

ஏதோ ஒரு தமிழ்ப் படப் பாடல் காட்சியில் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்திஜி தனது சகாக்களுடன் உப்பெடுக்க ஓட்டமும் நடையுமாய் விரையும் செய்திப்பட நறுக்கு ஒன்றும் காட்டப்படும். பட ஆரம்பத்தில் தங்களது அபிமானக் கதாநாயகனின் பெயரை டைட்டிலில் பார்த்தவுடன் கைதட்டி மகிழ்ந்த ரசிகர்கள் அப்போது மீண்டும் ஒரு முறை கைதட்டுவார்கள்.
காந்தியைத் திரையில் பார்க்கும்போதெல்லாம் மக்கள் பரவசப்பட்டார்கள். தமிழ்ப் படங்களில் மகாத்மா காந்தி பெரும்பாலும் பாடல் வரிகளில்தான் வந்து போவார். ‘புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக’, ‘மகான் காந்தி மகான்’ போன்று சில பாடல்களில் காந்தி குறிப்பிடப்படுகிறார். சத்தியம், தர்மம் போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சித்தரிக்கப்படும் காட்சிகளில் காந்தி படம் பிரேம் போடப்பட்டு மாட்டப்பட்டிருக்கும். இது போலவே காந்தி சிலைகளும் படங்களில் இடம்பெற்றுள்ளன.
விடுதலை அடையும் முன்னரே காந்தியின் கொள்கைகளைப் பரப்பப் பல மறைமுக உத்திகள் கையாளப்பட்டன. சரித்திர, புராணக் கதாபாத்திரங்கள் கதர் அணிவது, ராட்டை சுழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. காந்தியின் கொள்கைகளால் மாற்றம் அடையும் கதாபாத்திரங்கள் தியாக பூமி, சந்திரமோகன் ஆகிய படங்களில் வருகின்றன. காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ புத்தகம் ஏராளமான படங்களில் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கு காந்தி கூறிய அறிவுரை ஏ. பீம்சிங்கின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் இடம்பெறுகிறது.
காமுகனான தனது தாய்மாமனுக்கு புத்தி புகட்டுவதற்காகக் கதாநாயகி கங்கா, காந்தி எழுதியதைப் படித்துக் காட்டுகிறாள். “உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்கும்போது உனக்கு நான் அகிம்சையை போதிக்க மாட்டேன். அந்த மனித மிருகத்தை எதிர்த்து நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். உன்னிடம் ஆயுதம் இல்லாதிருந்தால் இயற்கை உனக்குத் தந்திருக்கும் பற்களும் நகங்களும் எங்கே போயின?” ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகிறது. பின்னர் நிலைமை அத்துமீறுகிறபோது மாமாவின் பெல்ட்டை எடுத்துப் பொருட்கள்மீது விளாசுகிறாள். அது காந்தியின் போதனையை அவள் உள்வாங்கிக்கொண்டதன் வடிவமாகிறது. அதன் குறிப்பை உணர்ந்த மாமா மனம் திருந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறார். பார்த்திபனின் ‘புதிய பாதை’ படத்தில் வரும் படிப்பறிவற்ற முரட்டு குணம் படைத்த கதாநாயகன் காந்தி படத்தைத் தன் வீட்டில் வைக்கிறான். தன் வீட்டில் ஒரு தாத்தா படம் இருக்கட்டும் என்று நினைத்து காந்தியை யார் என்றே அறியாமல் அவர் படத்தை அவன் இடம்பெறச் செய்கிறான். நகைச்சுவையை மட்டுமின்றி கதாநாயகனின் குணாதிசயத்தையும் அக்காட்சி வெளிப்படுத்தியது.
சில படங்கள் சில தடங்கள்
இத்தனை வருடத் தமிழ்ப்பட வரலாற்றில் கதாபாத்திரமாக காந்தி சில படங்களில் மட்டுமே வந்துள்ளார். அவற்றில் ஒன்று ஞானராஜசேகரின் ‘பாரதி’. அந்தப் படத்தில் உண்மைச் சம்பவத்தில் இடம்பெற்ற புனைவற்ற கதாபாத்திரமாக வந்துள்ளார் . காந்தியும் பாரதியும் சந்திக்கும் சுவையான காட்சி அது. சென்னைக்கு வந்த காந்தியை அவர் தங்கியிருக்கும் இடத்தினுள் திடுமென புகுந்து, தான் கூட்டியிருக்கும் கூட்டத்திற்கு வருமாறு கேட்கிறார் பாரதி. ஏற்கெனவே வேறு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்டுவிட்டதால் காந்தி தனது இயலாமையைத் தெரிவிக்கிறார். மனம் தளராத பாரதி, காந்தியின் செயல்பாடுகளுக்குத் தனது ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு வந்த வேகத்தில் திரும்பிவிடுகிறார். அவரை யார் என்று தெரிந்துகொள்ளும் காந்தி ‘இவரைக் கவனிப்பதற்குத் தமிழ்நாட்டில் யாருமில்லையா?’ என்று கேட்கிறார் .
கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் காந்தியைக் கொல்ல முற்படும் சாகேத்ராமன் மனம் மாறி அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறான். ஆனால் அதற்குள் கோட்சேயின் குண்டுகளுக்கு காந்தி இரையாகிறார். காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி இறுதிவரை சாகேத் வாழ்கிறான். அவனது இறப்புக்குப் பின் சாகேத்ராமனின் அறைக்குள் காந்தியின் பேரன் துஷார் காந்தியே செல்வதாகப் படம் உருவாக்கப்பட்டிருந்தது..
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை இந்தியர்களால் எடுக்க முடியாவிட்டாலும் அவரைப் பற்றிய சில படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. ‘த மேக்கிங் ஆப் மகாத்மா’ ஷ்யாம் பெனகலின் இயக்கத்தில் வந்தது. காந்தி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த வருடங்கள் பற்றிய அப்படம் சுமார் ரகத்தைச் சேர்ந்தது. பெரோஸ் அப்பாஸ் கான் இயக்கத்தில் வெளிவந்த ‘காந்தி மை ஃபாதர்’ படம் காந்திக்கும் அவரது மகன் ஹீராலாலுக்குமிடையான போராட்டமான உணர்வுகளை மிகவும் உணர்ச்சிபூர்வமாக காட்டியது. விது வினோத் சோப்ராவின் ‘லகே ரகோ முன்னாபாய்’ படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாவிடினும் ‘காந்திகிரி’ என்கிற புதிய சொல்லாக்கத்தையே உருவாக்கி ரசிகர்களுக்கு உயர்தரமான கேளிக்கையை அளித்தது.
கசப்பான வரலாறும் ஒரு பெருமையும்
காந்தி 1934-ல் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் பயணித்த தி.செ.செள.ராஜன் அந்த அனுபவங்களைத் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். முழு நீளத் திரைப்படமாக எடுப்பதற் கான எல்லா சாத்தியங்களையும் இப்புத்தகம் கொண்டுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தங்கள் வரலாற்றைத் திரைப்படமாகப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்துவது போல் அவ்வப்போது எடுக்கப்பட்டுவரும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் வசூல் விவரங்கள் அமைந்துள்ளன. ஜனரஞ்சகமான விஷயங்கள் அனைத்தும் கொண்டிருந்தும் தமிழின் சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கப்பலோட்டிய தமிழன்’ ஒரு தோல்விப் படமாகியது .
காந்தி பற்றி முழுநீளக் கதைத் திரைப்படம்தான் எடுக்க முடிய வில்லையேயொழிய அவரைப் பற்றிய முழு நீள ஆவணப் படத்தை ஒரு தமிழர் எடுத்திருக்கிறார் என்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம். அது இந்தியாவிலேயே காந்தி பற்றி எடுக்கப் பட்ட முதல் முழு நீள ஆவணப்படம் என்கிற சிறப்பையும் பெற்றுள்ளது . அந்தப் படத்தை எடுத்தவர் தமிழ் ஆவணப்பட முன்னோடி ஏ.கே. செட்டியார். திரைப்படங்கள் எடுப்பது ஸ்டுடியோ தொழிலாக இருந்த அந்தக் காலத்தில் தனிமனித முயற்சியாக உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொண்டு மூன்று வருட கால உழைப்புக்குப் பின் ‘வாழ்க்கைச் சித்திரப்படம் (டாகுமெண்டரி பிலிம்) இலவசமாகக் காண்பித்தால் கூட ஜனங்கள் பார்க்க வரமாட்டார்கள்’ என்கிற கேலிப் பேச்சுகளுக்கிடையே 12,000அடி நீளத்தில் ‘மகாத்மா காந்தி’ என்கிற பெயரில் படத்தைத் தயாரித்து 1940-ல் வெளியிட்டார் . அது தமிழ் சினிமா வரலாற்றின் மாபெரும் சாதனைகளுள் ஒன்று. அதில் காந்தி செய்திப் படங்களில் இடம்பெற்ற காட்சிகள் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெறப்பட்டுத் தொகுக்கப்பட்டிருந்தன. அந்தப் படத்தை காந்தி பார்க்கவில்லை. காந்தி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே படம் ‘ராமராஜ்யம்’என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை பற்றி அவர் ஏதாவது சொன்னாரா என்பதும் யாருக்கும் தெரியாது .