

சமீபத்தில் நடைபெற்ற பதினேழாவது மும்பை திரைப்பட விழாவில் (MAMI), ஹன்சல் மேத்தாவின் ‘அலிகர்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் வித்யா பாலன் கலந்துகொண்டார். இந்தத் திரைப்படம் ஓரினச் சேர்க்கையைப் பற்றிப் பேசுகிறது. பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் ராமச்சந்திரா சிரஸின் வாழ்க்கையைத் தழுவி, இந்தப் படத்தை இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கியிருக்கிறார்.
“அலிகர் போன்ற திரைப்படங்கள்தான் கலைக்கு எல்லைகளில்லை என்பதற்கான உதாரணங்கள். கலை மக்களை இணைக்கும் ஒரு அம்சமாகச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற படங்கள்தான் உணர்த்துகின்றன. இப்படிதான் கலை இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் வித்யா பாலன். மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார் ராவ் இருவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஹாலிவுட் அழைக்கிறது!
‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ பட வாய்ப்பைத் தவறவிட்ட தீபிகா படுகோன், தற்போது ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
“நான் அப்போது ‘ராம் லீலா’ படத்தைப் பிரபலப்படுத்தும் பணியில் படக் குழுவுடன் ஈடுபட்டிருந்ததால், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ படத்தில் நடிக்கமுடியவில்லை. சிறப்பான திரைக்கதை கிடைத்தால், நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் நடிப்பேன். அத்துடன், ஹாலிவுட்டில் நடிகர்களுக்கு இங்கே இருப்பதைப் போன்று ‘ஷெல்ஃப் லைஃப்’ கிடையாது. அங்கே நடிகர்கள், ரசிகர்கள் என இரு தரப்புமே வயதைப் பொருட்படுத்த மாட்டார்கள்” என்கிறார் தீபிகா.
சமீபத்தில் தனக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள், தன்னை எந்த விதத்திலும் மாற்றவில்லை என்றும் சொல்கிறார் தீபிகா.
“நான் நடிக்க ஆரம்பித்தபோது எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். எதுவும் மாறவில்லை. வீட்டில் எனக்குப் பிடித்த உணவுகளை நான்தான் தயாரிக்கிறேன். என் பெற்றோர்கள் எப்போதும் போலவே எனக்கு ஊக்கமளிக்கிறார்கள்” என்கிறார் தீபிகா. தீபிகாவின் ஹாலிவுட் பிரவேசம் விரைவில் இருக்கலாம் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
எதற்கும் அவசரமில்லை!
2013-ல் வெளிவந்த ‘த லஞ்ச் பாக்ஸ்’படத்துக்குப் பிறகு பெரிய திரையில் நிம்ரத் கவுர் தலைகாட்டவேயில்லை. ஆனால், அதைப் பற்றி அவர் எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் பிரபல அரசியல் திகில் தொலைக்காட்சித் தொடரான ‘ஹோம்லாண்ட்’-ல் நிம்ரத் நடித்துவந்தார். இதனால், அவர் நடிப்பில் எந்தப் படமும் கடந்த ஆண்டு வெளிவரவில்லை.
“எனக்கு எண்ணிக்கையைவிட, தரமே முக்கியம். என்னால் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியாது. அதோடு, நான் இப்போதுதான் என் திரை வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன். அதனால், என்னால் இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்க முடியாது. தற்போது என் திரை வாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்கிறார் நிம்ரத்.
இவர் அக்ஷய் குமாருடன் நடித்திருக்கும் ‘ஏர்லிஃப்ட்’திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது.
- தொகுப்பு: கனி