

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சரண்யா, கணவர் அமுதனுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார்.
“லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார். அவருடைய சொந்த ஊர் இலங்கை. அவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர். பிசினஸ் தொடர்பாக சென்னை வந்த அவரை கோயிலில் முதன்முறையாகச் சந்தித்தேன். அவருக்கு என்னைப் பிடித்துப் போனதால் வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாங்கள் அறிமுகமானோம். இந்த ஆண்டு ஆகஸ்டில் எங்கள் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு லண்டன், இலங்கை, இந்தியா என்று பயணங்களிலேயே நாட்கள் நகர்கிறது. வரும் ஜனவரியில் கணவரோடு லண்டனில் குடிபெயர திட்டமிட்டுள்ளேன். இசை கச்சேரி, பிசினஸ் என்று அவ்வப்போது சென்னைக்கு வருவோம். செய்தி வாசிப்பாளராக இனி மக்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பு குறைவுதான்.
அதுதான் எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. செய்தி வாசிக்காவிட்டாலும் தொடர்ந்து புதிய தலைமுறை சேனலின் பங்களிப்பாளராகவே இருப்பேன். அங்கே இருந்துகொண்டே சேனலுக்கு என்னால் முடிந்த விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன்” என்கிறார் சரண்யா.
100 வது அத்தியாயம்
புரிதல் இன்றி புறக்கணிக்கப்படும் முதியோர்களுக்கும், பெற்றோர் களால் கைவிடப்பட்ட சிறுவர்களுக் கும் நிழல் கொடுக்கும் ‘அன்பு இல்லம்’ என்ற இடத்தை களமாகக்கொண்டு ‘நிழல்’ நெடுந்தொடர் பொதிகை தொலைக்காட்சியில் தினசரி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மனிதநேய சிந்தனைகளை பிரதிபலிக்கும் இடமாக விளங்கும் அன்பு இல்லத்தில் நடக்கும் திருப்பங்களை மையமாக வைத்து இத்தொடர் நகர்கிறது. இதில் ஆகாஷ் என்பவர் கலா என்ற பெண்ணை காதல் திருமணம் புரிகிறார். இவர்களுடைய குழந்தை வயிற்றில் இருக்கும்போதே ஆகாஷ், அந்தப்பெண்ணை விட்டுவிட்டு சென்றுவிடுகிறார். அந்தக் குழந்தையை அன்பு இல்லத்தில் வைத்துக்கொண்டு தாய் போராடுவது ஒரு கதையாக வருகிறது.
அதேபோல, சிறுவயதில் பார்வை இழந்த ஆனந்தன் ஒரு அநாதையாக அன்பு இல்லத்துக்கு வருகிறார். அங்கே அவருக்கு ரஞ்சனியின் அன்பு கிடைக்கிறது. அதுவே காதலாக மாறியதும், எதிர்பாராத விதமாக அந்தக் காதலுக்கு ஏற்படும் தடங்கல்கள் என்னென்ன? என்பது இதன் மற்றொரு கதைக்களம். இவ்வாறு மனித வாழ்வில் ஏற்படும் காதல், பிரிவு, ஏமாற்றம், ஆசை, நியாயம் ஆகியவற்றை வெவ்வேறு கோணத்தில் பிரதிபலித்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் வரும் வாரத்தில் 100 வது அத்தியாயத்தை தொடுகிறது.
கே.ஏ.ராஜபாண்டியன் கதை எழுத, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் சையத் ரஃபிக் பாஷா.
புதிய பயணம்
ஜீ தமிழ் சேனலில் ‘அதிர்ஷ்ட லட்சுமி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா, ரேடியோ தொகுப்பாளினியாகவும் தன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
“பெண்களை கவுரவிக்கும் வகையில் ‘அதிர்ஷ்டலட்சுமி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். இந்நிலையில் பிக் எஃப்.எம் ரேடியோவில் ‘கோலிவுட் சூப்பர் டாப் 10’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியை வழங்குவதும், எதிரில் யாருமில்லாத ஒரு அறையில் அமர்ந்து கலகலப்பு குறையாமல் ஒரு நிகழ்ச்சியை வழங்குவதும் இருவேறு அனுபவங்கள்.
இப்படி வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குவது என் சமீபத்திய மகிழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல நடிப்பே வராது என்று இருந்த நான் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப்படமும் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும்’’ என்கிறார், அர்ச்சனா.
திகில் தொடர்
புதுயுகம் தொலைக்காட்சியில் திகில் சம்பவங்களை மையப்படுத்தி, ‘திக்… திக்… திகில்’ என்ற அமானுஷ்ய தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக இளைஞர் பட்டாளம் உற்சாகமாகச் செல்கிறது. அந்த கும்பலில் ஒருவர் மட்டும் திடீரென காணாமல் போகிறார்.
அவரை தேடிக் கண்டுபிடிக்க முயலும் மற்றவர்களுக்கும் அடுத்தடுத்து ஆபத்து நிகழ்கிறது. காட்டுக்குள் நுழையும் மனிதர்களின் உயிரைக் குடிப்பதற்காக ஆவி அலைவதாக தெரியவருகிறது. அந்த ஆவியின் பிடியில் இருந்து இளைஞர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதை திகிலுடன் விவரிக்கிறது இந்தத் தொடர்.
நீர் வளம்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘நம்மால் முடியும்’. இந்நிகழ்ச்சியை குருராஜேந்திரனும், சித்திரவேலுவும் ஒருங் கிணைந்து உருவாக்கியுள்ளனர். நிகழ்ச்சி பற்றி குருராஜேந்திரன் கூறும்போது, “நீரின்றி அமையாது உலகு என்று சொன்னார் வள்ளுவர். நீரின்றி எவரும் வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.
அப்படிப்பட்ட நீராதாரத்தை காப்பாற்ற இந்த நிகழ்ச்சி மூலம் நடவடிக்கை எடுக்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களின் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும்,மேம்படுத்தவும் நம்மால் முடியும் குழுவினர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி களப்பணியாற்றி வருகிறோம். இந்த களப்பணியில் பொதுமக்களையும் அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும், மாணவர்களையும் தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட குளம், ஏரிகளை ‘நம்மால் முடியும்’ குழு சீரமைத்துள்ளது” என்றார்.