கலக்கல் ஹாலிவுட்: விஞ்ஞானிகள் உருவாக்கும் பேய்!

கலக்கல் ஹாலிவுட்: விஞ்ஞானிகள் உருவாக்கும் பேய்!
Updated on
1 min read

ஹாரி பாட்டர் படத்தில் பிரதான வேடமேற்ற டேனியல் ரேட்க்ளிப் இப்போது இளைஞனாகிவிட்டார். அவர் நடித்த ‘விக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவியான மேரி ஷெல்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் 1818-ம் ஆண்டில் எழுதிய ஃப்ராங்கென்ஸ்டைன் என்ற கிளாஸிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதையை எழுதிய மேக்ஸ் லேண்டிஸ், மேரி ஷெல்லி எழுதிய பேய்க்கதையை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையை எழுதினாலும் சம காலத்துக்கு ஏற்ப அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். ‘அமெரிக்கன் அல்ட்ரா’, ‘க்ரோனிக்கிள்’ போன்ற படங்களுக்கு இவர் எழுதியிருந்த திரைக்கதை ஹாலிவுட் ரசிகர்களால் ஆர்வத்துடன் ரசிக்கப்பட்டது.

விஞ்ஞானியான டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனுடைய உதவியாளர் இகோரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்படுகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல் புதிய பாதையில் இந்தப் படம் பயணப்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணம். இகோரின் வேடமேற்றிருக்கிறார் டேனியல் ரேட்க்ளிப். டாக்டர் வேடமேற்றிருப்பவர் நடிகர் ஜேம்ஸ் மேக்வோய். டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன் என்று நாம் அறியும் பிரபல மனிதர் பிரபலமடைந்த பாதையில் அவருடன் பயணப்பட்ட அவருடைய உதவியாளர் இகோருக்கும் டாக்டருக்கும் இடையே நிலவிய நட்பு சார்ந்த பல சம்பவங்கள் இந்தக் கதையை நகர்த்திச் செல்கின்றன.

ஃப்ராங்கென்ஸ்டைனின் பேய்க்கதையைப் படமாக்குபவர்கள் ஃப்ராங்கென்ஸ்டைனுக்கும் அவர் உருவாக்கும் பேயுருவுக்கும் இடையேயான உறவை அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பேயுரு படத்தின் பாதியிலேயே திரைக்கு வந்துவிடும். ஆனால் இப்போது வெளிவர உள்ள இந்த ஃப்ராங்கென்ஸ்டைன் படத்தின் இறுதியில்தான் அது கதைக்குள் நுழைகிறது. இதை உறுதிப்படுத்துவது போல் டேனியல் ரேட்க்ளிப் ஒரு நேர்காணலில், மேரி ஷெல்லியின் நாவலைப் படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான் எனத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனின் பேயுரு கிட்டத்தட்ட படத்தின் இறுதியில்தான் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால் ரசிகர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைவிட அதிகமாக ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதால் படத்தின் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது என்றும் கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் பல வேடிக்கை சம்பவங்களும் சாகச நிகழ்ச்சிகளும் நிறைந்த இந்தச் சுவாரஸ்யமான பேய்க்கதையை ஹாலிவுட்டுக்கே உரிய பிரமாண்டத்துடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால் மெக்குயிகன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in