Published : 27 Nov 2020 07:20 am

Updated : 27 Nov 2020 09:31 am

 

Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 09:31 AM

ஒளிரும் நட்சத்திரம்: புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்!

glowing-star

மக்கள் மத்தியில் நட்சத்திரமாக அங்கீகாரம் பெற்றுவிட்ட ஒரு நாயக நடிகர், கதாபாத்திரங்களைத் தேடி அலைவது அரிதாகி வரும் காலம் இது. தனது படத்தைப் பார்க்கும் ரசிகனின் மனதில் நாயகத்தன்மை ஆதிக்கம் செலுத்தாமல் கதாபாத்திரம்தான் மனதில் நிற்க வேண்டும் என எண்ணும் நடிகர், ஒரு நட்சத்திரமாகவும் இருந்துவிட்டால் அற்புதம் நிகழ்வது எளிதாகிவிடுகிறது.

அப்படி ஒரு கதாபாத்திரத்துக்காக இயக்குநரிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் நடிகனைக் காலமும் ரசிகர்களும் கைவிடுவதே இல்லை. நெடுமாறன் ராஜாங்கமாக தன்னை முழுமையாக முன்னிறுத்திய ‘சூரரைப் போற்று’ சூர்யாவை உலகம் முழுவதும் வாழும் தென்னிந்திய ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் உள்ளடக்கம் கையாளப்பட்ட விதம் குறித்து எதிர் விமர்சனங்கள் இருந்தபோதும், அவற்றிலும்கூட சூர்யாவின் ‘கூடு பாயும்’ நடிப்பைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.


இந்த நடிப்பின் உச்சத்தை சூர்யா அவ்வளவு சுலபமாக அடைந்துவிடவில்லை. படித்துவிட்டு, ஆயத்த ஆடைகள் தயாரிப்புத் துறையில் கவனம் செலுத்திய சூர்யா, விருப்பப்பட்டுத் திரைத் துறைக்குள் நுழையவில்லை. ஒரு விபத்து போலத்தான் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் நடித்த அரை டஜன் படங்களும் சூர்யா என்ற இளைஞரின் இருப்பைப் பதிவுசெய்ய மட்டுமே பயன்பட்டன. அதற்காக அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார்.

மறக்க முடியாத 3 இயக்குநர்கள்

சூர்யாவுக்குள் இருக்கும் நடிகரைக் கண்டுகொண்டு, அவரை அவருக்கே அடையாளப்படுத்தியது இயக்குநர் பாலாவின் ‘நந்தா’. 6 படங்களில் நடித்தும் நிகழாத மேஜிக், பாலா படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடந்தது. தமிழ் சினிமா சூர்யாவை ஆச்சரியத்துடன் திரும்பியும் விரும்பியும் பார்த்தது. நடிப்பின் முக்கியப் பரிமாணம் நகைச்சுவை உணர்வு. அதை ‘பிதாமக’னில் வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்தார். பாலா அவரை முழுமையாக அடையாளம் காட்ட முயன்றார்.

கௌதம் மேனன், ‘காக்க காக்க’ படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக சூர்யாவைக் கச்சிதமாக வார்த்தார். மிடுக்கான தோற்றத்தில் கம்பீரமான நடிப்பில் கவனஈர்ப்பை ஏற்படுத்தியவர், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ‘நான் இதைச் சொல்லியே ஆகணும். நீ அவ்ளோ அழகு’ என ரொமான்ஸில் சொக்க வைத்தார். அதில் சூர்யாவின் இரட்டை வேடங்கள் அப்ளாஸ் அள்ளின.

சூர்யாவை இப்போதும் கௌதம் மேனன் பதிப்பு, ஹரி பதிப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உயர்தட்டு நவீன இளைஞனோ அல்லது தரை லோக்கல் ரவுடியோ, மாஸான காவல் அதிகாரியோ இரண்டு விதங்களிலும் பிரித்து மேய்வதில் விற்பன்னர் சூர்யா. அவரால் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆகவும் அதிரடி காட்ட முடிந்தது. ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா. பார்க்கறியா’ என பன்ச் வசனம் பேசி, துரைசிங்கமாக சிலிர்த்தெழவும் முடிந்தது. இந்த இருவித பாணியிலான நடிப்புதான் அவரை கமர்ஷியல் ஹீரோவாக சாகசம் புரியவைத்தது. அதன் பலனாய் ‘சிங்கம் 2’ படத்தின் வசூல் ரூபாய் 100 கோடி கிளப்பில் இணைந்து.

தேடினால் கிடைக்கும்

இன்னொரு பக்கம் ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘கஜினி’, ‘மாற்றான்’, ‘பசங்க -2’, ‘ஏழாம் அறிவு’, ‘24’ என கமர்ஷியல் கலந்த பரிசோதனை முயற்சிகளிலும் பக்காவாகப் பொருந்தினார். ‘உன்னை நினைத்து’, ‘மௌனம் பேசியதே’, ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களிலும் வெகுஜன மக்களைக் கவர்ந்தார். சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் நடிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அவர்கள் மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரே மாதிரியான கதையமைப்பில், ஒரே மாதிரியான நடிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனால் புதுமை, வித்தியாசம், பரிசோதனை முயற்சிகளுக்குப் பலர் இடம் கொடுப்பதில்லை.

