

தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் இடையிலான பெரிய சைஸ் பிரச்சினைகளே இன்னும் தீராதபோது, இரண்டு தரப்புக்கும் இடையிலான தலைப்புப் பஞ்சாயத்துகள் இப்போதைக்குத் தீராது. இதனால் ஒரேவிதமான தலைப்புகளைப் பதிவு செய்த பலர் கோலிவுட்டில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் இந்தச் சிக்கலில் மாட்ட விரும்பாத சிலர், வேறு யாரும் யோசிக்க முடியாத ‘தனித்துவம்’ மிக்க தலைப்புகளைத் தங்கள் படங்களுக்குச் சூட்டிவிட்டுக் கூலாக இருக்கிறார்கள். இப்படி வேறு யாரும் யோசிக்க முடியாத தலைப்புகளுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுக்கொடுத்தவர்கள் புதிய இயக்குநர்கள்தான்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்று பாலாஜி தரணிதரன் தனது படத்துக்குப் பெயர் வைக்க, அது தீயாகப் பற்றிக்கொண்டது கோலிவுட்டில். இந்தத் தலைப்பே படத்துக்கு எக்குத் தப்பான விளம்பரமும் கொடுத்துவிட்டதில், அதன்பிறகு அதிரடியாகப் போலி செய்ய முடியாத தலைப்புகளைச் சூட்ட ஆரம்பித்தார்கள். பொன்.ராமின் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தலைப்பு வைக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்பார்ப்பைக் கிளம்பியது.
‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ தலைப்பு சமுக இணையதளங்களில் நண்பர்களை நக்கலடித்துத் தள்ள வகையாகச் சிக்கியது. படமும் வைத்த தலைப்புக்கு வஞ்சகமில்லாத கதை, திரைக்கதை, நட்சத்திரப் பங்களிப்புடன் இருந்ததால் பாக்ஸ் ஆபீஸில் தப்பியது. ஆனால் ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. ‘இங்குக் காதல் கற்றுத் தரப்படும்’ என்று தனித்துவத் தலைப்புகளில் வந்த சில படங்கள், தலைப்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதால் பாக்ஸ் ஆபீஸில் வரிசையாகக் கவிழ்ந்தன. தலைப்புகளுக்கு இருந்த மோகம் முடிந்தது என்று முடிவு செய்த நேரத்தில் இல்லை என்று நிரூபித்தார் மற்றொரு புதிய இயக்குநரான எங்கேயும் எப்போதும் சரவணன். தனது இரண்டாவது படத்துக்கு ‘இவன் வேற மாதிரி’ என முரட்டுத்தனம் தெறிக்கும் ஒரு தலைப்பை வைத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சரவணன், நூறு சதவிகிதம் தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாகப் படத்தை இயக்கியிருந்ததில் மறுபடியும் தனித்துவத் தலைப்புகளுக்கான காய்ச்சல் கோலிவுட்டைத் தொற்றிக்கொண்டது.
புதிய இயக்குநர்கள் கையாளும் இந்தத் தலைப்பு உத்தியைத் தற்போது வெற்றிபெற்ற சீனியர் இயக்குநர்களும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதுதான் கோலிவுட்டின் ஆரோக்கிய ஆச்சர்யம்! அவர்களைப் பொறுத்தவரை தலைப்பை அறிவித்தவுடன் அது ரசிகர்களிடம் சட்டென்று ஆர்வத்தை உருவாக்கி விட வேண்டும். அதனால் ஈகோ பார்க்காமல் புதிய இயக்குநர்களை இந்த விஷயத்தில் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். சீனியர்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மூலம் இதைத் தொடங்கி வைத்தவர் சுந்தர்.சி. லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து கார்த்தி நடிக்க இருக்கும் படத்திற்கு ‘எண்ணி ஏழு நாள்’ என வில்லனுக்கு நாயகன் எச்சரிக்கை விடும் விதமாகத் தலைப்பு வைத்திருக்கிறார். தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பத்து எண்றதுக்குள்ள’ எனப் பயம் காட்டும் தலைப்பை வைத்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். இப்படியே தலைப்புகள் அமைந்தால், படம் வெளியாவதற்குள் ரசிகர்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்துவிடும் போலிருக்கிறது.