

ஒரு கனவு. ஒரு தனியிடத்தில் மாதக் கணக்கில் அடைந்து கிடக்கிறீர்கள். அந்த இடத்தின் வரலாறு வன்முறையின் வடுக்கள் நிறைந்தது. அப்போது உங்கள் மனதில் அகோரச் சித்திரங்களின் வண்ணங்கள் உயிர்பெறுகின்றன. அந்த அதிபயங்கரக் கனவு உங்கள் உறக்கத்தைக் காணாமல் அடித்துவிடும். அந்த நேரத்தில் நம் மனம் உணரும் அச்சத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அமானுஷ்யம் குறித்த கற்பனை உலகில் சஞ்சரிக்கும் கலைஞர்கள் சிலர் இதே உணர்வின் அடிப்படையில் அமைந்த பல படைப்புகளை நமக்குத் தந்திருக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் ‘தி ஷைனிங்' (The Shining- 1980)
திகிலூட்டும் பேய், நீண்டகாலத் தனிமையால் ஏற்படும் ‘கேபின் ஃபீவர்' என்ற பாதிப்பு ஆகிய அசாதாரண விஷயங்களின் அடிப்படையில் புனையப்பட்ட உளவியல் ரீதியான மர்மக்கதைதான் ‘தி ஷைனிங்'. புகழ்பெற்ற மர்மக்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, உலகின் மிகச்சிறந்த இயக்குநர் களில் ஒருவரான ஸ்டான்லி குப்ரிக் உருவாக்கிய படம் இது.
எழுத்தாளராகப் புகழ்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற ஜா டோரன்ஸ், அவரது மனைவி மற்றும் மகன் இவர்கள்தான் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். நாவல் எழுதத் தனிமையான இடம் வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜா டோரன்ஸுக்கு ஒரு அருமையான வாய்ப்பு அமைகிறது. சுற்றிலும் ஆள் நடமாட்டமற்ற ஒரு தனிமைப் பிராந்தியத்தில் அமைந்த ஹோட்டல் அது. குளிர்காலம் முழுதும் பனியால் போர்த்தப்படும் பிரதேசம் என்பதால், ஆறு மாதங்களுக்கு அந்த ஹோட்டல் மூடப்பட்டிருக்கும். அதுவரை பிரம்மாண்டமான அந்தக் கட்டிடத்திலேயே தங்கி, பராமரிப்புப் பணியில் ஈடுபடவேண்டும். இதுதான் நிபந்தனை. அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்னர், அங்கே நிகழ்ந்த துர்சம்பவம் பற்றியும் அதன் விளைவாக ஹோட்டலில் நிலவும் அமானுஷ்யச் சூழல் பற்றியும் ஹோட்டல் நிர்வாகி வெளிப்படையாகத் தெரிவித்துவிடுகிறார். இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஜா டோரன்ஸ் இரட்டை சந்தோஷத்துடன் சம்மதிக்கிறான். பணியில் அவன் சேரும் நாளில் ஹோட்டலில் பணிபுரியும் அனைவரும் விடைபெற்றுச் செல்கின்றனர். சுற்றிலும் வெள்ளை பனி மலைகள் சூழ்ந்த அந்த ஹோட்டலில் டோர்ரன்ஸ் குடும்பம் மட்டும் தங்குகிறது.
உயிருள்ள ராட்சச விலங்கு துயில்வது போன்ற பிரம்மாண்டத்துடன் மெளனித்திருக்கும் ஹோட்டலில், ஒவ்வொன்றாக அமானுஷ்யச் சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஜாக்கின் மகன் டேனியின் கண்களுக்கு விசித்திரமான இரண்டு சிறுமிகள் தென்படுகின்றனர். தங்களுடன் விளையாட வருமாறு அவனை அழைக்கின்றனர். இதற்கிடையே நீண்டகாலத் தனிமையால் ஜாக்கின் மனநிலை மெல்ல மெல்ல பாதிக்கப்படுகிறது. தன் கண்களுக்குத் தென்படும் விசித்திர நபர்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். வெளியில் பனிப்புயல் முற்றிக்கொண்டே வரும் நேரத்தில் அந்த ஹோட்டலின் அமானுஷ்யம் சில்லிட வைக்கும் திகிலின் உச்சத்தை அடைகிறது. அங்கிருந்து உயிர் தப்பியது யார் என்பதை நிதானமான அதேசமயம் வசியப்படுத்தும் திரைக்கதை மூலம் விவரிக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.
பேட்மேன் படத்தில் ஜோக்கர் பாத்திரத்தில் உலகமெங்கும் புகழ்பெற்ற ஜா நிக்கல்ஸன், புகழ்பெற்ற கார்ட்டூன் கதையான ‘பாப்-ஐத் தி செய்லர்' படத்தின் திரைவடிவத்தில் ‘ஆலிவ் ஆயி'லாக நடித்த ஷெல்லி போன்ற முக்கிய நடிகர்கள் தங்கள் மிகச் சிறந்த பங்களிப்பால் படத்தின் உயிரோட்டத்துக்கு உதவியிருக்கின்றனர். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி, இழைத்து உருக்கி உருவாக்கியிருப்பார் ஸ்டான்லி குப்ரிக். படத்தில், ஜாக்கை அவன் மனைவி பேஸ்பால் மட்டையால் அடிக்கும் காட்சி 127 முறை படமாக்கப்பட்டது. உலகில் அதிக முறை படமாக்கப்பட்ட காட்சி என்ற சாதனையும் படைத்தது. படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கவே கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டாராம் குப்ரிக். அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும்.
ஜாக்கின் மனநிலை மாற மாற அவன் தன் மனைவியிடம் பேசும் விதம், தன் வயிற்றுக்குள் ஒரு கற்பனை நண்பன் வாழ்கிறான் என்று நம்பும் டேனியின் அதீத உள்ளுணர்வு என்று படம் முழுக்க விரவிக்கிடக்கும் அசாதாரண விஷயங்கள் ஏராளம். படத்தின் தொடக்கக் காட்சியில் டேனியிடம் ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞர் உரையாடும் காட்சி, வெறும் வசனங்கள் மூலமே உங்களைச் சில்லிட வைக்கும். “சில கட்டிடங்கள் மனிதர்கள் போன்றவை. அவை நம்முடன் உரையாடும். ஆனால், அதைப் புரிந்துகொள்ள ஒரு அதியற்புத உள்ளுணர்வு வேண்டும். அதன் பெயர் ‘ஷைனிங்'. என் பாட்டியும் நானும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசாமல் நாள் முழுதும் உரையாடுவோம்” என்பார். உண்மையில் இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் படம் தன் ரகசிய மொழியில் உரையாடத் தொடங்கும். அதனால்தான், உலகின் மிகச்சிறந்த திகில் படங்களின் வரிசையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது இப்படம்.