இருக்கும் மகள் மட்டுமே ஒரே ஆறுதலாகிறாள். உறவினர், நண்பர்களின் எச்சரிக்கையை மீறி, தனியொருவனாக மகளை வளர்க்கத் தலைப்படுகிறான். ஆனால், தாயின் இடத்தை நிரப்பும் முயற்சியில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தந்தைக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

இரவெல்லாம் தானும் தூங்காமல், தகப்பனையும் தூங்க விடாமால் சிணுங்கிக்கொண்டே இருக்கும் மகளை சமாதானப்படுத்துவது, அவன் அதுவரை கண்டிராத போராட்டமாக மாறுகிறது. மகளுக்காக இரவெல்லாம் கண் விழித்ததில் அலுவலகத்தில் தூங்கி விழுவதும், தோள் சாய்ந்த குழந்தையுடன் அலுவலகப் பணிகளைத் தொடர்வதுமாக ரசனையும் ரகளையுமான அனுபவங்கள் காத்திருக்கின்றன. தன் மீது பாசமும் அவநம்பிக்கையும் ஒருசேர தொனிக்கும் கண்டிப்புமிக்க மாமியார், பணியிலிருந்து கழற்றிவிடப் பார்க்கும் உயரதிகாரி, இளந்தாய்மார் சங்கத்தில் ஒரு தகப்பனை சேர்க்க மறுக்கும் அவலம் என அவன் சந்திக்கும் அத்தனை அனுபவங்களையும் நகைச்சுவையில் தோய்த்துப் பரிமாறுகிறார்கள்.

சரிபாதி திரைப்படம், ஐந்து வயது மகளின் உலகில் சஞ்சரிக்கும் அந்தத் தாயுமானவனுடன் தாவுகிறது. தாயின் அண்மை கிட்டாத பெண் குழந்தை தன்னுடைய உடைத் தேர்வுகளில் ஆண் ரசனையை சார்ந்திருப்பது, அவள் படிக்கும் பள்ளியில் சச்சரவுகளைக் கூட்டுகிறது. அம்மாதிரி முளைக்கும் பள்ளிப் புகார்களை எதிர்கொள்வதுடன், இடையில் பேத்தியை நாசூக்காய்த் தன் வளர்ப்புக்கு வசப்படுத்தும் மாமியாருடனும் அவன் போராட வேண்டியிருக்கிறது.

சந்திப்பில் சறுக்கும் இன்னொரு பெண் மீதான அண்மைக்கு ஏங்குவதும், அது மகள் வளர்ப்பைப் பாதிக்குமோ என்று மருகுவதுமாக, இளந்தகப்பனின் தனித்துவத் தடுமாற்றமும் வருகிறது. இப்படியாகத் தொடரும் சங்கடங்களில் ஒளிந்திருக்கும் தன் வாழ்க்கையின் பொருளை அவன் கண்டுகொள்வதே ‘ஃபாதர்ஹுட்’ திரைப்படத்தை நமக்கு நல்ல அனுபவமாக்குகிறது.

‘தனிப் பெற்றோ’ராக மகளை வளர்த்தெடுக்கத் தான் பட்ட தடுமாற்றங்களையும் கண்டடைந்த அனுபவங்களையும் லாக்னின் என்பவர் நாவலாக வெளியிட்டிருந்ததை தழுவியே ‘ஃபாதர்ஹுட்’ திரைப்படமாக்கி உள்ளனர். எழுத்தின் கைகூடும் வலிமையான கதாப்பாத்திர விவரணை, வாழ்வனுபவம் இரண்டும் திரைமொழியிலும் தெறிக்கின்றன. தனியாளாய் குழந்தை வளர்ப்பில் தடுமாறும் தந்தையின் தவிப்புகள், இயலாமைகள், சமூக சங்கடங்கள் ஆகியவற்றுடன் எந்த வகையிலும் தவிர்க்கவே முடியாத ஒரு தாயின் இடம் எனச் சகலத்தையும் திரைமொழிக்கு இடம்பெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.

ஸ்டாண்ட் அப் காமெடி, நகைச்சுவை கதாபாத்திரங்கள் என ரசிர்களைக் கவர்ந்திருக்கும் கெவின் ஹார்ட், நகைச்சுவை கலந்த அப்பாவித் தந்தையை அப்படியே பிரதிபலிக்கிறார். 5 வயது மகளாகத் தோன்றும் மெலடி ஹர்ட்டின் சுட்டித்தனம் மிகுந்த நடிப்பு உச்சிமுகரச் சொல்கிறது. கெவின் ஹார்டினை, பழகிய வேடங்களிலிருந்து முற்றிலும் வேறாக விருந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பால் வெய்ட்ஸ்.

தந்தையர் தினத்தை முன்னிட்டு சமூக ஊடகங்களில் வெளியான இந்தத் திரைப்படத்தின் தந்தை-மகள் நகைச்சுவைக் காட்சிகளைத் திரைப்படத்தில் காணோம். பெரிய திருப்பங்கள் இல்லாத, எளிதில் ஊகிக்க முடிந்த கதை என்ற போதும் தாய்மை என்பது தந்தையர்களுக்கும் பொதுவானது என்கிற உண்மையை, தந்தைக்கு, மகள்கள் தேவதையாகும் மாயத் தருணங்களைப் பதிவுசெய்ததில் ‘ஃபாதர்ஹுட்’ உருகவைத்துவிடுகிறது.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x