

ஜி.வி.பிரகாஷ் நடித்து யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள படம் ‘அடங்காதே’. கரோனா இரண்டாம் அலை முடிந்தபிறகு திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. அந்தப் படத்தை இயக்கிய சண்முகம் முத்துசுவாமி, தன்னுடைய இரண்டாவது படத்தைத் தொடங்கிவிட்டார். விருமாண்டி இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது 'க/பெ ரணசிங்கம்'. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர்தான் சண்முகம் முத்துசுவாமி. அதில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் சண்முகம் முத்துசுவாமியின் பெண் மையக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கரோனா அச்சுறுத்தல் சற்று தணிந்ததும் படப்பிடிப்பை தொடங்க முடிவுசெய்திருக்கிறார்கள்.
வலிமையும் வானதியும்
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்டு வெற்றிபெற்றிருப்பவர் வானதி சீனிவாசன். அவர் தற்போது அஜித் ரசிகர்களின் அன்புத் தொல்லையில் வசமாக சிக்கியிருக்கிறார். தேர்தலுக்கு முன் ‘நான் வெற்றிபெற்ற உடன் வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என்று அஜித் ரசிகர்களைக் கவரும் விதமாக ட்வீட் செய்திருந்தார். கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை ரணகளத்துக்கு மத்தியிலும் அவரது ட்விட்டர் பக்கத்துக்கு சென்று, ‘வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள்..! 'வலிமை' பட அப்டேட் பெற்றுக்கொடுங்கள்..’ என நினைவூட்டி வருகின்றனர்.
கொலை செய்யுமா பேனா?
வாள் முனையைவிட பேனாவின் முனை வலிமையானது என்கிற கருத்தாக்கத்தை அப்படியே உல்டாவாக மாற்றி, ‘பேனா கதை எழுதும்.. கதையையும் முடிக்கும்’ என்கிற கதைக் கருவுடன் தயாராகி, அமேசான் பிரைமில் வரும் மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது ‘நவம்பர் ஸ்டோரி’ இணையத் தொடர். தமன்னா முதன்முதலாக நடித்திருக்கும் தமிழ் இணையத் தொடர். தமன்னா மகளாகவும் அவருடைய அப்பாவாக இயக்குநர், நடிகர் ஜி.எம்.குமாரும் நடித்திருக்கும் இத்தொடர் ஒரு கொலை மீதான புலன் விசாரணையை விரித்துச் சொல்லவிருக்கிறதாம். ராம் சுப்ரமண்யன் இயக்கியிருக்கிறார்.