

ஆவணப் படம்: தீவரைவு
தயாரிப்பு: கருந்திணை
இயக்கம்: பூங்குழலி
இறுகிய சாதியக் கட்டமைப்பின் காரணமாக இந்தியாவில் தினந்தோறும் கட்டவிழ்த்து விடப்படும் சமூக வன்முறைகளின் ரத்த சாட்சிகளை ஊடகங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டுவருகிறோம். சாதி மறுப்பாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் தொடர்ச்சியான, கூட்டு உழைப்பைவிட வலுவானதாக இருக்கிறது இந்தியாவில் நிலவும் சாதிய அமைப்பு.
இந்த நிலையில் சாதிக்கு எதிராக அறிவியலையும் மருத்துவத்தையும் கையில் எடுத்திருக்கிறார் தீவரைவு ஆவணப்பட இயக்குனர் பூங்குழலி.
சொந்தத்திற்குள் திருமணம் செய்வதால் ஏற்படக்கூடிய மருத்துவப் பாதிப்புகள் குறித்து சமீப காலங்களில் அதிக அளவில் பேசப்பட்டுவருகிறது. சாதி என்பதே நூறாண்டுக் கால சொந்தங்கள் என்பதை நிறுவுவதன் மூலம் சாதிக்குள் திருமணம் செய்வதும் மருத்துவச் சிக்கல்களை உருவாக்கும் என்கிற வாதத்தைத் தீவரைவு ஆவணப் படத்தின் மூலம் முன்வைக்கிறார் பூங்குழலி.
சொந்தத்திற்குள் திருமணம் செய்தால் உருவாகும் மருத்துவச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் சாதாரண தொனியிலேயே தொடங்குகிறது படம். சொந்தத்தில் நடந்த திருமணங்களில் பிறந்த மாற்றுத் திறனாளிகள், மருத்துவர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் என்று பல தரப்பினரிடமும் பேசி அப்படித் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கென இயங்கும் அமைப்பில் இருக்கும் பெரும்பாலானவர்கள், சொந்தத்தில் நடந்த திருமணங்களில் பிறந்தவர்கள் என்பது அதிர வைக்கும் செய்தி.
பிறகு மரபணு மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், ஆய்வாளர்களின் கூற்றுகள் வழியாக, சாதி என்பதே பல நூறாண்டுக் கால சொந்தங்கள்தான் என்பதை நிறுவுகிறது தீவரைவு. குறிப்பாக, மருத்துவர் ஜெயந்தினி, பேராசிரியர் சத்யபால் போன்றவர்கள் முன்வைக்கும் தர்க்கங்கள் வலுவானதாக, மறுக்கவிய லாததாக இருப்பதைக் குறிப்பிட வேண்டும். சாதிக்குள் திருமணம் என்பதே சமீபத்தில், சுமார் 1900 வருடங்களுக்குள் உருவான ஒரு கலாச்சாரம் என ஆவணப்படம் சொல்வது, அதிகம் அறியப்படாத செய்தி.
ஆவணப்படம் என்கிற அளவில் பலதரப்பட்ட குரல்களை முன் வைக்கிறது தீவரைவு. ஆனால் அவை வெறும் பதிவுகளாக மட்டுமில்லாமல் உணர்வுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் பார்வையாளர்களை எதிர்கொள்வதன் மூலம் ஆவணப்படத்திற்குரிய எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது. குறிப்பாக, போதும் பொண்ணு என்கிற மாற்றுத் திறனாளி பேசும்போது அவரது வலி பார்வையாளருக்கும் கடத்தப்படுகிறது.
மாற்றுக் குரல்களைப் பதிவு செய்யும்போதும் அதற்குச் சம்பந்தப்பட்ட இடங்களிலிருந்தே மறுப்புகளையும் கண்டடைகிறார் பூங்குழலி.
சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் சினிமாக்கள் ஆற்றும் பங்கைப் போகிற போக்கில் சொல்கிறார் இயக்குநர். இன்னொரு ஆவணப்படம் இயக்கும் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவைப் பற்றி இன்னமும் ஆழமாகவே கையாண்டிருக்கலாம்.
சுமார் ஒரு மணி நேரம் நீளும் ஆவணப்படத்தில் பார்வையாளரை ஆர்வமிழக்க வைக்கும் இடமென்று எதுவும் இல்லை என்பதே தீவரைவின் வெற்றி. சாதி மறுப்புக்கு எதிரான வெற்று கோஷங்களை முன் வைக்காமல் ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் பூர்வமான வாதங்களை முன்வைப்பதன் மூலம் தீவரைவு சாதிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்களிப்பாக மாறுகிறது.