கதாசிரியர்களின் காதலன்! - அஞ்சலி: கே.வி.ஆனந்த்

கதாசிரியர்களின் காதலன்! - அஞ்சலி: கே.வி.ஆனந்த்
Updated on
4 min read

எழுத்தாளர்கள் இணையான சுபாவிடம் (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) அவர்களுடைய வாசகர்கள் பலமுறை கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுண்டு. ‘நீங்கள் எப்படி சார் இத்தனை வருடம் சேர்ந்தே நட்போட இருக்கீங்க..?’. இதற்கு புன்முறுவலுடன் அவர்கள் அளித்த பதில், “இரு நண்பர்கள் நட்புடன் தொடர முடியாது என்றால்தானே ஏதாவது வலிந்து செய்ய வேண்டும்?

நட்புடன் இருக்க புதிதாய் என்ன செய்ய வேண்டும்? சமமான இருவர் என்கிற உணர்தலுடன், நானே முதன்மையானவன் என்று திமிர் காட்டாமல் இருப்பதுதானே உண்மையான நட்பு? அந்தப் புரிதலுடன் இருந்தால் நட்பு ஏன் சிதையப் போகிறது?”. ஈகோவுக்கு இடமில்லாத இந்த இருவர் கூட்டணியை மூவர் கூட்டணியாக ஆக்கியவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி.ஆனந்த். கடந்த வாரம் அவர் சட்டென மறைந்தபோது திரையுலகமே துடித்துப்போனது. ஆனால், அவருடைய மனைவி, தாய், பிள்ளைகளைப் போல அதிகமாய்த் துடித்தவர்கள் எழுத்தாளர்கள் சுபா. கே.வி.ஆனந்த் உடனான நினைவுகளைப் பகிரக் கேட்டதும் விம்மும் மனத்தோடு, உடைந்த குரலோடு பேசத் தொடங்கினார்கள் சுபா.

‘கல்கி’யில் இணைந்தோம்

“கல்கி வாரப் பத்திரிகையின் மாவட்டச் சிறப்பிதழ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த தருணம் அது. எழுத்தாளர்களாகிய எங்களை அழைத்துப் பத்திரிகையாளர்களுக்குரிய பணியைக் கொடுத்தார் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அந்த அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதும்படி கேட்டுக்கொண்டார். அப்போது கல்கி ஆசிரியரால் ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக எங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் கே.வி. ஆனந்த்.

கேமராவைத் தன்னுடைய மூன்றாவது கண்ணாகப் பாவித்தவர். அப்படித் தொடங்கிய தொடர்பு, பின்னாளில் மிக நெருங்கிய நட்பாக மாறியது. எங்களுடைய நாவல்களைத் தாங்கி, ‘சூப்பர் நாவல்’ பத்திரிகை தொடங்கப்பட்டது. அப்போது, அதனுடைய அட்டைப் படங்களை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்கிற முடிவுடன் கே.வி. ஆனந்தை அணுகினோம். மிக ஆர்வமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒரு ஸ்டில் கேமிரா, இரண்டு ஃப்ளாஷ்கள் இருந்தால் போதும், ஆனந்த் என்னென்னவோ வித்தைகள் செய்து காட்டிவிடுவார். அவருடைய ஒளி வித்தைகளை சூப்பர் நாவலின் வித்தியாசமான அட்டைகளாகப் பார்த்த வாசகர்கள், ‘யார் இந்த கே.வி.ஆனந்த்?’ என்று கேட்கத் தொடங்கினார்கள். கல்கி, சூப்பர் நாவல் என்பதுடன் நிற்காமல் பல முன்னணிப் பத்திரிகைகளுக்கு போட்டோ ஜர்னலிஸ்டாகப் பணிபுரிந்து தன்னுடைய ஒளிப்படங்கள் வழியாக இருப்பைக் காட்டினார்.

