

‘உதயம் என்.எச்.4’ படத்தை அடுத்து ஜெய்யை வைத்து ‘புகழ்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார், இயக்குநர் மணிமாறன். படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
சமூக பிரச்சினை, ஆக்ஷன் களம் ஆகியவற்றை மையமாக கொண்டுள்ள ‘புகழ்’ படத்துக்கு ஜெய் எப்படி பொருந்தினார்?
நடுத்தர வாழ்க்கைச் சூழ்நிலையில் இருக்கும் ஒரு இளைஞன் தன் சகாக்களுடன் சேர்ந்து சமூக பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. தனுஷ், ஜெய் போன்ற ஹீரோக்களை பார்க்கும்போது நம் பக்கத்து வீட்டு நபராகத்தான் தெரிவார்கள். அதோடு பெரிய ஹீரோக்கள் இந்த கதைச் சூழலை தாங்கி நகர்த்திக்கொண்டு போகமுடியுமா? என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. கதையை உருவாக்கியதும் ஜெய்யிடம் சொன்னேன். உடனே தொடங்கலாம் என்றார். அப்படித்தான் பட வேலை களைத் தொடங்கினோம்.
அரசியல், ஆக்கிரமிப்பு பற்றியெல்லாம் படம் பேசுவதாக கேள்விப்பட்டோமே?
நகரத்தில் ஓடியாடி விளையாடிய மைதானங்களை எல்லாம் பூச்செடிகள் வைத்து பூங்காக்களாக மாற்றிவிட்டோம். மாலை நேரத்தில் விளையாடச் சென்ற இளைஞர்கள் இப்போது மதுபான கூடங் களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி மாற்றங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இப்போது மழைக்கு பிறகு ஆக்கிரமிப்புகளைப் பற்றி பேசி வருகிறோம்.
என் சொந்த ஊரான வாலாஜாபேட்டையில் நான் பார்த்த ஆக்கிரமிப்பு விஷயங்களையெல்லாம் இந்தக் கதைக்குள் கொண்டு வந்திருக் கிறேன். இந்தப் படம் அரசியல் பேசும். ஆனால் இதை முழுக்க அரசியல் சார்ந்த படம் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் என்றால் ஊழல் என்ற விஷ யத்தை மட்டும் நாம் கையில் எடுத்துக் கொள்கிறோம். அதையும் கடந்து அரசியல்வாதிகள் படும் கஷ்டங்களும் நிறைய இருக்கின்றன. அதுமாதிரியான விஷயங்களை ‘புகழ்’ பேசும்.
உங்கள் பள்ளிக்கூட நண்பர், உங்கள் முதல் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் ‘விசாரணை’ படத்துக்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறாரே?
வெற்றியை கூடவே இருந்து கவனித்தவர்கள் நாங்கள். அவருக்கு இதெல்லாம் தகுதியான விஷயங்கள். சினிமாவில் இன்னும் நிறைய செய்வார். ஒரு தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை அவர் கொடுத்து வருகிறார், வெற்றியின் நிறுவனத்தில் மேலும் சில படங்களை இயக்குவேன்.
ஒரு வார வசூல்தான் என்று சினிமா மாறியுள்ள இந்த சூழலில் பட்ஜெட் படங் கள் ரிலீஸ் ஆவது சிரமமாக இருக்கிறதே?
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சின்ன ஹீரோ படம் ஒன்றை குறைந்தபட்சம் ரூ.4 கோடியில் எடுத்துவிடலாம். இன்றைக்கு அப்படி இல்லை. குறிப்பாக அப்போது சேட்டிலைட் என்ற ஒன்றை வைத்தே துணிந்து படம் எடுக்க இறங்குவார்கள். இப்போது சின்ன பட்ஜெட் படங்களை சேட்டிலைட்டுக்கு கேட்டால் ‘முதலில் ரிலீஸாகட்டும், பிறகு பார்க்கலாம்’ என்கிறார்கள்.
பெரிய நட்சத்திரம், பெரிய தயாரிப் பாளர்களுக்கு எளிதாக திரையரங்குகள் கிடைத்துவிடுகின்றன. அவர்களோடு சின்ன பட்ஜெட் படங்கள் போட்டி போட முடியாது. சின்ன பட்ஜெட் படங்கள் நன்றாக இருந்தால் மீடியாக்கள் நிச்சயம் பாராட்டும். ஆனால் அவர்கள் பாராட்டத் தொடங்கும்போது அந்தப் படங்கள் தியேட்டரில் இருப்பதில்லை. இப்படி நிறைய சிக்கல்கள் உள்ளன.
‘காக்காமுட்டை’யும், ‘குற்றம் கடிதல்’ படமும் ஒன்றுக்கொன்று குறைவில்லாத படங்கள்தான். ஆனால் ‘காக்காமுட்டை’ போய் சேர்ந்த அளவுக்கு ‘குற்றம் கடிதல்’ சென்றடையவில்லை. காரணம் ரிலீஸ் நேரம். சரியான திரையரங்கம் கிடைக்கவில்லை. ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்க இப்படி பல விஷயங்கள் இங்கே இருக்கின்றன. புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் இங்கே ‘சினிமா எடுப்போம்’ என்ற சிந்தனையில் மட்டுமே இறங்கிவிட முடியாது. முதலீடு செய்வதற்கு முன் அடிப்படையான பல விஷயங்களை கற்றே தீர வேண்டும்.