

வீடடங்கி இருத்தல் எனும் செயல்பாடு, ஏழை, பணக்காரர் என எல்லோரையுமே மூச்சடைக்கச் செய்கிறது. தொலைக்காட்சிகள் கரோனா செய்திகளையே அதிகமும் காட்டிக்கொண்டிருப்பதால் அது கூடுதல் மன அழுத்ததுக்கு வழி வகுக்கிறது. இதுபோன்ற விடுபடமுடியாத இறுக்கங்களிலிருந்து சற்றே விடுபட விரும்புவோருக்காகவே ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது ‘மலேஷியா டு அம்னீஷியா’. திரையரங்குகள் அடைக்கப்பட்ட நிலையில் இணையத் திரைக்கென்றே பிரத்யேகமாகத் தயாராகி ரசிகர்களின் கைகளில் சேர்ந்திருக்கிறது இந்தத் திரைப்படம்.
கட்டியவனே சரணம் என்றிருக்கும் அப்பாவி மனைவி, பாசம் பிழியும் செல்ல மகள் என அழகான குடும்பம் நாயகனுக்கு. அப்படியிருந்தும், திருமண வேலி தாண்டி வெளியில் மேய்கிறான் கபடக் கணவன். அலுவல் நிமித்தமாக மலேசியப் பயணம் புறப்படுவதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, ரகசிய சிநேகிதியைச் சந்திக்க பெங்களூருவுக்குப் பறக்கிறான். மேற்படி மலேசிய விமானம் விபத்தொன்றால் மாயமாகிறது. தனது ஒற்றைப் பொய்யை மறைக்க, அதன் பின்னர் ஓராயிரம் பொய்களை அவன் தொடுக்க வேண்டியதாகிறது. அதில் உச்சமாய் அம்னீஷியா பாதித்ததாய் பிதற்றுகிறான். அவனுக்கு உதவும் உற்ற நண்பன், இருவரையும் சதா சந்தேகித்தபடியிருக்கும் மனைவியுடைய தாய்மாமன் என நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத கதை. அதற்கேற்ற திருப்பங்களுடன் ‘மலேஷியா டு அம்னீஷியா’ கலகலக்கிறது.
கல்மிஷக் கணவனாக வரும் வைபவ், திரைப்படத்தைத் தயாரித்திருப்பதுடன் சில தருணங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கணவனை நேசிக்கும் மனைவியாகத் தோன்றும் வாணி போஜன், காமெடிக் காட்சிகளில் தேறவில்லை. ஆனால், கணவனிடம் உருகும் காட்சிகளில் ஜொலிக்கிறார். நண்பனாக வரும் கருணாகரனையும் ‘டாங்க் லீ’ மாமாவாக அலப்பறை கூட்டும் எம்.எஸ். பாஸ்கரையும் நம்பியே காமெடிக் காட்சிகள் நகர்கின்றன. அதிலும் வசனமின்றி பிரத்யேகச் சந்தேகப் பாவனைகளைக் கொண்டே கிச்சுகிச்சு மூட்டுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். எதையும் சந்தேகிக்கும் குணம், துறுதுறு துப்புத் துலக்கல், நள்ளிரவு ‘டூயட்’, மொக்கை ஜோக்குகள் என எம்.எஸ்.பாஸ்கரின் கலவையான கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. பெரும்பாலான காட்சிகளில் அவரே திரைப்படத்தைத் தாங்கவும் செய்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் தனியாக ஜோக் சொல்வதுடன், அப்படியான நகைச்சுவை துணுக்குத் தோரணமாகவே படம் பல இடங்களில் நகர்ந்து செல்கிறது. மனைவிக்குக் கணவன் துரோகம் செய்வதன் பின்னால் வலுவான சித்தரிப்பு இல்லை. அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனைவியின் பக்குவத்திலும் முழுமை இல்லை. இன்னும் விரவிக்கிடக்கும் லாஜிக் ஓட்டைகளை நகைச்சுவை முலாம்பூசி மறைக்க முயல்கிறது திரைக்கதை.
அடுக்ககத்தில் எதிர்ப்படுவோரையெல்லாம் வம்பிழுக்கும் ஞாபக மறதி பாட்டியான சச்சு, ‘மொழி’ எம்.எஸ். பாஸ்கரை நினைவூட்டுகிறார். வாட்ச்மேன் மயில்சாமி உட்பட இன்னும் பல சித்தரிப்புகளும், காட்சிகளும் ராதாமோகனின் முந்தைய படங்களின் சாயலில் வருகின்றன. அந்தப் படங்களின் வெற்றியாகவும் இதைச் சொல்லலாம். வைபவ்வை, சச்சு அறையும் காட்சியில் ராதாமோகனின் எழுத்துப் பளிச்சிடுகிறது. அந்தக் காட்சி அழுத்தமின்றிக் கடப்பதும், அதுபோன்ற காட்சிகள் குறைந்திருப்பதுமாகத் தனது ரசிகர்களை ராதாமோகன் சற்று ஏமாற்றி இருக்கிறார். ஒரே இடத்தில் சுழலும் கோணங்களில் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு திரைப்படத்துக்கு வலுச் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை கோத்திருக்கும் பிரேம்ஜி அமரன், சென்ற தலைமுறை துணுக்குகளைச் சிரத்தையாய் இட்டு அழகாக நிரப்பியிருக்கிறார்.
சதிலீலாவதியுடன் ஆறு வித்தியாசங்களை ஒப்பிடச் செய்வதுடன், ஓடிடி தள வெளியீட்டுக்கு இது போதும் என்பதாகத் துரித உணவு பரிமாறி இருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். ஆனபோதும் 2 மணி நேர ஆசுவாசம் தந்தற்காகவே ‘மலேஷியா டு அம்னீஷியா’ திரைப்படத்தை வரவேற்கலாம். வீடடங்கி தனித்திருப்பவர்களுக்கான பரிந்துரையில் இதுபோன்ற படங்களை சேர்ப்பது இப்போதைய தேவையாகிறது.