

கூத்துப் பட்டறையிலிருந்து திரையில் நுழைந்து நேர்த்தியான நடிகர் எனப் பெயர்பெற்றவர் விதார்த். மண்வாசனைக் கதைகளில் கச்சிதமாகப் பொருந்திவிடும் இவரை, வெகுவாகக் கவர்ந்திருக்கிறார் வெற்றி துரைசாமி என்கிற அறிமுக இயக்குநர். அவரது இயக்கத்தில் ‘என்றாவது ஒருநாள்’ படத்தில் நடித்துவரும் விதார்த்துக்கு ஜோடி ரம்யா நம்பீசன். படம் பற்றி வெற்றி கூறும்போது, “பல உண்மைச் சம்பவங்களை நாளிதழ்களில் சிறு செய்தியாக வாசித்தபின் எளிதில் கடந்து வந்திருப்போம். ஆனால், சிலவற்றை அப்படிக் கடந்துவிட முடியாது.
அப்படித் தொந்தரவு செய்த சில செய்திகள் - செய்திக் கட்டுரைகளின் தாக்கத்தில் நான் எழுதியிருக்கும் திரைக்கதைதான் ‘என்றாவது ஒருநாள்’ படமாக உருவாகியிருக்கிறது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டுவந்த இடப்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்கள் எனப் பல முக்கியப் பிரச்சினைகளை காட்சிகளாக அமைத்து, மக்களை யோசிக்க வைக்கும் வகையில் படம் உருவாகியிருக்கிறது” என்கிறார். ‘தி தியேட்டர் பீப்பிள்' நிறுவனம், இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பில் களம் இறங்கியிருக்கிறது.
இடி, மின்னல் கூட்டணி!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி, பாக்ஸ் ஆபீஸைக் கிடுகிடுக்க வைத்த படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு முற்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெற்றதாக சித்தரிக்கப்பட்ட கற்பனைக் கதையுடன் வெளியானது. அதில் சில உண்மைகளின் பிரதிபலிப்பும் பிரம்மாண்ட ஆக்ஷனும் இருந்ததால் வரலாறு காணாத வெற்றிபெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ்.
தற்சமயம், ‘யுவரத்னா’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களை அதே பிரம்மாண்டத்துடன் தயாரித்துவரும் இந்நிறுவனம், ரசிகர்களால் ‘டார்லிங்' என அழைக்கப்படும் பிரபாஸுடன் கூட்டணி அமைத்து, அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. கூகுளில் அதிகம் தேடப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் 'கே.ஜி.எஃப்' படப் புகழ் பிரஷாந்த் நீல் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘சலார்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை, பிரபாஸின் ரசிகர்கள் பதிவிட்டு ‘இடி, மின்னல் கூட்டணி’ என இணையத்தில் வருணித்து வருகின்றனர்.
தமிழ்ப் பெண்ணுக்கு மரியாதை!
தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கான இடம் அரிதாகவே கிடைக்கிறது. தற்போது சந்தானம் நடித்துவரும் ‘பாரிஸ் ஜெயராஜ்' படத்தில், 2 கதாநாயகிகளில் ஒருவராக இணைந்திருக்கும் சஷ்டிகா ராஜேந்திரன் ஒரு தமிழ்ப் பெண். சன் டிவியின் ‘டிக் டிக் டிக்’ உட்பட பல நிகழ்ச்சிகளில் திருத்தமாகவும் அழகாகவும் தமிழை உச்சரித்து பார்வையாளர்களின் செல்லமாக இருந்துவருகிறார். இவரது தமிழ் உச்சரிப்பு - சுட்டித்தனங்களுக்காகவே, இயக்குநர், நாயகன் ஆகிய இருவரது ஒப்புதலையும் பெற்று, இவரை கதாநாயகியாகத் தேர்வுசெய்திருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளரான லார்க் ஸ்டியோஸ் கே.குமார்.
கடந்த ஆண்டு சந்தானத்துக்கு பெரும் வசூல் வெற்றியாக அமைந்த, ‘ஏ-1’ படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம் இணைந்திருக்கும் படம் இது. இதனால் சந்தானம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை, ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப அணியும் படத்துக்கு வலுசேர்த்திருக்கிறார்களாம்.
ஊடுருவும் கதை!
தற்காலத் தலைமுறை அறிந்திராத வடசென்னையின் வீர அடையாளங்களில் ஒன்று குத்துச்சண்டைப் போட்டிகள். 90-கள் வரையிலும் சிறப்பாக நடைபெற்றுவந்த போட்டிகளில் அதன்பிறகு அரசியலும் வன்மமும் நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தக் களத்தை பல கமர்ஷியல் சினிமாக்கள் ஏற்கெனவே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால், குத்துச் சண்டை வீரர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்கும்விதமாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கியிருக்கிறாராம் பா.இரஞ்சித்.
இந்தப் படத்தில் அந்தப் பரம்பரையில் வரும் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் ஆர்யா. இதற்காகக் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு 8 அடுக்கு உடற்கட்டு தெரியும்விதமாக உடலை உருமாற்றி நடித்திருக்கிறார். கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் துஷாரா.
பிப்ரவரியில் 18-வது பதிப்பு!
சென்னையின் டிசம்பர் மாத முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, 9 நாள் கோலாகலமாக நடைபெறும். இதில் பங்குபெற, தமிழகம் முழுவதுமிருந்து உலக சினிமா ஆர்வலர்களும் காட்சித் தகவலியல் பயிலும் மாணவர்களும் திரள்வது வழக்கம். இம்முறை கரோனா பெருந்தொற்றின் காரணமாக, சென்னை சர்வதேசப் பட விழாவின் 18-வது பதிப்பு, நடப்பு டிசம்பர் 2020-க்கு பதிலாக 2021 பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. இப்பட விழாவை கடந்த 17 ஆண்டுகளாக ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கம் இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இது பற்றி சங்கத்தின் பொதுச்செயலரும் திரைப்பட விழா இயக்குநருமான தங்கராஜிடம் கேட்டபோது, “எப்போதும்போல், தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்த இருக்கிறோம். இதில் உலக சினிமா பிரிவில் 65 நாடுகளின் விருதுகளையும் பரிசுகளையும் குவித்த படங்கள், தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி, இந்தியன் பனோரமா பிரிவு, ரெட்ரோஸ்பெக்டிவ், கன்ட்ரி ஃபோகஸ் ஆகிய பிரிவுகளுடன் சென்னை அரசு திரைப்படக் கல்லூரி டிப்ளமோ மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களையும் திரையிடத் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.ஆர்யாசஷ்டிகா ராஜேந்திராவிதார்த், ரம்யா நம்பீசன்