

ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியின் தயாரிப்பான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடருக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உண்டு. ஆனால், பட்டவர்த்தமான பாலியல், வன்முறைக் காட்சிகளால் அத்தொடர் அனைத்து வயதினரும் காண ஏற்றது அல்ல. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பாணியில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய ஃபேன்டஸி வலைத்தொடரான ‘ஷேடோ அண்ட் போன்’(Shadow and Bone) அந்தக் குறையைப் போக்கி இருக்கிறது.
ரஷ்யப் பின்னணியில், கற்பனை தேசமான ராவ்காவில் கதை தொடங்குகிறது. தலைநகரை உள்ளடக்கிய கிழக்குப் பகுதி, இதர பிராந்தியங்கள் அடங்கிய மேற்குப் பகுதி என, அந்தத் தேசம் அச்சுறுத்தல் மிகுந்த மடிப்பு அரண் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கடக்க முயன்றவர்களில் பலரும் அங்குப் பதுங்கியிருக்கும் வோல்க்ரா என்கிற ராட்சத மாமிசப் பட்சிணிகளுக்கு இரையாகிப் போகிறார்கள். வோல்க்ரா தாக்குதலில் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகள் மேற்கில் அதிகம். அப்படியொரு காப்பகத்தில் வளரும் அலினா என்கிற சிறுமியும் மால் என்கிற சிறுவனும் பால்யம் முதலே பாசத்தில் பிணைந்திருக்கிறார்கள். வளர்ந்து ராணுவத்தில் சேரும், அந்த இருள் மடிப்பைக் கடக்கும் சாகசக் குழுவில் இடம்பிடிக்கிறான். அவனைப் பிரிய மனமில்லாத அலினா தகிடுதத்தம் செய்து அக்குழுவில் ஒட்டிக்கொள்கிறாள்.
இருள் மடிப்பைக் கடக்கையில் வோல்க்ரா அவர்களைத் தாக்குகிறது. அப்படி அலினா தாக்குதலுக்கு ஆளாகும்போது, அதுவரை அவளே தன்னைப் பற்றிஅறிந்திராத அந்த ரகசியம் வெளிப்படுகிறது. ஆம்! வோல்க்ரா தாக்கும் அந்த இருள் மடிப்பில், சூரிய ஒளியை ஆற்றலாய் வெளிப்படுத்தும் அவளுடைய விஷேச சக்தி புலப்படுகிறது. அது அவளை நாட்டின் தளபதி கிரிகன் வசம் சேர்ப்பதுடன், அவளது சிநேகிதன் மாலிடமிருந்து பிரிக்கவும் செய்கிறது. தளபதி கிரிகன் அலினாவின் ஆற்றலை அரசனிடம் விளக்கி அவளை அரண்மனையில் தங்கச் செய்கிறான். அலினாவின் ஆற்றலை நாட்டின் பாதுகாப்புக்கான ராணுவ உத்தியாக்கும் பயிற்சிகளும் அங்கே அளிக்கப்படுகின்றன.
மறுபக்கம் அலினாவைத் தேடி மால் அலைகிறான். கிரிகனின் சாதுர்யத்தால் அலினாவின் மனம், மால் வசமிருந்து தளபதியிடம் தாவுகிறது. இதற்கிடையே அலினாவைக் கடத்தும் நோக்கத்துடன் கூலிப்படை குழு ஒரு பக்கமும், தன் நண்பர்களுடன் இணைந்து மால் மறுபக்கமுமாக அரண்மனைக்குள் நுழைகிறார்கள். 8 அத்தியாயங்கள் கொண்ட ‘ஷேடோ அண்ட் போன்’வலைத்தொடரின் முதல் 4 அத்தியாயங்கள், இப்படி ஏராளமான கதாபாத்திரங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை புலப்படச் செய்ய திரைக்கதையின் கிளைக் கதைகளில் கடந்துவிடுகின்றன. இந்தக் குறையை ஈடுசெய்யும் வகையில் ஏனைய 4 அத்தியாயங்கள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
மாயமான் வேட்டை, இருள் மடிப்பினூடே சாகசப் பயணம், தப்பித்தோடும் அலினாவுக்கான அபயம் எனப் பல திருப்பங்களுடன், அதுவரை பொத்தி வைத்திருந்த ரகசியங்களும் ஒவ்வொன்றாக விடுபடுகின்றன. ‘கேம் ஆஃப் த்ரோன்’ தொடருக்குக் குறைவில்லாத சி.ஜி.ஐ. காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. மிகச் சில காட்சிகள் தவிர்த்து, வளர்ந்த குழந்தைகளும் ரசிக்கும் வகையில் இந்த வலைத்தொடர் உள்ளது. சராசரியாகத் தலா 50 நிமிடங்கள் வரை நீளும் அத்தியாயங்களுடன், வியப்பூட்டும் மாயாஜாலங்களும், மெல்லிய காதலுமாக ஃபேன்டஸி ரசிகர்களை இத்தொடர் நிச்சயமாக வசீகரிக்கும்.
‘க்ரிஷா’ முத்தொகுப்புக் கதைகளைத் தழுவி எரிக்ஹெய்சரர் உருவாக்கிய திரைக்கதையில், ஜெஸ்ஸி லி, ஆர்ச்சி ரெனாக்ஸ், பென் பார்னஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆசிய நிலப்பரப்பில் நடக்கும் கதை என்பதால் ஒரு சில இந்திய முகங்களையும் பார்க்க முடிகிறது.