கனா கண்டேன்
கனா கண்டேன்

அகில இந்தியக் கலைஞர்

வெகு விரைவிலேயே அவர் ஒளிப்பதிவாளர் பி.சி. ராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்குநர் ப்ரியதர்ஷன், தன்னுடைய மலையாளப் படத்துக்காக பி.சி. ராமை அணுகினார். அப்போது, அவர் தன்னுடைய சீடர் கே.வி. ஆனந்தை அவருக்குக் கைகாட்டிவிட்டார். ‘தேன்மாவின் கொம்பத்து’ என்கிற அந்த முதல் திரைப்படத்திலேயே கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்று, தன் பெயரையும், தன் குருவின் பெயரையும் அகில இந்தியாவிலும் நிலைநாட்டினார்.

மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என்று பல்வேறு திரையுலகங்களிலும் அவர் வெவ்வேறு இயக்குநர்களிடம் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து, ஓர் அகில இந்திய ஒளிப்பதிவாளராகத் தன் எல்லைகளை விரித்துப் பல சாதனைகள் புரிந்தார். ஒரு கட்டத்தில், தானே ஒரு படம் இயக்கினால் என்ன, என்கிற ஆர்வம் ஏற்பட்டபோது, அவர் முதலில் அணுகியது எங்களைத்தான். ஒரு முக்கோணக் காதல் கதையை முதலில் விவாதித்தோம். ஆனால், எங்களுடைய ‘புதைத்தாலும் வருவேன்’ என்கிற இன்னொரு கதையைப் படித்ததும் அதை முதல் படமாகச் செய்தால் நன்றாயிருக்கும் என்று அவர் திடீரென முடிவெடுத்தார். “இதுல காதல், மோதல், துரோகம் எல்லாம் இருக்கு. ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு இந்தக் கதை இன்னும் பொருத்தமா இருக்கும்..” என்றார். அப்படித்தான் ‘கனா கண்டேன்’ திரைப்படத்துக்கு விதை விழுந்தது.

கே.வி.ஆனந்தின் முதல் கனவு

‘கனா கண்டேன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம், வழக்கமான அரிவாள் அடாவடித்தனங்களைச் செய்யாமல், தன்னுடைய புத்திசாலித்தனம்,, சாதுர்யம் ஆகியவற்றின் மூலம், அடுத்தவனின் பலவீனம் என்ன என்று தெரிந்து அடிக்கும் சாமர்த்தியம் கொண்டது. நாயகனைவிட வில்லன் வேடம் வீர்யத்துடன் இருந்தது. கதாநாயகனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வில்லன் என்கிற வித்தியாசமே ஆனந்தை வசீகரித்தது. கண்ணியத்தை வெளிப்படையாக விட்டுக்கொடுக்காமலேயே, சமூகத்தில் ஒரு நல்ல இமேஜைப் பராமரித்தபடியே பலர் அப்படித்தான் வலம் வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

ஒரு நாவல் திரைக்கதையாக மாறும்போது, மையக் கருவை விட்டுக்கொடுக்காமல் சினிமாவுக்கேற்ற சம்பவங்கள் சேர்த்து இன்னும் பல கோணங்களும் அலசப்படும். அந்த கோணங்களையும் தர்க்கங்களையும் தன்னுடைய படங்களில் தவிர்த்துவிடவே கூடாது என எண்ணிச் செயல்பட்ட ஆனந்த் ஓர் அற்புதமான படிப்பாளி. புனைகதைகள், அபுனைவு நூல்கள் என்று எல்லாவற்றையும் வாசிப்பார். எல்லாவிதமான எழுத்துகளுக்கும் மிக நல்ல ரசிகர். அவர் ஒரு நல்ல எழுத்தாளரும்தான். கதை விவாதத்தில் அவருடைய பங்கு, திரைக்கதையை வெகுவாக மேம்படுத்திவிடும்.

