Last Updated : 06 Nov, 2015 11:07 AM

Published : 06 Nov 2015 11:07 AM
Last Updated : 06 Nov 2015 11:07 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: மனிதரின் பொய்முகம்

இப்போதெல்லாம் கிளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு நாயகனும் நாயகியும் குத்தாட்டம் போடுகிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முந்தைய நாயகர்களோ தன்னந்தனியாகக் கொள்கை விளக்கப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். வில்லனோடு சண்டை போட்டு அடித்துத் துவைப்பதற்கு முன்பு நாயகன் தன்னுடைய செயலுக்கான நியாயத்தை முன்வைப்பதாக இந்தப் பாடல் இருக்கும். வரவிருக்கும் மோதலுக்கான முன்னுரையாக அமைந்து ரசிகர்களைத் தயார்படுத்தும்.

ஏதேனும் ஒரு பொது நிகழ்வில், அல்லது விழாவில் மாறுவேடம் பூண்டு நாயகன் பாடுவார். அல்லது ஒரு கலை நிகழ்ச்சியினூடே பூடகமாகப் பாடுவார். முன்பெல்லாம் அடிக்கடி பார்க்கக்கூடியவையாக இருந்த இந்தப் பாடல்கள் செறிந்த கருத்தும் சிறந்த இசையையும் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.

இங்கே நாம் காணவிருக்கும் இந்திப் பாடல் இடம்பெற்ற ‘இஜ்ஜத்’ திரைப்படத்தில் ஜெயலலிதா, ஜும்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

திரைப்படம்: இஜ்ஜத் (மாண்பு மரியாதை)

பாடலாசிரியர்: சாஹீர் லுத்யான்வி

பாடியவர்: முகம்மது ரஃபி

இசை: லட்சுமிகாந்த்-பியாரிலால்.

பாடல்:

க்யா மிலியே ஐஸே லோகோன் ஸே

ஜின் கீ ஃபித்ரத் சுப்பீ ரஹே

நக்லீ சேஹரா சாம்னே ஆயே

அஸ்லி சேஹரா சுப்பீ ரஹே

பொருள்:

மனதின் இயல்பு மறைந்து கிடக்கும்

மனிதரால் அடையும் பயன் என்ன?

(அவர்) பொய்மை முகம் புகும் நம் எதிரில்

மெய்மை முகமோ மெல்ல மறையும்

தன்னிடம் இருந்தே தன்னை மறைக்கும்

(அவர் தம்) உண்மை அடையாளம்

உணர்வது எங்கனம்?

எதனால் அவரின் புகழை ஏற்றம் செய்வது

எதை அர்ப்பணித்து இன்பம் அடைவது?

பாதி அவர்தம் குணங்கள் வெளியில்

மீதி குணங்கள் உறங்கும் நெஞ்சில்

உள்ளம் மகிழும் ஓசைகள் இயற்றி

கள்ளம் மிகுந்த பேச்சில் விரிப்பர்

உறவுகள் நீங்கள் என உயர்வாய்க் கூறி

இரவின் மடியில் இன்பம் தேடுவார்

ஆன்மா அழகின் ஆழம் வெளிப்புறம்

மேன்மை உடலின் மிடுக்கு உட்புறம்

ஒவ்வொரு இடமும் ஊரும் மக்களும்

எவரின் ஏய்ப்பால் எய்தினர் துன்பம்

அவர்தாம் அரங்கிலும் வெளியிலும் அமர்ந்து

கருணை, தர்மம் எனக் கதைப்பார் ஐயோ

செய்க தானம் எனச் செப்பும் இவர்

செய்த கொள்ளை உறங்கும் வீட்டில்

பார்ப்போம் எதுவரை இவரின் பொய் முகம்

ஆர்ப்பரிக்கும் முழக்கத்திற்கு ஆட்படும்

அழகை அச்சாரமாக்கும் ஆடையின் துணையுடன்

எதுவரை இக்கள்ள வாழ்க்கை எழுந்து நிற்கும்?

மக்களின் பார்வையில் எதுவரை மறையும்

இக்கணம் வரையில் மறைந்த யதார்த்தம் .

பொய்மை முகம் புகும் நம் எதிரில்

மெய்மை முகமோ மெல்ல மறையும்.

பொய்முகத்துடன் சமுதாயத்தில் உலாவும் நயவஞ்சகர்களைச் சற்றே கடுமையான தொனியில் சாடும் இந்தப் பாடலின் அதே கருத்துக்களைச் சிறிது தத்துவார்த்த தொனியுடன் தருகிறது தமிழ்ப் பாடல். கொள்கைப் பாடல்களில் அழுத்தமான உடல் மொழியை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆர்., வழக்கத்துக்கு மாறாக, மென்மையான உடல் மொழியுடன் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார். பொய்முகங்களைச் சாடுவதற்குப் பதிலாக, விரக்திப் புன்னகையுடன் நொந்துகொள்ளும் தொனியில் அமைந்த இந்தப் பாடல் கருத்திலும் காட்சி அமைப்பிலும் இன்றும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

படம்: தாய் சொல்லைத் தட்டாதே (1961)

இசை: கே.வி. மகாதேவன்

பாடியவர்: டி.எம். செளந்தர்ராஜன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடல்:

போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் பூமியைக் கெடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்

பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதயப் போர்வையில் மறைத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான்

அதைக் கருணை என்று அவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியை கொடுத்தானே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x