

வெற்றிபெற்ற திரைக் கலைஞர்களுக்கு மூப்புமில்லை; மரணமுமில்லை. அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்கிறார்கள். அந்த வகையில் ஆச்சி மனோரமா உடல் மறைந்தாலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ ஜில் ஜில் ரமாமணியும், ‘அன்பே வா’ கண்ணம்மாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் நம்முள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
நாடகங்களிலிருந்து வந்ததாலோ என்னவோ திரைப்படங்களில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றால் வெளுத்து வாங்கிவிடுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் குழு மற்றும் பத்மினி குழுவினர் கிளாஸிக்கல் இசை- நடனத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தார்கள் என்றால் அடித்தட்டு மக்களைக் கவர்ந்த நாடக நடிகராக, ஒற்றையாளாக மனோரமா வெளுத்து வாங்கினார். சொந்த வாழ்வின் துயரங்களை மறைத்துக்கொண்டு மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜில் ஜில் ரமாமணியாக, ரோஸ்ஸா ராணியாக செட்டிநாட்டுத் தமிழில் பேசி நடித்துத் தூள் கிளப்பினார்.
இப்படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் முன்னர் தான் இயக்கிய ‘குலமகள் ராதை’ படத்தில் சிவாஜி கணேசன் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக மனோரமாவை செட்டிநாட்டு பாஷை பேச வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கினார். அப்படம் வெற்றி பெறாததால் அது மக்கள் மத்தியில் பரவலாகப் போய்ச் சேரவில்லை. ‘தில்லானா மோகனாம்பாள்’ மூலம் அதே பேச்சு வழக்கையே இன்னும் கொஞ்சம் இழுவையாக மெருகேற்றி, ஜில்லுவாக உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்தார். அந்த வெற்றியின் பின்னணியில் ஆச்சியின் கடும் உழைப்பும் இருந்தது.
துரை இயக்கிய ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழ் கொஞ்சி விளையாடும் அவர் நாவில். அதே கெட்-அப்பில் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தால் எப்படியிருக்கும்? பாப் வெட்டிய தலை, கவுனுடன் லோகிதாசனை மடியில் கிடத்திக்கொண்டு ‘மவ்னே லோகிதாஸா’ என அவர் கொச்சை மொழி பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது. பின்னர் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் நெடுகப் பல நாடகங்கள், நாடகங்கள் தோறும் பலப்பல கேரக்டர்கள். நாடக நடிகையாக அவர் செய்யும் அலம்பல்கள் அசல் நாடகக் கலைஞர்களைப் பிரதிபலித்தன. ‘காசி யாத்திரை’ படத்தில் அம்பிகாபதி நாடகத்தில் அமராவதியாக நடித்தார். எல்லா நாடகங்களுமே நிஜத்தில் சோக நாடகங்கள். ’கல்யாணராமன்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து ‘மனோகரா’ நாடகத்தை சென்னைத் தமிழ் பேசி நடித்துக் குலுங்க, குலுங்கச் சிரிக்க வைத்தார்.
மாறுபட்ட சந்திரமதி
அரிச்சந்திரா, அம்பிகாபதி, மனோகரா நாடகங்களைப் பார்த்தால் யாராவது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோமா? ஆனால், நகைச்சுவையால் அரங்கைக் குலுங்க வைக்கும் காட்சிகளாக அவை மாறியிருந்தன. மதுரை, கொங்குத் தமிழ், பிராமண பாஷை, சென்னைத் தமிழ் என தமிழகத்தின் அத்தனை வட்டார வழக்குகளும் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு.
‘சரஸ்வதி சபதம்’ படத்தில் அவர் தத்தித் தத்திப் பேசும் தமிழும் ஓர் அழகுதான். ‘காசேதான் கடவுளடா’ படத்தில் பணத்தைப் பிசாசு போல அடைகாக்கும் பணக்காரப் பெண்ணாக, அப்பணத்தைச் சுற்றி வரும் அனைவரையும் தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்து அடக்கியாளும் கம்பீரமான ஒரு பெண்ணாக வந்து அசத்துவார். ‘ஆயிரம் பொய்’ என்று ஒரு படம். அதில் ‘அசோக்குக்கு உடம்பு சரியில்ல, அவனைப் பார்த்துக்க வீட்டோடு ஒரு டாக்டர் வேணும்’ என ஒரு டாக்டரைத் தேடுவார்.