தன்னுடைய அறிமுகப் படத்தை மட்டுமல்ல, எந்தப் படத்தையுமே ஏனோதானோவென அவசர அடியாகக் கொடுக்க அவர் நினைத்ததே இல்லை. ‘கனா கண்டேன்’ வில்லன் கதாபாத்திரத்துக்கு மாதவன், சூர்யா என்று முயற்சிகள் செய்துபார்த்தோம். அவர்கள் தயங்கினார்கள். அடுத்து அணுகப்பட்டவர் மலையாள நடிகரான பிருத்விராஜ். மலையாள தேசத்தில் கே.வி. ஆனந்தின் பெயர், மிகப் பிரபலம் என்பதால், பிருத்விராஜ் உடனடியாகக் கதையைக் கேட்டார். நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டார். ஒரு இயக்குநராக கே.வி.ஆனந்துடைய முதல் கனவாக வெளிவந்த ‘கனா கண்டேன்’, அவர் எத்தனை ரசனையான இயக்குநர் என்பதை ரசிகர்களுக்கு அறிவித்தது. கே.வி.ஆனந்துக்கெனத் தனித்த ஆர்வலர்களை, ரசிகர்களை முதல் படமே உருவாக்கிவிட்டது. அதன் பின்னர் அவர் ஆளுமை கூடிய இயக்குநராக உயர்ந்ததைத் திரையுலகம் அவருடைய ஒவ்வொரு படத்திலும் கண்டுகொண்டது.

சுரேஷ் - பாலகிருஷ்ணனுடன் கே.வி.ஆனந்த்
சுரேஷ் - பாலகிருஷ்ணனுடன் கே.வி.ஆனந்த்

கதாசிரியர்களுக்குக் கவுரவம்

ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்பங்களை ஒரு திரைப்படத்தில் துலங்கச் செய்வதற்கான அடிப்படையான தொழில்நுட்மாக இருப்பவை கதையும் திரைக்கதையும் என நம்பியவர் கே.வி.ஆனந்த்.

‘தமிழ் சினிமாவுல நல்ல எழுத்தாளர்களைப் பெரும்பாலான டைரக்டர்கள் வசனகர்த்தாவா மட்டுமே பயன்படுத்தறாங்க. ஓர் எழுத்தாளனுக்குத்தான் கதையை ஒழுங்காக் கொண்டுபோற விதம் தெரியும். திரைக்கதையை அமைக்கறதுலப் பயன்படுத்திக்கிட்டாலும் எழுத்தாளனுக்கு முழுசா க்ரெடிட் குடுக்கறதுக்கு டைரக்டர்ஸ் ஏன் தயங்கறாங்கனு தெரியல...’ என்று கே.வி. ஆனந்த் எப்போதும் ஆதங்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்.

அது மட்டுமல்ல; தன்னுடைய படத்தில் அவர் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த மகா நேர்மையாளர். ‘கனா கண்டேன்’ திரைப்படத்தில்தான் ‘கதை, திரைக்கதை’ என்கிற க்ரெடிட்களும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. அது மட்டுமல்ல, ‘கனாக் கண்டேன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகளில் தன்னுடன் எங்களையும் சமமாக அமர்த்திக்கொண்டு எங்களுக்குப் பெரும் மரியாதை தந்தார். எழுத்தாளனுக்கு, தமிழ்த் திரைத்துறையில் மீண்டும் மதிப்பு வரக் காரணமாயிருந்தவர் கே.வி. ஆனந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எந்நாளிலும் எங்களால் மறக்க முடியாது.

கே.வி. ஆனந்துடன் அடுத்தடுத்து, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என்று வித்தியாசமான கதைக் களங்களை எடுத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களைக் கொடுக்க எங்களுக்கு நல் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தவர். குறிப்பாக, ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதாபாத்திரங்களில் ஒரே நடிகரைப் பயன்படுத்தி உலகிலேயே முதல் முறையாக ‘மாற்றான்’ திரைப்படத்தில் முயற்சித்து வெற்றிபெற்றார். தொழில்நுட்ப ரீதியில் மாபெரும் சாதனைகள் படைக்க விரும்பிய கே.வி.ஆனந்த், இன்னும் பெரிய கனவுகளை மனதில் தேக்கி வைத்திருந்த ஆளுமை” சுபா சொல்லி முடிக்கும்போது அவர்களுடைய தனிந்த குரலில் ஒரு ஏக்கம் பரவிக் கிடந்தது.

தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in