

தெலுங்கு சினிமாவின் சிவாஜியாகக் கருதப்படுபவர் அமரர் நாகேஸ்வர ராவ். அவரது மகனும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான நாகார்ஜுனாவும், பேரன் நாக சைதன்யாவும் நாகேஸ்வர ராவுடன் சேர்ந்து நடித்த ‘மனம்’ திரைப்படம் மூலம் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் அருமையான வழியனுப்புதலைச் செய்தனர். தாத்தா, மகன், பேரன் அனைவரும் இணைந்து நடிப்பதைப் பார்ப்பதே ஆந்திரப் பார்வையாளர்களுக்கு நினைவில் நீங்காத அனுபவம்தான்.
சொல்வதற்கே சிக்கலான கதையை இயக்குநர் விக்ரம் கே. குமார் தன் தேர்ந்த புத்திசாலித்தனத்தால் அழகாகவும் எளிமையாகவும் காவியமாக்கியிருந்தார். டப்பிங் பேசுவதற்காக மருத்துவமனையிலேயே தன் மகனிடம் ஸ்டுடியோவை அமைக்கச் சொல்லித் தன் வேலையை முடித்தபிறகு மரணமடைந்தார் நாகேஸ்வர ராவ். ‘மனம்’ தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி வெகுஜன க்ளாசிக்காக இந்திய சினிமா பார்வையாளர்களின் நினைவில் நிற்கும் படமாக எப்போதும் இருக்கும்.
‘மனம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரெஞ்சு காமெடிப் படமான ‘தி இன்டச்சபிள்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ மறுஆக்கத்தில் வம்சி பய்டிபல்லி இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் ஊபிரி. சுவாசம் என்பது இதன் பொருள். தெலுங்கிலும் தமிழிலும் பிப்ரவரியில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தமிழ் நடிகர் கார்த்தியும் நாகார்ஜுனாவுடன் இணைகிறார். கார்த்தி நேரடியாக சொந்தக்குரலில் பேசி நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. இப்போதைக்குத் தமிழில் ‘தோழா’ என்று தலைப்பை உத்தேசித்துள்ளனர். பின்னர் மாறலாம்.
விபத்தால் ஊனமுற்றுச் சக்கர நாற்காலியிலேயே வாழ நேரும் ஒரு கோடீசுவரருக்கும் அவரைப் பராமரிக்க வரும் உதவியாளனுக்கும் உருவாகும் உறவுதான் ‘தி இன்டச்சபிள்’ படத்தின் கதை. ஒரு கட்டத்தில் அந்த உதவியாளனின் குற்றப் பின்னணி தெரியவந்த பிறகும் தொடரும் அவர்களது பந்தத்தை மையமாக வைத்து இந்தியப் பார்வையாளர்களுக்கு ஏற்பத் திரைக்கதையை மாற்றியுள்ளனர்.
ஊபிரியின் முதல் போஸ்டரே வண்ணமயமாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் கதை நடப்பதால் ஈபிள் டவரின் பின்னணியில் போஸ்டரை வடிவமைத்துள்ளனர். செலிப்ரேஷன் ஆப் லைஃப் என்று கொண்டாட்டமான வாசகத்துடன் நாகார்ஜுனாவின் சக்கர நாற்காலிக்குப் பின்னால் தமன்னாவுடன் மீண்டும் நடிக்கப் போகும் குஷியில் குதிக்கிறார் கார்த்தி.
கடந்த மார்ச் மாதம், கார்த்தி, ஜெயசுதா தொடர்பான காட்சிகள் சென்னையில் முதல்கட்டமாக எடுக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவிலும், பிரான்சிலும் எடுக்கப்பட்டுள்ளன. செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. பெல்கிரேடில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ஊபிரி.
வயது ஏற ஏற அழகாகிக்கொண்டே போகும் நாகார்ஜுனா, நகைச்சுவை நடிப்புக்குப் பெயர் பெற்ற கார்த்தி, தமன்னா, பிரான்ஸ் பின்னணி என 2016-ம் பிப்ரவரி மாதம் தமிழிலும் வண்ணமயமாக வெளியாகவிருக்கும் ஊபிரிக்குக் காத்திருக்கலாம்.