

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது, அடுத்தடுத்து பல மக்கள் கலைஞர்களை பறித்துச் செல்வது ஜீரணித்துக்கொள்ள முடியாத கொடுமை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, செல்லையா, பாடகரும் நடிகருமான டி.கே.எஸ்.நடராஜன் ஆகியோர் சட்டென்று மறைந்துவிட்டனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவரான பாண்டு (74) கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 6 அன்று மரணமடைந்திருக்கிறார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய ‘மாணவன்’ (1974) என்கிற திரைப்படத்தில் மாணவர்களில் ஒருவாகத் தலைகாட்டினார். எழுத்தாளர் சுஜாதாவின் பிரபலமான நாவலை அடிப்படையாகக்கொண்டு அதே தலைப்பில் திரைப்படமாக்கப்பட்ட ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ (1981) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். 1990-களில் ‘பணக்காரன்’, ‘நடிகன்’, ‘சின்னத்தம்பி’, ‘ரிக்ஷா மாமா’, ‘இது நம்ம பூமி’, ‘திருமதி பழனிச்சாமி’, ’முத்து’ என முதல்நிலை நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களில் நகைச்சுவை கலந்த சின்னச்சின்ன துணைக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
1996-ல் அகத்தியன் இயக்கத்தில் வெளியாகி மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘காதல் கோட்டை’ படத்தில் ராஜஸ்தானில் வசிக்கும் தமிழராக நடித்திருந்தார். ராஜஸ்தானுக்குப் பணியாற்றச் செல்லும் நாயகன் அஜித்துக்கு அடைக்கலம் கொடுப்பவராக நகைச்சுவை மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னைப் பிரதிபலித்திருப்பார். அஜித் ராஜஸ்தானை விட்டு பணிமாற்றலாகி சென்னைக்குத் திரும்பும்போது ‘ஒரு பெண்ணைப் பார்க்காமல் காதலிப்பது நல்லதல்ல..’ என்று அக்கறையுடன் அறிவுரை கூறும் காட்சி குறிப்பிடத்தக்கது. அதேபோல் சுந்தர்.சியின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் செந்திலுடன் இணைந்து எதிர்மறைத்தன்மை நிரம்பிய நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருப்பார்.
பாண்டுவின் நடிப்புப் பயணம் புத்தாயிரத்திலும் தடையின்றித் தொடர்ந்தது. ‘ஏழையின் சிரிப்பில்’, ’அழகி’, ‘தில்’, ‘கில்லி’, ‘வரலாறு’, ‘சிங்கம்’ என பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் பட்டாளத்தில் தவிர்க்க முடியாத அங்கத்தினரானார். 90-களில் கவுண்டமணியோடும், புத்தாயிரத்தில் விவேக்குடனும் அவர் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள், தலைமுறைகள் கடந்து ரசிகர்களை மனம்விட்டுச் சிரிக்கவைப்பவை. முகபாவம், உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார் பாண்டு.
பாண்டுவுக்கு திரைத்துறையைத் தாண்டிய முகம் ஒன்று உள்ளது. சென்னை, எழும்பூரிலுள்ள அரசு ஓவியக் கல்லூரியில் படித்தவர். எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது அந்தக் கட்சியின் கொடியையும் சின்னத்தையும் வரைந்தவர். தமிழக அரசின் சுற்றுலாத் துறை முத்திரையை வடிவமைத்தவர் பாண்டுதான். கேப்பிடல் லெட்டர்ஸ் என்னும் பெயர் பலகைகள் எழுதும் நிறுவனத்தை தன் மகன்களுடன் சேர்ந்து வெற்றிகரமாக நடத்திவந்த பன்முகத்திறன்கொண்ட கலைஞர்.
இன்னொரு சொக்கலிங்க பாகவதர்
‘சிவாஜி’ திரைப்படத்தில் முதல் காட்சியில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரஜினியிடம், இன்னொரு சிறையறையில் இருந்தபடி ‘எதனால் சிறைக்கு வந்தீங்க தம்பி?’ என்று கேட்கும் காட்சியே செல்லதுரையின் (86) முகத்தை ரசிகர்கள் மனங்களில் பதிய வைத்தது. ‘சிவாஜி’ படத்தின் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மறைந்த அதே நாளில் (ஏப்ரல் 30) செல்லதுரையும் மறைந்திருப்பது இயற்கையின் முரண்களில் ஒன்று. அரசுப் பணியில் இருந்தபடி மேடை நாடகங்களில் நடித்துவந்த செல்லதுரை, 2005-ல் ‘அந்நியன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானபோதே எழுபது வயதை நெருங்கிவிட்டிருந்தார். ‘தெறி’ படத்தில் மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் புகாரளிக்க வரும் அப்பாவித் தந்தையாக மகள் என்னவானாளோ என்கிற பதற்றத்தைக் கண்களால் வெளிப்படுத்தியிருப்பார். ’மனிதன்’, ‘மாரி’, ‘அறம்’, ‘நட்பே துணை’, போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிக்கும் நடிப்பைத் தந்திருப்பார். வெகு சில படங்களில் இப்படி முத்திரை பதித்த செல்லதுரையை இயற்கை பறித்துக்கொண்டுவிட்டது.
நடிப்பிலும் அசத்திய நாட்டுப்புறப் பாடகர்
ராமராஜன் இயக்கிய ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ திரைப்படத்தில், நாட்டு வைத்தியராக வரும் கவுண்டமணியிடம் ஆரோக்கியமாக நூறு வயசு வாழ வழி கேட்டு அவரைக் கடுப்பேற்றும் பிரபலமான நகைச்சுவைக் காட்சியில் தோன்றியதன் மூலம் 90’ஸ் கிட்ஸுக்கும் 2கே கிட்ஸுக்கும் அறிமுகமானவரான டி.கே.எஸ்.நடராஜன், மே 5 அன்று காலமானார். அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ திரைப்படத்தில் ‘என்னாடி முனியம்மா..?’ பாடலை திரையில் தோன்றி பாடியவரும் அவரே. ஆனால் அது ஒரு ரீமிக்ஸ் பாடல் என்பதும் 1984-ல் ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ திரைப்படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் வெற்றிபெற்ற அந்தப் பாடலின் மூல வடிவத்தைப் பாடியவரும் டி.கே.எஸ். நடராஜன்தான். அந்தப் பாடல் மூலமாகவே நடராஜன் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
டி.கே.எஸ் நாடகக் குழுவின் உறுப்பினராக இருந்து ஏராளமான நாடங்களில் நடித்தவர் என்பதால்தான் நடராஜனுக்கு டி.கே.எஸ் என்கிற முன்னொட்டு வந்தது. அவர் அபாரமான நாட்டுப்புறப் பாடகரும்கூட. அவர் பாடிய தனிப் பாடல்களும் திரைப்படப் பாடல்களும் கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரத்து ரசிகர்களையும் ஆட்டம்போட வைத்தன. 1954-ல் வெளியான ‘ரத்த பாசம்’ தொடங்கி 500-க்கு மேற்பட்ட படங்களில் சிறிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
திறமையும் நெடிய அனுபவமும் மிக்க துணை நடிகர்கள் மூவர் ஒரே வாரத்தில் நம்மைவிட்டு நீங்கியிருக்கிறார்கள். வாழும்போதே துணை நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதற்கு தமிழ்த் திரையுலகம் போதுமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்பதையே அவர்களின் மரணங்கள்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன. இந்த அவல நிலை இனியாவது மாறவேண்டும்.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in