அவரைக் காதலிக்கும் சோ, போலி டாக்டராக வந்து சேருவார். ‘அசோக் எங்கே இருக்கான்?’ என அவர் அப்பாவியாகக் கேட்க, அவரிடம் ‘அசோக்கை அவன் இவன் என்று சொல்லக் கூடாது’ என்று கொஞ்சும் குரலில் கண்டிஷன் போடுவார். கடைசியில் அந்த செல்ல அசோக் அவர் வளர்க்கும் நாய்தான் என்று ரசிகர்களுக்குத் தெரிய வரும்போது தியேட்டரே அதிரும். அப்பாவித்தனமும், அதே நேரத்தில் பணக்காரச் செருக்கும் கலந்து கலகலக்க வைப்பார்.
ஏற்காத வேடம்
இப்படி எத்தனை எத்தனை படங்கள், எத்தனை, எத்தனை பாத்திரங்கள் … கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து நடிகர்கள், நடிகைகளுடனும் இணைந்து நடித்துவிட்டார். அவரது உச்சக்கட்டம் 60, 70-கள்.
இக் காலகட்டத்தில் அவர் இடம் பெறாத படமே இல்லை எனலாம். தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவர் மகன் வாசு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி என எத்தனை நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் பிரிக்க முடியாத ஜோடியாக நாகேஷுடன் மட்டுமே நினைவில் நிற்பவர். ‘ஞானப்பறவை’ யில் நடிகர் திலகத்தின் ஜோடிப் பறவையாகவும் ஜொலித்தார்.
நகைச்சுவைப் பாத்திரங்கள் முடிவுக்கு வந்தபோது குணச்சித்திரப் பாத்திரங்களை நகைச்சுவை கலந்து மெருகேற்றித்தான் அளித்தார். 1980-களுக்குப் பிந்தைய நாயகர்கள் அனைவருக்கும் அம்மா, ஆத்தா, அக்கா, அண்ணியாக வாழ்ந்தார். அம்மா என்றால் சும்மா இல்லை. கனம் நிறைந்த உணர்வுப்பூர்வமான வேடங்கள். ‘மிச்சத்துக்கு நானிருக்கேன்’ என்று சத்துணவுக் கூடத்து அடுப்புத் தீக்குத் தன்னுடலைத் தரும் ’ஜென்டில்மேன்’ அம்மா, கண்களுடன் மனதையும் சேர்த்துக் கலங்க வைத்துவிடுவாரே! இது நம்ம ஆளு, இந்தியன், சூரியன், சின்னக்கவுண்டர், ராசுக்குட்டியின் அம்மாக்கள் அன்பும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவர்கள் இல்லையா?
‘வா வாத்யாரே வூட்டாண்டெ’, ‘நான் மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன்’ என்று அவர் பாடிய இரண்டு பாடல்களுக்கும் இடையில் இரண்டு தலைமுறை இடைவெளி. எவர் கிரீன் அசத்தல்கள்! நாகஸ்வர வித்வான், நாடக நடிகை, மடிசார் கட்டிய மாமி, கிராமத்துப் பெண், கோடீஸ்வரி, குப்பைக்காரி, காபரே டான்ஸர், பர்மா அகதி, ஈழத் தமிழ்ப் பெண் என்று அவர் ஏற்காத வேடங்கள் உண்டா? தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கனவு எப்படி நிறைவேறவில்லையோ, அதுபோல மனோரமாவும் விரும்பி ஏற்க நினைத்த திருநங்கை வேடம் மட்டும் அவருக்குக் கிடைக்கவே இல்லை. காலம் அதற்குள் முந்திக்கொண்டது. எந்த நடிப்புக் கலைஞருக்கும் அவர்கள் ஏற்று நடிக்க ஒரு வேடம் மிச்சமிருக்கத்தான் செய்கிறது.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com