

ஹாலிவுட்டின் நாடகக் களமான பிராட்வே, உலகப் புகழ்பெற்ற காவியங்களை ஆங்கில நாடகங்களாக அரங்கேற்றியிருக்கிறது. மகாகவி ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தைத் தழுவி, காலந்தோறும் சில பல மாற்றங்களுடன் இசை நாடகங்கள் அங்கே அரங்கேறி பல்லாயிரம் காட்சிகள் நிகழ்ந்துள்ளன.
அவற்றில் பல திரைப்படமாகவும் ஆகியிருக்கின்றன. ஏற்கெனவே 1961-ம் ஆண்டு இசை, நடனத் திரைப்படமாக வெளியாகி இன்றைக்கும் பேசப்படும் படமாக இருக்கிறது. ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’. அந்தப் படத்தை, அறிவியல், மிகை புனைவுப் படங்களின் மன்னன் என்று புகழப்படும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், முந்தைய திரைக்கதையின் அதே கால காலகட்டத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பாணியில் மறுஆக்கம் செய்திருக்கிறார். ஸ்பீல்பெர்க்கின் மாறுப்பட்ட இந்த முயற்சியை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், 93-வது ஆஸ்கர் விருதுவிழாவில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு தற்போது வைரல் ஆகியிருக்கிறது.
தாராள மனம்!
‘2.0’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பக்ஷி ராஜனாக அறிமுகமாகிவிட்ட அக்ஷய் குமார், பறவைகளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் நேயர் என்பதை கடந்த ஆண்டு தன்னுடைய நன்கொடை வழியாக எடுத்துக்காட்டினார். கரோனா பெருதொற்றின் முதல் அலையில் எளிய மக்களுக்கு உதவும் நோக்குடன் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 25 கோடியை வழங்கினார்.
மேலும் மும்பை மாநகராட்சி, மும்பை காவல்துறைக்கும் நன்கொடை அளித்தார். தற்போதைய இரண்டாம் அலையில் 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அளித்திருக்கும் அவர், தேவைப்படும் மக்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்கும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.