

எல்லாக் குற்றவாளிகளுக்கும் மனமாற்றத்திற்கான வாயிலைச் சிறைச்சாலைகள் திறந்துவிடுவதில்லை. சிறைச்சாலைகளை விட குற்றவாளிகளைச் சீர்திருத்துவதில் சமூகத்திற்கு உள்ள பங்கு முக்கியமானது.
தன்னில் நிகழும் பிறழ்வை, குண நலிவைத் தனக்குத் தானே சரி செய்து கொள்ளும் வழி முறையைச் சமூகம் பெற்றிருக் கின்றது என்பதை அழகியலுடன் சொல்லும் கதை இது.
கைவினைப் பொருட்களைச் செய்யும் முதியவர் ஒருவர் நகரத் திற்கு வந்து தனது பொருட்களை விற்று வருவாய் ஈட்டுகிறார். அதை அபகரிக்கத் திட்டமிடும் வழிப்பறிக்காரன் அவரைப் பின் தொடர்ந்து செல்கின்றான்.
அவர் படகினுள் ஏறி அமர்ந்த பின்னர் இவன் கைத்துப்பாக்கி யைக் காட்டிப் பணத்தைக் கேட்டு மிரட்டுகின்றான். இந்த மிரட்டலை அமைதியாக எதிர் கொள்கின்றார் அந்த முதியவர்.
அந்த வழிப்பறிக்காரன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் வாளை உருவும் லாவகத்தோடு படகுப் பொறியின் விசையை அவர் இயக்குகின்றார். திருடனின் துப்பாக்கி வழியே துருத்தி கொண்டிருந்த வன்முறையானது சட்டெனச் சரிந்து விழுகின்றது. நீந்தவும் படகோட்டவும் தெரியாத திருடன் மாட்டிக் கொள்கின்றான். தன்னை விட்டு விடும்படி கெஞ்சு கின்றான். திருடனைச் சுமந்து கொண்டு முதியவர் குடியிருக்கும் தீவினை படகு சென்றடைகின்றது.
திறந்தவெளி சிறை
கடலும் வானமும் செடி கொடிகளும் தங்களது நீலப் பச்சை நிறங்களைக் கலவையாக்கி வரைந்த சித்திரம்தான் அந்தத் தீவு. அந்த வண்ணத்திற்குப் பின்னணி இசையாகத் தீவின் தனித்த மௌனம் மெல்ல ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
அந்த மௌனத்திற்குள் உட்கார்ந்திருந்தது அந்த குடியிருப்பு. அதில் சிறுவனும், பேசும் திறனற்ற இளம் பெண் ஒருத்தியும் இருக்கிறார்கள். இவர்களோடு முதியவருக்கு ஒத்தாசையாக ஒரு நடுத்தர வயது மனிதரும் இருக்கிறார்.
இந்தத் திருடனை அவர்கள் வித்தியாசப்படுத்திப் பார்க்காமல் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பி னரைப்போலவே நடத்துகின்றனர்.
எனினும் இருப்பு கொள்ளாமல் தவிக்கும் திருடன் அந்தத் தீவிலிருந்து வெளியேற நினைக்கின்றான். நீண்டு கிடக்கும் கடல் வெளியானது சிறைச்சாலையின் முடிவற்ற நெடிய சுவர் போல அவனுக்குள் எழுந்து நின்று அச்சமூட்டுகின்றது.
திருடனுக்குள் ஒரு மாற்றம் வரும் வரை அவனை வெளியேற அனுமதிப்பதில்லை என்ற முடிவுடன் முதியவர் இருக்கிறார்.
வாழ்க்கை என்பது சில பல அழகிய தருணங்களைக் கொண்டது எனவும் இரவிற்குள் உறங்கும் பெருங்கடலையும் அதில் கனவு போலத் துள்ளியெழும் மீன்களையும் சுட்டி காட்டித் திருடனுக்கு நடுக் கடலில் போதிக்கின்றார் முதியவர். அவனோ அதை உள்வாங்கும் மன நிலையில் இல்லை.
விலகிய திரை
இதற்கிடையில் அந்தத் தீவிலிருந்து வெளியேற அவன் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அவனைச் சுற்றிலும் அரூபமான கண்காணிப்பு வளையம் இருந்து கொண்டே இருக்கின்றது.
தீவில் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட மன இறுக்கம் , தப்ப முடியாத தன்னுடைய கையாலாகாத் தனம், விடை கிடைக்காத கேள்விகள் எனத் திருடனுக்கு அந்தத் தீவின் மொத்தச் சூழ்நிலையும் இம்சையாகிறது.
ஒரு கட்டத்தில் இறுகிய அவனது குண நலனில் மெல்லிய நெகிழ்வைக் கண்டு திருடனை விடுவிக்கும் வேளை வந்து விட்டதை உணரும் முதியவர், தீவின் மீது கவிந்து கொண்டிருப்பதாகத் திருடன் நினைக்கும் மர்மத்திரையை விலக்கிக் காட்டுகின்றார்.
இறுதியில் திருடனுக்குள் இருக்கும் மனிதன் தன்னை மீட்டுக் கொள்கின்றான். அவனை முதியவரே படகில் அழைத்துச் சென்று மறு கரையில் சேர்க்கிறார்.
சொற்பமான உரையாடல்கள், நிதானமான நகர்வுகள் , மிகக் குறைந்த வெளிச்சத்தில் விரியும் காட்சிகள் என மொத்த கதைக்களத்தையும் அதன் போக்கில் இயல்பாக நகர்த்தும் இயக்குநர், இது ஒரு கற்பனைக் கதை என்று நம்பமுடியாதபடி செய்துவிடுகிறார். மாற்றம் வாழ்க்கையின் ஒரு அம்சம் என்பதை எளிமையாகவும் வலிமை யான காட்சிமொழி வழியாகவும் பேசும் இந்தப் படத்தை ஒரு தியானித்தலைப் போலப் பார்க்கத் தகுந்த படைப்பாகக் கொள்ளலாம்.