

உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமணக் கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வ ரிக்கு (ஊர்வசி) ஆசை. அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். அப்படிப் பெண் பார்க்க வரும் அபியும் (ஆர்யா) அனுஷ்காவும் திரு மணப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டாலும் நட்பு தொடர்கிறது.
அனுஷ் காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவ தாகத் தெரிகிறது. ஆர்யா தன்னை விரும்பாத தற்குத் தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா, உடனடி எடை குறைப்புக்கு உத்தரவாதம் தரும் ஒரு நிலை யத்துக்குப் போகிறார். அங்கு அதிர்ச்சியான உண்மைகளைக் கண்டறிந்து போராட்டத்தில் குதிக்கிறார். ஆர்யாவும் உதவுகிறார். முடிவு என்ன என்பது மீதிக் கதை.
உடல் பருமனை வைத்து அழகு நிலையங்களும், எண்ணெய் உள்ளிட உணவு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் நடத் தும் வியாபாரம் எத்தனை சுவாரஸ்யமான களம்! அதைத் தேர்ந்தெடுத்து அனுஷ்கா - ஆர்யாவைப் பாத்திரங்களாக முடிவு செய்தது வரையில் காட்டிய புத்திசாலித் தனத்தை, வேறு எதிலுமே காட்ட வில்லை இயக்குநர் - குறிப்பாகத் திரைக் கதையில்!
புதுமையான காட்சிகளோ, வசனங்களோ தப்பித் தவறியும் இருந்துவிடக் கூடாது என்று சபதம் போட்டுவிட்டே படம் எடுத்தார்களா, தெரியவில்லை. எடை குறைப்பு பற்றிய விழிப்புணர்வு அடைந்த பிறகு அனுஷ்கா, குறுக்கு வழிகளைக் கைவிட்டு, ஒரேயடி யாக உழைத்து நிஜமாகவே இஞ்சி இடுப் பழகியாக மாறிவிடுவதுபோல் காட் டாத யதார்த்தத்துக்காக வேண்டு மானால் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவைப் பாராட்டலாம்.
கதையின் மையச் சிக்கல் உடல்பருமனா, காதலா அல்லது ஊரை ஏமாற்றும் ‘எடை குறைப்பு’ வில்லன் பிரகாஷ்ராஜா என்ற குழப்பம் காரணமாகப் படத்துடன் ஒன்ற முடியாமல் பார்வையாளர்கள் தலையைப் பிடித் துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார்கள். உடல் பருமன் பிரச்சினை, முக்கோணக் காதல், எடையைக் குறைக்கும் போலி நிறுவனங்கள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்த தில், பின்பாதியில் ஏகத்துக்கும் செரிமானப் பிரச்சினை வந்துவிடுகிறது. ஆர்யாவை ஆவணப்பட இயக்குநராகச் சித்தரித்திருப்பது திரைக்கதைக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. அனுஷ்கா தொடங்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் சித்தரிப்பும் ஆவணப்படம்போலவே உள்ளது.
கதாநாயகியாகக் கொடிகட்டிப் பறக் கும் நிலையில், நடிகைகள் ஏற்கத் தயங் கும் பாத்திரத்திலும் உருவத்திலும் வந்திருப் பதற்காக அனுஷ்காவுக்கு வெயிட்டான வாழ்த்துகள். எடை மெஷினில் வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுக்காக அந்த இயந்திரத்தின் மீது பாசத் தைக் காட்டுவது, துயரம், அன்பு, மன உளைச்சல், அழுகை, பொறாமை, விரக்தி என அத்தனை உணர்வுகளையும் தன் அசாத்தியமான நடிப்பால் அனாயாசமாக வெளிப் படுத்துகிறார். ஆனால், பல இடங்களில் அவரை மன முதிர்ச்சி அடையாத சேட்டை களுடன் சித்தரிப்பது, பாத்திரப் படைப்பு பற்றிய குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.
ஆர்யா பாவம் - அவ்வளவுதான் சொல்ல முடியும்!
‘ஸ்லிம் கிளினிக்’ நடத்தும் பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் பரவாயில்லை. ஆனால், அவருக்கான வசனங்கள் அழுத்தம் இல்லாத அபத்தங்கள். ‘அரிது அரிது மானிடராதல் அரிதுன்னு பாரதியார் சொல்லியிருக்காரு’ என்று சீரியஸாக அவர் சொல்வதைக் கேட்டால் அவ்வைப் பாட்டிக்கு அழுகையே வந்துவிடும்.
இரு மொழிப் படமான இதில் தெலுங்கு வணிகப் படங்களுக்கான பளபளப்பைக் காட்டி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. பாத்திரங்களின் நடிப்பிலும், வார்த்தை உச்சரிப்பிலும் தெலுங்குக்கே உரிய அந்த ‘தூக்கல்’தனம் இருப்பதுதான் பிரச்சினையே!