

கதாநாயகன் ஆகவும் இயக்குநர் ஆகவும் மாறுவதற்கு ஏழு கடல், ஏழு மலை தாண்டிய காலமெல்லாம் கடந்துபோய்விட்டது. சுவாரஸ்யமான நல்லக் கதையும் பல குறும்படங்களில் நடித்த அனுபவமும் இருந்தால் போதும். படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவிடலாம். அந்த வழியைத்தான் தேர்ந்துகொண்டிருக்கிறார் மனு பார்த்திபன். ‘டைம் அப்’ என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்திருக்கும் அவரிடம் உரையாடியதிலிருந்து...
‘டைம் அப்’ என்கிற தலைப்பு கதாநாயகனுக்கான சவாலைக் குறிப்பிடுகிறதா?
ஆமாம்! கதாநாயகனுக்கான 30 நாள் கெடு. நிபந்தனைகளுடன் கூடிய டாஸ்க்குகள் பலவற்றை அவர் எப்படிச் சமாளிக்கிறார்… ஒவ்வொரு நாளையும் அவர் எப்படிக் கடந்து வருகிறார் என்பதைக் குறிக்கவே இந்தத் தலைப்பு. படம் தொடங்கிய 10-வது நிமிடத்திலிருந்து நொடி முள்ளோடு நகரும் திரைக்கதை.
என்ன கதை?
கதாநாயகன், தீவிரக் கமல் ரசிகர். ‘கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாகயிருக்கும்’ என்று அவரைப் போலவே பேசி, அன்றாடம் பகுத்தறிவு பன்ச்களைக் கூறிக்கொண்டு வலம்வருபவன். ஒரு கோயிலுக்குச் சென்றிருக்கும்போது, அங்கே ‘கடவுளுக்கே சவால்’ விடும் விதமாகப் பேசிவிடுகிறான். அந்தக் கோயிலை அவன் கடந்துசெல்லும் முன்பு மொட்டை ராஜேந்திரனைச் சந்திக்கிறான். அவர் ஒரு ஃபாண்ட்ஸி கேரக்டர்.
‘30 நாள்களுக்குள் நான் கொடுக்கும் வேலைகளை முடிக்காவிட்டால், நீ இறந்துவிடுவாய்’ என்று நாயகனை எச்சரித்து கெடு விதிக்கிறார். தொடக்கத்தில் அதை நம்பாத நாயகன், பிறகு அவர் சொன்னவை ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும்போதும் குலைநடுங்கிப்போய் அவர் கொடுக்கும் டாஸ்க்குகளை எதிர்கொள்ளத் தொடங்குகிறான். என்ன மாதிரியான டாஸ்க்குகள், அவற்றைக் கதாநாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.
மொட்டை ராஜேந்திரன் கடவுளின் பிரதிநிதியா?
அப்படியும் சொல்லலாம். ஒரு சீரியஸான விஷயத்தை சிரிப்பு தடவிச் சொல்லும்போது அது கேலிக்கூத்தாக மாறிவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மொட்டை ராஜேந்திரனோடு ‘லொள்ளு சபா’ மனோகர், ஆதித்யா கதிர் எனப் பிரபலமான நகைச்சுவை நடிகர்களுக்கு போதிய முக்கியத்துவம் உண்டு. நகைச்சுவைக்கும் காதலுக்கும் நடுவே நேரத்தின் அருமையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
இந்தக் கதையில் காதலை எப்படி நுழைத்தீர்கள்?
கதாநாயகனாக நான் நடித்திருக்கிறேன். அதுவும் குணா என்கிற பெயருடன் கமலின் ரசிகனாக. கமல் சாரின் பெயரைக் காப்பாற்றும்விதமாக காதலைத் திறமையாகக் கதையில் நுழைத்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். முறையாக அனுமதி பெற்று ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான்..’ பாடலை எல்.ஜி.பாலா இசையில் ரீமிக்ஸ் செய்திருக்கிறோம். கதாநாயகியாக மோனிகா சின்னக்கோட்லா நடித்திருக்கிறார். கதையின் மீது நம்பிக்கை வைத்து நான் கதாநாயகனாக நடிப்பதையும் ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் கலைச்செல்வனுக்கு கடவுள் புண்ணியத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.