ஓடிடி உலகம்: பெரியவர்களுக்குமான குழந்தைக் குறும்படங்கள்

ஓடிடி உலகம்: பெரியவர்களுக்குமான குழந்தைக் குறும்படங்கள்
Updated on
2 min read

பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கான படைப்புகளையும் ஓடிடி தளங்கள் வாரி வழங்குகின்றன. அவற்றில் ‘டிஸ்னி பிளஸ்’ தளம், இந்தியாவில் ‘டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பெயரில் கிடைக்கிறது. குழந்தைகள் உலகை மையமாகக் கொண்ட குறும்படங்களை ‘லான்ச்பேட்’ என்கிற தலைப்பில் தொகுத்து வரும் டிஸ்னி பிளஸ், அண்மையில் ஒரே நாளில் (மே 28) ஆறு குறும்படங்களை வெளியிட்டது.

குழந்தைகளின் வெளியை துழாவும் இந்த குறும்படங்கள், குழந்தைகளுடன் சேர்ந்து பெரியவர்களும் கட்டாயம் காண வேண்டியவை. குறும்படம் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு ஒரு கதையையும் பெரியவர்களுக்கு பல பாடங்களையும் ஒரே கதையோட்டத்தில் சொல்பவை.

அமெரிக்கன் ஈத்

பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தின் இளைய மகள் அமீனா. இந்த ஒன்பது வயதுச் சிறுமி அமெரிக்க மண்ணில் தனது முதல் ஈத் பெருநாள் பண்டிகையைக் கொண்டாட தயாராகிறாள். ஆனால் அந்த தேசத்தில் அன்றைய தினம் விடுமுறை தினமல்ல எனத் தெரிய வந்ததும் ஒடிந்து போகிறாள். பெற்றோர் வற்புறுத்தலால் பாதி மனதோடுப் பள்ளிக்குச் செல்கிறாள். அங்கே, சக மாணவியரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தைக் காண்கிறாள்.

அதில் ஒப்பமிடும் அமீனாவுக்கு புதிய யோசனை பிறக்கிறது. அதன்படி ஈத் பெருநாளை தான் கொண்டாட முடியாதை விளக்கி, பொதுவிடுமுறை கோரும் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்குகிறாள். வேர்களை துண்டித்துக்கொள்ளவும் அமெரிக்கக் கலாச்சாரத்துக்குள் தன்னை கரைத்துக் கொள்ளவும் தயாரான அவளுடைய அக்காளிடமிருந்தே அதற்கு எதிர்ப்பு எழுகிறது. இறுதியில் சிறுமி அமீனாவின் ஆசை என்னவானது என்பதை பல்வேறு படிமங்களில் அழகாய் விவரிப்பதே ‘அமெரிக்கன் ஈத்’(American Eid) குறும்படம்.

தி லிட்டில் பிரின்சஸ்

அன்றாடம் பள்ளிப் பேருந்தில் பயணிக்கையில் இரு சீன சிறுவர்கள் நண்பர்களாகிறார்கள். அது அவர்களின் குடும்பமும் நெருங்க வாய்ப்பாகிறது. அந்த இருவரில் ஒருவன் சிறுமியருடன் சேர்ந்து பள்ளியில் ‘பாலே’ நடனம் பயில்கிறான். பெண்கள் நேசிக்கும் ‘பிங்க்’ நிறத்தை விரும்புகிறான். இதை அறிந்து இன்னொரு சிறுவனின் தந்தை அதிர்ந்து போகிறார். இரண்டு சிறுவர்களின் பெற்றோர் இடையிலான அடுத்தச் சந்திப்பில் இந்த விவகாரம் வெடிக்கிறது. தொடர்ந்து ’பெண்மை’, ‘ஆண்மை’ என்கிற கற்பிதங்கள் அங்கே கிழிபடுகின்றன. பாசாங்கற்ற குழந்தைகள் உலகின் அருமையை முகத்தில் அறைந்து சொல்கிறது ‘தி லிட்டில் பிரின்சஸ்’ (The Little Prince SS) குறும்படம்.

க்ரோயிங் ஃபாங்க்ஸ்

மெக்சிகோ - அமெரிக்கப் பதின்மச் சிறுமியாக நமக்கு அறிமுகமாகிறாள் வால் கார்சியா. அவளுக்கு, காட்டேரிகளுக்கு (ஐரோப்பிய கற்பிதம்) இருக்கும் பற்கள் தென்படுகின்றன. உண்மையில் அவள் பாதி காட்டேரி; மீதி மனித ஜீவி. உற்ற தோழனான பழைய பள்ளி நண்பனிடம் தன் பிறவி ரகசியத்தை வெளிப்படுத்த விரும்பி, பின்னர் தயக்கத்தில் மருகுகிறாள். முழுதும் காட்டேரிகள் புழங்கும் அவளது புதிய பள்ளியில் உற்ற தோழமை கிடைக்காது அல்லாடுகிறாள். இப்படி, அவள் சார்ந்த இரு உலகத்திலும் ஐக்கியமாக வாய்ப்பின்றி தடுமாறுகிறாள். அப்போது எதிர்பாராதவை நடப்பதும் கார்சியா குதூகலம் அடைவதுமே ‘க்ரோயிங் ஃபாங்க்ஸ்’ (Growing Fangs) குறும்படம். மெக்சிகோ - அமெரிக்கக் குடியேற்ற மக்களுக்கு மட்டுமானதல்ல இதன் கதை.

லெட்ஸ் பி டைகர்ஸ்

துயரம் நிறைந்த வீடுகளில் வளரும் குழந்தைகள் தங்கள் விளையாட்டையும் மகிழ்ச்சியையும் துறப்பதில்லை. நெருக்கடிகள் சூழ்ந்த நடப்புச் சூழலிலும் குழந்தைகளிடம் கற்க நிறைய இருக்கின்றன. நான்கு வயதாகும் துறுதுறு சிறுவன் நோவா. அவனது ஓரின ‘பெற்றோர்’ வெளியே செல்கையில் நோவாவை பார்த்துக்கொள்ள அவலான் என்கிற இளம் தாதியை நியமிக்கிறார்கள். அப்போதுதான் சொந்த வாழ்க்கையின் பெரும் சோகத்தை கடந்து வந்திருக்கிறாள் அவலான். அன்றைய பொழுது வழக்கம்போல சிறுவனுடன் புலி விளையாட்டில் ஈடுபட முடியாமல் உடைகிறாள். அவளைக் கதை சொல்லுமாறு நிர்பந்திக்கும் சிறுவன், அக்கதை வழி, அழகுக் கவிதையாய் அவளைத் தேற்றி மீட்பதுதான் ‘லெட்ஸ் பி டைகர்ஸ்’ (Let’s Be Tigers) குறும்படம்.

அந்த இருவரில் ஒருவன் சிறுமியருடன் சேர்ந்து பள்ளியில் ‘பாலே’ நடனம் பயில்கிறான். பெண்கள் நேசிக்கும் ‘பிங்க்’ நிறத்தை விரும்புகிறான். இதை அறிந்து இன்னொரு சிறுவனின் தந்தை அதிர்ந்து போகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in