காற்றில் கலந்த இசை 25 - தரை மீது சிணுங்கும் மெல்லொலி

காற்றில் கலந்த இசை 25 - தரை மீது சிணுங்கும் மெல்லொலி
Updated on
2 min read

சமூக அமைப்பின் கரடுமுரடான அடுக்குகளாலும், குடும்பச் சிக்கல்களாலும் காயப்பட்டு, உள் சுருங்கும் மனதுடன் தங்கள் வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிடும் பாத்திரங்களைத் திரைப்படங்களில் மிக நுட்பமாகச் சித்தரித்தவர் மகேந்திரன். அன்பு நிறைந்த உலகின் பிரஜைகளைத் தனது பிரதான பாத்திரங்களாக அவர் உருவாக்கியிருப்பதை, அவரது எல்லாப் படங்களிலும் உணர முடியும்.

‘சாவி’ இதழில் தான் எழுதிய தொடர்கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய படம் ‘மெட்டி’ (1982). செந்தாமரை, விஜயகுமாரி, சரத்பாபு, ராஜேஷ், வடிவுக்கரசி, ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு போன்ற திறமையான கலைஞர்கள் பங்கேற்ற படம் இது. மகேந்திரன் உருவாக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் தரும் கலைஞரான இளையராஜாவின் இசையில் வெளியான படம்.

படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல், இளையராஜா ஜானகி பாடிய பாடல்களில் மிகச் சிறப்பானது. இப்பாடலில் ஆண்-பெண் குரல்கள் ஒலித்தாலும், பாடல் காட்சியில் இடம்பெறுவது ஆதரவற்ற தாயும் அவரது இரு மகள்களும்தான். கடலலைகளுக்கு அருகே பிரத்யேக உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அன்பின் திளைப்பில் மூழ்கும் அப்பெண்களைத்தான் பாடலில் காட்டியிருப்பார் மகேந்திரன். திருமணமான பெண்களின் அடையாளமான மெட்டியை இப்படத்தில் ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கும் மகேந்திரன், பாடலின் ஒலிவடிவத்தைக் கடந்த காலத்திலிருந்து ஒலிக்க விட்டிருப்பார்.

எழுந்துகொண்டிருக்கும் அல்லது மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் மஞ்சளும் சிவப்புமான கதிரொளியில் வானில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான ஓவியத்தின் கீழே பரவிச் செல்லும் இப்பாடலை, ஜானகியின் இனிமையான முணுமுணுப்பு தொடங்கிவைக்கும். மற்றொரு அடுக்கில், ஏகாந்தமான குரலில் இளையராஜாவின் ஆலாபனை ஒலிக்கும். இளையராஜாவின் சற்றே கணகணப்பான குரலில் காதலும் பாந்தமும் நிரம்பித் ததும்பும்.

பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் இசைப் பாலத்தின் இழைகளை வயலினால் நெய்திருப்பார் இளையராஜா. 16 வினாடிகள் நீளும் அந்த ஒற்றை வயலின் இசையில், உலகின் சவுந்தர்யங்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருப்பார் மனிதர். அறியாத தீவு ஒன்றில், நாணல்கள் அடர்ந்த கடற்கரையில் உலவும் உணர்வைத் தரும் நிரவல் இசை அது.

முதல் நிரவல் இசையில் வயலின் இசை என்றால், இரண்டாவது நிரவல் இசையில் 13 வினாடிகளுக்கு நீளும் ஜானகியின் ஹம்மிங் நம்மை இருந்த இடத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் மிதக்கச் செய்துவிடும். தமிழ் தெரிந்த தேவதை ஒன்றின் வருகையை உணர்வது போல் தோன்ற வைக்கும் ஹம்மிங் அது. பாடலின் இடையே அவ்வப்போது சிணுங்கும் கணங்களிலும் ஜானகியின் குரல் சிலிர்ப்பூட்டும். ‘பார்வை பட்ட காயம்… பாவை தொட்டு காயும்’ எனும் கங்கை அமரனின் கற்பனை அலாதியானது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு தன் பின்னே சுற்றும் எழுத்தாளர் ராஜேஷிடம், ‘நிபந்தனை’களுடன் ராதிகா பாடும் பாடல், ‘கல்யாணம் என்னை முடிக்க’. மனதுக்கு மிக நெருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் ஜென்ஸி. இடையிடையே, ரயிலில் திருமணம், ‘நொச்சிக்குப்பம் பச்சையப்பன் குரூப்’பின் நாதஸ்வர இசை என்று கலகலப்பான கற்பனைகளைக் கொண்ட பாடல் இது. அழுத்தங்களுக்கு இடையே சற்று சிரிக்கவும் தெரிந்திருக்கும் பெண்களின் மெல்லிய குறும்புகளை இப்பாடல் பதிவுசெய்திருக்கும்.

அதே படத்தில் மிக முக்கியமான மற்றொரு பாடல், கே.பி. பிரம்மானந்தன் பாடிய ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்’. தனது தங்கையின் திருமணம் பற்றிய கனவுகளுடன் அண்ணனும், அண்ணனின் அளவற்ற அன்பில் திளைக்கும் தங்கையும் தோன்றும் இப்பாடல், ஒரு பாடலின் இனிமை குலையாமல் படமாக்குவது எப்படி என்பதற்கான பாடம் எனலாம். மெல்லிய மாலைப் பொழுதின் கடலலைகள், அடர் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட நிலங்கள், சூரிய ஒளியில் மின்னும் சில்வர் குடங்கள் என்று அசோக்குமாரின் மேன்மையான ரசனையின் துணையுடன் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

வெல்லத்தின் பாகைக் குழைத்து இழையாக நீட்டிச் செல்வதுபோன்ற உச்சபட்ச இனிமை கொண்ட வயலின் இசையுடன் இப்பாடல் தொடங்கும். ‘…மனதினில் இன்பக் கனவுகளே’ எனும் வரிகளை ரசித்தபடி ஆமோதிக்கும் வகையில், வீணை இசையின் சிறு துணுக்கை ஒலிக்கவிடுவார் இளையராஜா. அந்த ஒற்றைக் கணத்தில் மனம் நிறைந்துவிடும். தொடர்ந்து ஒலிக்கும் பாடல் முழுவதும் அந்த இனிமையின் நீட்சிதான்.

மதுக்கூர் கண்ணன் எழுதிய ‘ராகம் எங்கேயோ… தாளம் எங்கேயோ’ பாடல், பிரம்மானந்தன், உமா ரமணன், சசிரேகா பாடியது. அழுத்தமான கஜல் பாடல் பாணியில் அமைந்த இப்பாடலில், தாயின் இழப்பு தரும் தாங்க முடியாத துயரத்தை இசைத்திருப்பார் இளையராஜா. மலையாளத்தில் மிக நுட்பமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரம்மானந்தன் தமிழில் பாடிய படம் அநேகமாக ‘மெட்டி’ மட்டும்தான். அந்த வகையில் அற்புதமான அந்தப் பாடகனுக்குத் தமிழ் மண் செலுத்திய மரியாதை தான், அவரது குரலில் ஒலிக்கும் இந்த இரண்டு பாடல்களும்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in