

மூன்று வெவ்வேறு நபர்களை தனித்தும் பிணைத்தும் பின்னிய கதைக்களம். அமானுஷ்யத்தில் தோய்த்தெடுத்த காட்சிகள், பார்வையாளரை நகரவிடாத ‘நான்-லீனியர்’ திரைக்கதை என ரசனைகளுக்குக் குறைவைக்காத முழுநீளத் திரைப்படம் ‘அந்தகாரம்’. இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து, அறிமுக இயக்குநர் விக்னராஜன் எழுதி இயக்கியிருக்கும் ‘அந்தகாரம்’, சில நாள்களுக்கு முன் (நவம்பர் 24) நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
பார்வையிழந்த வினோத் கிஷன், நூலகம் ஒன்றில் பணிபுரிந்தபடியே ஆவிகளுடன் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரனாகும் கனவில் சறுக்கிய அர்ஜுன் தாஸ், சிறுவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சியளிப்பதுடன், தொலைபேசியில் தன்னைத் துரத்தும் மர்ம குரலோடு அல்லாடுகிறார். சொந்த வாழ்வின் கோரங்களுடன் கோமாவிலிருந்து மீளும் மனோத்துவ மருத்துவர் குமார் நடராஜன், தனிப்பட்ட காரணங்களுடன் தனது மருத்துவ சேவையைப் புதிரான போக்கில் தொடங்குகிறார்.
மூவருமே பெரும் ரகசியங்களையும் புதிர்களையும் சுமந்து திரிகிறார்கள். ஆழமான தனிமையில் உழல்கிறார்கள். இவர்களை முன்வைத்து திகிலும் விறுவிறுப்பும் குன்றாத திரில்லராக நம்மை இருக்கையில் ஆணியடித்து உட்காரவைத்துவிடுகிறது ‘அந்தகாரம்’. படத் தலைப்பிலிருக்கும் இருளைப் புறத்திலும், மனித மனங்களிலும் துழாவும் திரைக்கதையின் அணுகுமுறை படத்தை ரசிப்பதற்கான துல்லியமான மனப்பாங்கைத் தந்துவிடுகிறது. மற்றபடி கதை குறித்து கூடுதலாக அறிந்துகொள்ளும் தகவல்கள் திரைப்படத்தை ரசிப்பதற்கான வாய்ப்புகளை சிதைக்கவே செய்யும்.
பற்ற வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றின் நீளமான திரியைக் கவனித்துக்கொண்டிருக்கும் திகில் அனுபவத்தை திரைக்கதை நெடுகிலும் பொதிந்துவைத்திருக்கிறார் இயக்குநர். காட்சிக்கு காட்சி மிளிரும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரையரங்குகளின் அவசியத்தை கோருகின்றன. காட்சிகள் தோறும் தெறிக்கும் பிரமிப்புகளுடன் ஒப்பிடுகையில், கதைக்கு நியாயம் சேர்க்கும் விவரணைகளைக் குறைத்திருந்தால், ‘ஓடிடி’ திரைக்கான பார்வை நேரத்தின் உணர்வைத் தந்திருக்கும். முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் கடைசி அரை மணி நேர ஓட்டத்தில் அதுவரை எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த கேள்விகளுக்கான பதில்களில் கொஞ்சம் சொதப்பல்கள் இருந்தாலும், திரை அனுபவத்துக்குக் குறை வைக்கவில்லை.
ஏமாற்றங்களின் சீற்றமும் இயலாமையுமாக வளைய வரும் ‘கைதி’ படப்புகழ் அர்ஜூன் தாஸ், பார்வையற்றவராக வரும் வினோத் ஆகியோரின் கதாப்பாத்திர சித்தரிப்புகள், அவர்களின் தனித்துவ உலகத்தில் தோய்ந்த வசனங்கள் ஈர்க்கின்றன. குறிப்பாக அர்ஜுன் தாஸின் நடிப்பு கதாபாத்திரத்தை முன்வைக்கும் தீவிரம் கொண்டது. அவரது தனித்துவமான குரலும் உடல்மொழியும் இன்னொரு ரகுவரனை வழங்க வாய்ப்பிருக்கிறது.
வழக்கமான அமானுஷ்ய த்ரில்லர்களிலிருந்து விலகி நிற்கும் நுட்பமும் சிக்கல்களும் பிணைந்த காட்சியமைப்புகள் படத்தின் பலம். அவற்றில் புதைந்திருக்கும் மனோத்துவம், இயல்புக்கு அப்பாற்பட்டதை அதன் தர்க்கங்களையும் மீறி படத்தில் ஒன்றச் செய்யும் கதையோட்டம் என முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க முயல்வதில் ‘அந்தகாரம்’ வெகுவாக கவனம் ஈர்க்கிறது.