

கோலிவுட்டுக்கு ஒரு குட்டி ஹைதராபாத் என்றால் அது புதுச்சேரி. ஆண்டுக்கு 50 முதல் 75 படங்களின் ஒரு பாடல் காட்சியாவது அங்கே படமாக்கப்படுகிறது. புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்களுக்கும் தமிழ் சினிமாவில் ஏக வரவேற்பு. தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ‘ஃபில்டர் கோல்ட்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகிறார்..அவருடன் ஒரு சிறு உரையாடல்..
‘ஃபில்டர் கோல்ட்’ என்கிற தலைப்பு ஏதோ விவகாரமாகத் தோன்றுகிறதே?
பரிச்சயமான வார்த்தையாக இருக்க வேண்டும். கதையையும் பிரதிபலிக்க வேண்டும் என்றே இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன். தங்கத்தை எவ்வளவு தீயிட்டுப் பொசுக்கினாலும் இறுதிவரை அது தங்கமாகவே இருக்கும். அதன் மதிப்பும் குறையாது. அப்படித்தான் மாற்றுப் பாலினத்தவரான திருநங்கைகளும் திருநம்பிகளும்.
குணத்தளவில் ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குச் சற்றும் குறையாத அனைத்து உணர்ச்சிகளும் கொண்டவர்கள். ஜனக் கூட்டத்தில் பெரும்பாலான மனிதர்கள் எப்படி சுத்தமான தங்கமாக இருக்கிறார்களோ. அப்படித்தான் திருநங்கைகள், திருநம்பிகள் கூட்டமும். அவர்களது உடல் வலிமையும் மன வலிமையும் தென்னிந்தியச் சூழலில் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளப்படவில்லை. அதை முழுமையாக வெளிப்படுத்தும் படம்.
சமீபகாலத்தில், மாற்றுப் பாலினத்தவரின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்று பாடம் நடத்திய பல படங்கள் வந்துவிட்டன. உங்கள் படம் என்ன சொல்ல வருகிறது?
இது மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை முறையைப் பேசும் படம் அல்ல. அவர்களைக் கொச்சைப்படுத்தும் படமும் அல்ல. கமர்ஷியல் படங்களில் மாற்றுப் பாலினத்தவர் இடம்பெற்றால், அவர்கள் துணைக் கதாபாத்திரங்களாகச் சுருக்கப்பட்டுவிடுகிறார்கள். ஒன்று அவர்கள் புனிதப்படுத்தப்படுகிறார்கள், அல்லது அவர்கள் வில்லன்களாக ஆக்கப்படுகிறார்கள். அந்த ஆதங்கத்திலிருந்து பிறந்த கமர்ஷியல் ஆக்ஷன் கதை இது. நமது கலாச்சாரச் சூழலில் அழகும் திறமையும் கொண்ட ஒரு திருநங்கையை ஒரு இளைஞன் காதலிக்க முடியுமா என்பதே பெரும் சர்ச்சை. அப்படியிருக்கும்போது அவர்களைக் கதையின் முதன்மை கதாபாத்திரமாக்கும் முழு நீள ஆக்ஷன் த்ரில்லர் கதை.
என்ன கதை, எங்கே நடக்கிறது?
தமிழகத்தில் திருநங்கை காவல் ஆய்வாளர், கேரளத்தில் திருநங்கை டாக்டர் என்று சமூகத்தில் உயர்ந்த ஒருசிலரைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், மாற்றுப் பாலினத்தில் சாமானியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மிக நேர்மையாகத் தகவமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
இந்தியா முழுவதும் 3 ஆண்டுகள் பயணித்து, அவர்களைச் சந்தித்து உரையாடியபின் இந்தக் கதையை ஒரு உண்மைச் சம்பவத்தின் சாயலுடன் எழுதினேன். மூன்று திருநங்கைகளைச் சுற்றி நடக்கும் கதை. காதல், பழிவாங்குதல் இரண்டும் திரைக்கதையின் முக்கிய உணர்வுகள். ஆனால், அந்த உணர்வுகள் உண்மையாக, ஏற்றுக்கொள்ளும்விதமாக இருக்கும்.
இதில், திருநங்கைகளையும் திருநம்பிகளையும் பார்த்து பரிதாபப்பட அறவே வழியில்லை. அவர்களது உடல் வலிமை, மன வலிமை, வீரம், நெஞ்சுரம், அஞ்சாமை, தலைமைக்கு கட்டுப்படுதல், குழுவாக வாழ்தலில் இருக்கும் அனுகூலம் ஆகிய குணங்களைக் காணலாம். இந்தப் படத்தைப் பார்த்தபின் திருநங்கைகள் மீதான பழைய பார்வைகளும் மதிப்பீடுகளும் மாறும் என்று நம்புகிறேன்.
இந்தியா முழுவதுமிருந்து வந்த 1,500 மாற்றுப் பாலினத்தவர் அவர்களது முக்கிய சடங்கை மையப்படுத்தியிருக்கும் பாடல் காட்சியில் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் நான், டோரா , சுகுமார் சண்முகம் நடித்திருக்கிறோம். பத்துக்கும் அதிகமான திருநங்கைகள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புதுச்சேரியிலும் சென்னையிலும் கதை நடக்கிறது.