திரைப் பார்வை: திதளி - டெல்லியின் பட்டாம்பூச்சிகள்

திரைப் பார்வை: திதளி - டெல்லியின் பட்டாம்பூச்சிகள்
Updated on
2 min read

குடும்பத்தைக் கொண்டாடும் படங்களைத்தான் பாலிவுட் இதுவரை பார்த்திருக்கிறது. ஆனால், யதார்த்த உலகில் குடும்பங்கள் கொண்டாடும்படி இல்லை என்பதை முகத்தில் அறைந்தார்போல் சொல்கிறது ‘திதளி’(பட்டாம்பூச்சி). சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்குக் குடும்பம்தான் முதல் எதிரியாக இருக்கிறது என்பதை இந்தப் படம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. டெல்லியின் நிழல் உலக வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை அறிமுக இயக்குநர் கனு பஹல் மனதை உலுக்கும்படி பேசியிருக்கிறார்.

மனதை உறைய வைக்கும் வன்முறை, வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மை, கனவை அடைவதற்கான போராட்டம், மனித சுயநலத்தின் எல்லை என ‘திதளி’ திரைப்படம் பல தளங்களில் பயணிக்கிறது. அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாத, ஜீரணிக்க முடியாத டெல்லியின் விளிம்புநிலை மனிதர்களை இயக்குநர் திரையில் கொண்டுவந்திருக்கிறார்.

வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞனாக திதளி (ஷஷாங்க் அரோரா) இருக்கிறான். ஆனால், அவனுடைய சகோதரர்கள் விக்ரம் (ரன்வீர் ஷோரே), பாவ்லா (அமித் சியல்), அப்பா (லலித் பஹல்) என மூவரும் திதளியின் கனவுக்குப் பெருந்தடையாக இருக்கின்றனர். கார் திருடர்களான விக்ரமும், பாவ்லாவும் திதளியையும் தங்களுடைய திருட்டுத் தொழிலில் இணைத்துக்கொள்கின்றனர்.

விக்ரமின் மனைவி சங்கீதா (சரிதா ஷர்மா) இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் வீட்டைவிட்டுச் சென்றுவிடுகிறார். இந்தத் திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக, டெல்லியின் புறநகரில் தயாராகிக்கொண்டிருக்கும் ‘மால்’ ஒன்றின் ‘பார்க்கிங்’ பகுதியை கான்ட்ராக்ட் எடுக்க நினைக்கிறான் திதளி. அந்த கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான்.

ஆனால், சகோதரர்கள் இருவரும், அவனுக்கு வாழ்க்கையில் பொறுப்பு வர வேண்டும் என்று நீலுவை (ஷிவானி ரகுவம்சி) திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். நான்கு ஆண்கள் மட்டும் இருந்த இடத்தில் நீலு என்ற பெண் வந்தவுடன் அந்தக் குடும்பத்தின் போக்கு மாறுகிறது. இறுதியில், திதளியின் கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதைக்கூட யோசிக்கவிடாமல், ஒரு கனத்த மனநிலையைப் படம் உருவாக்கிவிடுகிறது.

‘திதளி’யின் திரைக்கதையை ஷரத் கட்டாரியாவும், இயக்குநர் கனு பஹலும் இணைந்து எழுதியிருக்கின்றனர். இந்தியக் குடும்ப அமைப்பின் ஆணாதிக்க மனோபாவத்தைப் படத்தின் நான்கு ஆண் கதாபாத்திரங்களும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றனர். படத்தில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்களையும் துணிச்சலுடன் அமைத்திருக்கிறார்கள்.

நீலு, சங்கீதா இருவருமே ‘பதி பரமேஷ்வர்’, ‘குடும்ப மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி’ என்று பேசும் பாலிவுட்டின் வழக்கமான கதாநாயகிகளாக இல்லை. நீலு திருமணத்துக்குப் பின், கணவனிடமே காதலனின் பிறந்தநாளுக்குப் பரிசு கொடுத்து அனுப்புகிறாள். சங்கீதா, கணவனிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன் ஆண் நண்பருடன் புதிய வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

இப்படிப் படத்தில் வரும் இரண்டு பெண்களும் அவர்களுடைய நியாயத்தை எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனர். அதே சமயம், ஆணாதிக்கத்துக்கு ஆண்களும் சேர்ந்தே பலியாகின்றனர் என்பதை விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப்போட்டு விட்டு, அழும் விக்ரமின் கதாபாத்திரம் வலிமையாக விளக்குகிறது.

திதளியாக நடித்திருக்கும் அறிமுக நாயகன் ஷஷாங்க் அரோரா, தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது கண்களில் வெளிப்படும் ஏக்கம், தேடல், கோபம், பயம் இவற்றில்தான் படத்தின் பிரதானமான காட்சிகள் பயணிக்கின்றன. அறிமுகநாயகி ஷிவானி, ரன்வீர் ஷோரே, அமித் சியல், லலித் பஹல், சரிதா என அனைவரும் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கின்றனர்.

“இதுவரை கொலையெல்லாம் செய்ததில்லை, சார்” என்று போலிஸ்காரரிடம் விக்ரம் பேசும் காட்சி டெல்லி நிழல் உலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம். விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அதிகார வர்க்கத்திடம் எப்படி பலியாகின்றனர் என்பதை அந்தக் காட்சி அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும். டெல்லிக்கு இருக்கும் இன்னொரு அடையாளத்தை ‘திதளி’ வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

‘திதளி’ குடும்பத்தின் இருண்ட, யதார்த்தமான முகத்தைப் பிரதிபலிக்கிறது. பாலிவுட்டின் வழக்கமான, போலியான எந்த பாணிக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், ஒரு தனித்துவமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கனு பஹல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in