

அடிக்கடி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஒரு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்துக்காகப் போராடும் உள்ளூர், வெளியூர் மக்களின் முயற்சிதான் நகைச்சுவை முயற்சியான 144.
பக்கத்து கிராமத்துடன் சண்டையிடு வதால் வருடத்தில் பல நாட்களை ஊரடங்கு உத்தரவிலேயே கழிக்கிறது எரிமலைக் குண்டு கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ராயப்பன், அவரிடம் டிரைவராக வேலை செய்யும் மதன், அவன் காதலிக்கும் ராயப்பனின் மகள் திவ்யா ஒரு பக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த தேசு, எந்தப் பூட்டாக இருந்தாலும் திருடும் பலே திருடன். அவனும் அவனுடைய காதலி பாலியல் தொழிலாளி கல்யாணியும் ஒரு பக்கம்.
இவர்களுக்கு நடுவில் தனது எதிரி களை வித்தியாசமாகத் துன்புறுத்தும் ‘ஃபீலிங்க்ஸ்’ ரவி. ராயப்பனின் தங்கப் பதுக்கலைத் தற்செயலாகத் தெரிந்து கொண்டுவிடும் வாய் பேச முடியாத ஒருவர். இவர்கள் அனைவரும் ஒரு தங்கக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்க, கடைசியில் அது யாருக்குக் கிடைத்தது என்பதே ‘144'.
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலையை ஒட்டி இரு கிராமங்களுக்கிடையே பிரச் சினையுடன் ஆரம்பிக்கும் கதை தங்கக் கடத்தலை நோக்கி நகர்கிறது. படத்தில் எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு எல்லாமே பகடி செய்யப்படுகின்றன. வழக்கத்தில் இருந்து மாறுபட்ட நகைச்சுவைப் படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைக்கதை அமைத்து, வழக்கத்துக்கு மாறான பாத்திரங்கள் மூலம் படத்தைப் புதியதொரு பாதையில் நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
பாலியல் தொழிலாளி பாத்திரத்தை விரசமோ, கழிவிரக்கமோ இல்லாமல் சித்தரித்த விதத்தில் இயக்குநர் மணிகண்டன் தனித்துத் தெரிகிறார். திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களை நடைமுறை வாழ்க்கையில் சந்தர்ப்பத்துக்கேற்ப மனி தர்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்த உத்தியை அப்படியே திரைக் கதா பாத்திரங்களுக்குப் பயன்படுத்தி யிருக்கிறார் மணிகண்டன். அம்முயற்சி யில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார்.
கண்ணாடியில் விநாயகர் சிலை, 144 உத்தரவை கிராமத்தினர் எதிர்கொள்ளும் விதம், பெண்கள் தலைவிரி கோலமாக நடமாடும் ரகசியம், கள்ளச் சாராய விற்பனை, தங்கத்தைப் பதுக்கிவைக்கும் விதம் என ‘அட’ போட்டு சிரிக்கவைக்கும் சமாச்சாரங்கள் பல படத்தில் உள்ளன. குருதேவின் ஒளிப்பதிவு, ஷான் ரால்டனின் பின்னணி இசை, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு ஆகியவையும் படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கின்றன.
திருடன் தேசுவாக வரும் மிர்ச்சி சிவா, தனது வழக்கமான நடிப்பைத்(!) தந்துள்ளார். பல இடங்களில் தனது நடிப்பால், வசனங்களால் சிரிக்க வைக் கிறார். ஓவியா, வித்தியாசமான பாலியல் தொழிலாளி பாத்திரத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடித்துள்ளார். மற்றொரு நாயகனாக அசோக் செல்வன். தன்னால் முடிந்தவரை கிராமத்து இளைஞன் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முயல்கிறார். ஆனால் அவருக்குக் கிராமத்து பாணி வசன உச்சரிப்பு கைகொடுக்க மறுக்கிறது. அவரது ஜோடியான ஸ்ருதி ராமகிருஷ்ணன் கொடுத்த வேலையைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
‘ஃபீலிங்ஸ்’ ரவியாக உதயபானு மகேஸ்வரன். சீரியஸான வில்லனாக இருந்தாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையாகவே கையா ளப்பட்டுள்ளன. ஜிம் பாய்ஸை அவர் துன்புறுத்தும் விதம் தமிழ் சினிமா நகைச்சுவைக்கே புதுசு. ராயப்பனாக மதுசூதனன், வழக்கமான தமிழ் சினிமா கிராமத்து வில்லன்களை நினைவுபடுத்து கிறார். வாய் பேச முடியாத பாத்திரத்தில் முனீஸ்காந்த் தனி கவனம் பெறுகிறார். கலை ஆர்வத்தோடு திரிவது, ஓவியாவின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அவரது சிலையை ஆர்வத்துடன் வடிப்பது எனப் பல காட்சிகளில் ஈர்க்கிறார்.
அடிக்கடி ‘கண்டிப்பா’ எனச் சொல்லும் இன்ஸ்பெக்டராக வரும் ரத்தினம் சுந்தரம், கலகலக்க வைக்கிறார். கடைசி வரை ஒரே மாதிரியான தொனியில் அவர் சொல்லும் கண்டிப்பா, திரையில் வரும்போதெல்லாம் ரசிகர்களிடம் சிரிப்பை அள்ளுகிறது.
வழக்கமான நகைச்சுவைப் படங்களில் உள்ளதைப் போன்ற காட்சிகள்தான் இதிலும் உள்ளன என்றாலும் அவற்றை மாறுபட்ட வகையில் திரையில் தந்திருக்கும் முயற்சி என்ற அளவில் இந்தப் படத்தை வரவேற்கலாம். எல்லாப் பாத்திரங் களும் எல்லாச் சம்பவங்களும் பகடி செய்யப்படுவது சுவாரஸ்யமாக உள்ளது. சில காட்சிகள் தமிழ் சினிமாவையே கிண்டலடிக்கின்றன.
பகடி என்னும் அற்புதமான சாதனத்தைக் கொண்டு சமகால அபத்தங்களைச் சுட்டிக்காட்ட வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்த இந்தப் படம் தவறிவிட்டது. பல்வேறு நுட்பங்களுடன் வலுவாக வெளிப்படும் வாய்ப்பை வீணடித்திருப்பதால் சாதாரண நகைச்சுவைப் படமாக மட்டுமே ‘144’ அமைந்துவிட்டது.