ஆனால், சூர்யா இதில் விதிவிலக்கு. கதாபாத்திரத்தை மெருகூட்ட, மிகச்சிறந்த நடிப்பைக் கொடுக்க ஒவ்வொரு படத்துக்கும் மெனக்கெடுகிறார். கமர்ஷியல் நாயகனாக நடிக்கும் அதேநேரம் நல்ல கதாபாத்திரங்களையும் தேடியலையும் அரிதான நட்சத்திர நாயகனாக இருக்கிறார். இந்தத் தேடலே அவரிடம் ‘நெடுமாறன் ராஜாங்கம்’ போன்ற கதாபாத்திரங்களைக் காலம் அவரது கையில் கொண்டுவந்து ஒப்படைத்துச் செல்கிறது.

புதுப்பிக்கப்பட்ட நடிப்பு

‘சூரரைப் போற்று’ படத்தில் தன் இலக்கை அடையக் கடைசிவரை போராடும் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற இளைஞனாக சூர்யா நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் ஹீரோ ஆகிற, கதாபாத்திரம் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி சவால்விட்டு எதிரியைத் தோற்கடிக்கிற நாயக பிம்பமும் இல்லை. ஏன்… தனக்கு எதிராகச் சதி செய்பவர்களைப் புரட்டி எடுக்கும் ஒரு சண்டைக் காட்சிகூட இல்லை. இறுதியில் வெற்றிப் பெருமிதத்துக்கான புன்முறுவல் அறவே இல்லை. படம் முழுக்க இறுக்கமான, உறுதியான, தீவிரமான சூர்யாவைப் பார்க்கலாம். ஆனால், சிரிக்கும் சூர்யாவை மட்டும் பார்க்க முடியாது. முந்தைய படங்களில் தன் உடல்மொழி, முக பாவனைகள் உள்ளிட்ட எந்த நடிப்புச் சாயலையும் இதில் சூர்யா பிரதிபலிக்கவில்லை. மாறாக, தன் நடிப்பைப் புதுப்பித்துக்கொண்டார்.

தந்தை மரணப்படுக்கையில் இருக்கும்போது விமானப் பயணம் போகக் காசில்லாமல் அங்கு உள்ள சக பயணிகளிடம் கெஞ்சி, அழுது, பிச்சையெடுக்கும் காட்சியில் நடிப்பது மிகச் சவாலானது. தான் என்கிற ஈகோவை அழித்து கதாபாத்திரமாகவே மாறும்போதுதான், அந்தக் கையறு நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்த முடியும். அதில், பார்ப்பவர்கள் கண்ணீர் சிந்தும் அளவுக்கு சூர்யா தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஊருக்குச் சென்று தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தாமதமாக வந்த தவிப்பை, ஊர்வசியின் கால்களில் விழுந்தபடி சொல்லும்விதம் சூர்யா நடிப்பில் பதித்திருக்கும் புதுத் தடம்.

நாயகத்தன்மையை முன்னிறுத்தாமல், சுய பிரக்ஞைக்கு இடம் கொடுக்காமல், கதாபாத்திரத்தின் உணர்வை முதன்மைப்படுத்தும் நடிகராலேயே இதுபோன்ற கூடுபாயும் நடிப்பை வழங்க முடியும். அந்த வரம் சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.

கமர்ஷியல் படங்களே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்காமல், புதுப்புது முயற்சிகளுக்காக தன்னை உந்தித்தள்ளும் மிகச் சிறந்த நடிகராக சூர்யா திகழ்கிறார். எந்தப் படத்திலும் நடிகராகத் தன் பங்களிப்பில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. அப்படிப் பார்த்தால் இந்த 23 ஆண்டு நடிப்புப் பயணம் சூர்யாவுக்கு நிறைவாகவே உள்ளது. அவருடைய நடிப்பு முறையில் ஏற்பட்ட மாற்றமும், பரிணாம வளர்ச்சியுமே அதற்கான சாட்சி.

கலைக்காக பரிசோதனை முயற்சி மேற்கொள்ளும் படங்கள், நாயக அம்சத்துக்காக கமர்ஷியல் படங்கள் என்று இரட்டைச் சவாரியில் சூர்யா துணிச்சலுடன் பயணம் செய்கிறார். ஒருவகையில் பார்த்தால் இவர் கமலின் 2.0 வெர்ஷன் என்றுகூடச் சொல்லலாம். வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ சூர்யாவை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயார்படுத்தும் என்று நம்பலாம். அதுவரை நெடுமாறன் ராஜாங்கம், ரசிகர்களுக்கான மாற்றில்லா உந்துசக்தியாக, உயர்ந்த ரசனைக்கான வானூர்தியாக இருப்பார் என்பது நிஜம்.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

படங்கள் உதவி: யுவராஜ்


ஒளிரும் நட்சத்திரம்கலைஞன்புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்சூர்யாசூரரைப் போற்றுகாக்க காக்கவாரணம் ஆயிரம்SuriyaSudha kongaraAparna BalamuraliSoorarai Pottru

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x