

தெய்வ சங்கல்பம் அல்லது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு இதுதான் ‘கவிக்குயில்’(1977) படத்தின் கதைக் களன். கடவுள் கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்ட கோபால் (சிவகுமார்), பிருந்தாவனத்தின் கண்ணன் போலவே புல்லாங்குழல் மீது காதல் கொண்டவன். வசதியான குடும்பத்தில் பிறந்து, கண்ணன் பக்தியால் புல்லாங்குழல் சகிதம் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிபவன். கனவில் கண்ணனால் அடையாளம் காட்டப்படும் ராதா (ஸ்ரீதேவி) மீது காதல் கொள்வான். அந்த ஏழைப் பெண்ணின் மனதில் வார்த்தைகளற்ற கீதம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவள் மனதுக்கு மட்டும் தெரிந்த அந்த மெட்டை கோபால் வாசித்துக்காட்ட இருவருக்கும் இடையில் காதல் ஜனிக்கும். தேவராஜ்-மோகன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, செந்தாமரை ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த தெய்வீகக் காதல் கதைக்குத் தனது உயிர்ப்பான இசையை வழங்கியிருப்பார் இளையராஜா.
ராதா மனதிலிருந்து கோபாலின் குழலுக்குக் குடிபெயரும் அந்த கீதம்தான் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’. கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய இப்பாடல் இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. காற்றில் கலந்து வரும் அந்த ரகசிய மெட்டின் குழலோசை தரும் பரவசம் ஸ்ரீதேவியை மட்டுமல்ல; நம்மையும் தொற்றிக்கொள்ளும். காந்தர்வ குழலோசையின் திசை நோக்கி ஸ்ரீதேவி ஓடிச் செல்லும்போது தடதடக்கும் ஜலதரங்கமும், பரிதவிப்பை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும் பரவசத்தின் சதவீதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பக்தி, காதல், பெருமிதம் என்று உணர்வுகளின் அலையில் மிதக்கும் குரலில் மெய்சிலிர்க்க வைப்பார் பாலமுரளி கிருஷ்ணா. மலைகளுக்கு நடுவே பரந்து கிடக்கும் சமவெளி முழுவதும் எதிரொலிக்கும் புல்லாங்குழலிசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் மனதின் ஏக்கத்தின் எதிரொலிபோல், காதல் கொண்ட குயிலின் பிரிவுத் துயரின் வெளிப்பாட்டைப் போல் ஒலிக்கும் புல்லாங்குழல், காலத்தையே உறையவைத்துவிடும். ‘உன் புன்னகை சொல்லாத அதிசயமா’ எனும் வரி பஞ்சு அருணாசலத்தின் மிக அழகான கற்பனை.
இப்பாடலின் இன்னொரு வடிவத்தை ஜானகி பாடியிருப்பார். காதலனால் ஏமாற்றப்பட்டதாகக் கருதி, தனது முடிவைத் தேடி மலை மீது ஏறிக்கொண்டே நாயகி பாடும் பாடல் இது. கொந்தளிக்கும் மனநிலையும் சுயஇரக்கமும் கலந்த உணர்வை நிரவல் இசையில் உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாடலில் ஏமாற்றத்தையும் திகைப்பையும் பிரதிபலிக்கும் வயலின் இசைக்கோவை ஒன்று கடந்துசெல்லும். கதையின் மொத்த சாரத்தையும் அந்த இசை உணர்த்திவிடும்.
ஏமாற்ற உணர்வை வெளிப் படுத்தும் இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘உதயம் வருகின்றதே…’. சாரங்கி, வயலின் சகிதம் மனதை நெகிழவைக்கும் பாடல் இது. இப்பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ‘மானத்திலே மீனிருக்க மருதையில நானிருக்க’ எனும் தொகையறாவைப் பாடியவர் இளையராஜாவின் ஆசான்களில் ஒருவரும், புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஜி.கே. வெங்கடேஷ்.
ரஜினி படாபட் ஜெயலட்சுமி ஜோடிக்கும் பாடல் உண்டு. ரஜினியை நினைத்து படாபட் பாடும் காட்சியில் இடம்பெறும் ‘மானோடும் பாதையிலே’ பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். சுஜாதா முதன்முதலில் பாடிய ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடலும் இப்படத்தில் இடம்பெற்றதுதான். புதிதாக மலரும் பூவின் சுகந்தத்துடன் ஒலிக்கும் இப்பாடலின் முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் மெல்லிய கோரஸ், மேலும் சுகம் சேர்க்கும். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. ‘ஆயிரம் கோடி காலங்களாக’ என்று தொடங்கும் அப்பாடல், கிருஷ்ணனைப் போற்றும் அசல் பக்திப் பாடல்!
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் ஜானகி பாடிய ‘குயிலே கவிக்குயிலே’. குருவிகளின் சிணுங்கலுடன் தொடங்கும் இப்பாடலில் முகப்பு இசை, மாயாஜாலங்களை நிகழ்த்தக் கூடியது. வயலின் கோவை அடுக்கின் மேலே ஷெனாய் ஒலி பரவும்போது காலத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை எங்கோ இழுத்துச்சென்றுவிடும். மனிதர்களின் குறுக்கீடற்ற இயற்கைப் பிரதேசத்தைப் போர்த்தியிருக்கும் பிரம்மாண்ட நிழல், கொஞ்சம் கொஞ்சமாக விலக, இயற்கையின் பேரழகு நம் கண் முன்னே விரிவது போன்ற உணர்வை, பாடலின் முகப்பு இசை தரும். இளமையின் பூரிப்பில் திளைக்கும் பெண், தனது விருப்பத்துக்குரிய ஆணுக்கான எதிர்பார்ப்பு பற்றி இயற்கையிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சியமைப்பு அது. தென்றலின் தீண்டல் தரும் சுதந்திர உணர்வுடன் தனது காதல் ஆசையை வெளிப்படுத்தும் பெண்ணின் அந்தரங்க உணர்வு. மிக மெல்லிய அந்த உணர்வைத் தனது இசையில் நுட்பமாக வெளிக்கொணர்ந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசை நம்மை உரசியபடி கடந்துசெல்லும் தென்றல், ஆளரவமற்ற அந்தப் பிரதேசத்தின் தாவரங்களை அசையச் செய்வது போன்ற உணர்வைத் தரும். கிட்டார், வயலின், ஷெனாய் இசைக் கலவையை அதில் ஒலிக்க விடுவார் இளையராஜா. மூன்று சரணங்களைக் கொண்ட இப்பாடலில், இந்த இசையைத் தொடர்ந்துவரும் இரண்டாவது சரணத்தை வித்தியாசமான மெட்டில் அமைத்திருப்பார்.
கேட்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் பாடல்களைக் கொண்ட இப்படத்துக்கு ‘கவிக்குயில்’ என்ற பெயர்தான் எத்தனை பொருத்தமானது!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in படம் உதவி: ஞானம்