

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படமாகியிருக்கிறது 'பாவக் கதைகள்'. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றிருக்கும் 4 படங்களை வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ஆணவக் கொலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜியில், ‘ஓர் இரவு' என்கிற கதையை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். அதில், முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. அது பற்றி அவரிடம் உரையாடியதிலிருந்து...
முதல் முறையாக ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்திருக்கிறீர்கள்...
சந்தேகமில்லாமல் புதிய அனுபவம்தான். எதையெல்லாம் வாழ்வில் சகஜமான விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் எனப் புரியவைத்த அனுபவம் இது. ஒரு உதாரணத்துக்கு, நம் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கென்றே தனிப் பாத்திரங்கள் வைத்திருப்போம். அது ஏன் என்று இதுவரை எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. இப்படி நிறைய… இவ்வளவு காலமும் இந்த முரண்பாடுகளை, வஞ்சனையைத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வெட்கப்பட வைத்துவிட்டது ‘ஓர் இரவு’ பட அனுபவம்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததைப் பற்றி?
அவரது படங்களைப் பார்த்திருக்கிறேன். வன்முறை என்றால் ரத்தம், வெட்டு, குத்து எனக் காட்டத் தேவையில்லை. அமைதியாக வெளிப்படுத்தப்படும் மனித குணாம்சங்களில்கூட அதிக வன்முறை இருக்கும். மகள் இறந்து கொண்டிருக்கும்போது, மரணத்தில் வலியால் அவள் கதறும்போது, அதைக் கேட்டு, அதனால் அசைக்கப்படாமல் ஒரு தந்தை இருந்தால் அதுவும் வன்முறையின் மற்றொரு வடிவம்தான். இதை நான் படப்பிடிப்புக்கு முன்பு எதிர்பார்க்கவில்லை. கதையின் முடிவு இதுதான் என்று தெரியும். அதைக் காட்சியில் கொண்டுவர வெற்றிமாறன் எங்களை எப்படி நடிக்க வைப்பார் என்று யோசித்தேன். எப்படியோ அது நடந்துவிட்டது. அந்தச் சூழல், எனக்குத் தரப்பட்ட ஒப்பனை, கர்ப்பமான பெண்போல் எனது வயிற்றுப்பகுதிக்கு இடப்பட்ட ஜோடனை என எல்லாம் சேர்ந்துகொண்டபோதே நான் கதாபாத்திரமாக மாறத் தொடங்கிவிட்டேன்.
அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில்தான் வசனங்கள் உருவாகின. எனக்கு அந்தப் பாணி புதியது. எல்லோருக்கும் இது பழகியிருக்கிறதே, நமக்கு மட்டும் பழகவில்லையே என்று வருத்தப்பட்டேன். ஏனென்றால் வசனம் முன்னதாகவே தெரிந்தால்தான் அதைப் படித்து மனப்பாடம் செய்துகொண்டு, நானே ஒத்திகை பார்த்துவிட்டு, பின்னர் சரியான வகையில் பேசுவது வழக்கம். ‘ஆன் தி ஸ்பாட்’ வசனத்தைக் கேட்டுவிட்டு நடித்தபோது, மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதுவும் பழகிவிட்டது.
சோகமான படங்களை விரும்பிப் பார்ப்பீர்களாமே, ஏன்?
சோகம் என்பதைவிட, வாழ்க்கையில் இருக்கும் உண்மைகளைக் கூறும் படங்களைப் பார்ப்பதில் எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. சாலையில் சிக்னலுக்காகக் காத்திருப்போம். அப்போது நம் கார்களை துடைத்துவிட்டு காசு கேட்கும் சிறுவர்களைப் பற்றி நினைத்திருக்கிறீர்களா? அவர்கள் அந்தப் பணத்தை தங்கள் அம்மாவிடம் கொடுப்பார்கள். அவரிடம் ஒரு கைக்குழந்தை இருக்கும்.
எனக்கே இந்த நிலைமை இருக்கும்போது, ஏன் இன்னொரு குழந்தையை அம்மா பெற்றுக்கொண்டார் என்று அந்தச் சிறுவர்கள் நினைத்திருப்பார்களா என்று நான் யோசித்திருக்கிறேன். இந்த எண்ணத்தை ஓட்டியே ‘கேபர்நாம்’ (Capernaum) என்கிற லெபனான் நாட்டுப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதை நெட்ஃபிளிக்ஸில் பார்த்து மனம் உடைந்து போனேன். கசப்பான உண்மைகளை ஒளித்து வைக்காமல் பேசிய படம். நாமும் அதுபோல் கசப்பான உண்மைகளைப் படமாக்கிவருகிறோம். ‘ஓர் இரவு’ம் அப்படியொரு கசப்பான உண்மைதான்.
கரோனா தொற்றுப் பின்னணியில் படப்பிடிப்புகள் எப்படி நடத்தப்பட்டன?
இப்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறேன். அவர்கள் அதிக முன்னெச்சரிக்கையோடு படப்பிடிப்பை நடத்துகிறார்கள். அனைவருக்கும் வெப்பப் பரிசோதனைசெய்கிறார்கள். அதற்குமுன் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் ‘லவ் ஸ்டோரி' என்கிற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்தேன். பெரும்பாலானவர்களுக்கு கரோனா தொற்று வந்து போய்விட்டதால் படக்குழுவினருக்கு பயம் போய்விட்டது. 'விராட பருவம்' படப்பிடிப்பு அதிகக் கட்டுப்பாடுகளுடன் நடந்துவருகிறது. காட்சியின்போது மட்டும் சேர்ந்து நின்றுவிட்டு, நடித்து முடித்ததும் அனைவரும் சமூக இடைவெளியுடன் விலகியே நிற்போம். இப்போது எல்லோருடைய மனதிலிருந்து கரோனா பயம் கிட்டத்தட்ட விலகிவிட்டது என்று சொல்லலாம்.
இவ்வளவு பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் மருத்துவம் படிக்க நேரமிருக்கிறதா?
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் ஆறு வருடங்கள் மருத்துவம் படித்தேன். அதுவும் இந்த கரோனா காலத்தில் மருத்துவர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். ‘அடச்சே...! நாம் தேர்வு எழுதி முடித்திருந்தால் இந்தக் காலத்தில் ஒரு மருத்துவராகப் பலருக்கும் சிகிச்சை அளித்து உதவியிருக்க முடியுமே’ என்று நினைத்தேன். சிறந்த மருத்துவராக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் படித்தேன். யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கோயம்புத்தூரிலிருந்து தூரமாக இருக்கும் ஒரு மையத்தைத் தேர்வுசெய்து தேர்வுகளை எழுதினேன். ஆனால், அது எப்படியோ வெளியில் தெரிந்துவிட்டது. முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.