மும்பை மசாலா: அமிதாப்-73

மும்பை மசாலா: அமிதாப்-73
Updated on
1 min read

அமிதாப்பச்சன் சமீபத்தில் தன் 73-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் பணிகளைத் தேர்ந்தெடுப்பது இந்த வயதில் கடினமாக இருப்பதாகச் சொல்கிறார் அமிதாப். அமிதாப்பின் நடிப்பில் ‘வசீர்’, என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘ஆஜ் கீ ராத் ஹை ஜிந்தகி’ என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வழங்க இருக்கிறார்.

“எல்லாரையும் போல இந்த வயதில் வேலை பார்ப்பது எனக்கும் கடினமாகத்தான் இருக்கிறது. அனால், இந்த ஆண்டு ‘ஷமிதாப்’, ‘பிக்கு’, ‘வசீர்’ என மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படங்கள் அவற்றின் மாறுபட்ட கதைக்களத்திற்காகவே எனக்குப் பிடித்திருந்தன” என்று சொல்கிறார் அமிதாப். எல்லோரும் 60 வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால், அமிதாப் அறுபது வயதுக்குப் பிறகும் ஓய்வில்லாமல் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

மைல்கல்

சஞ்ஜய் லீலா பன்சாலியின் ‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படம் தன் வாழ்க்கையின் மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்தப் படத்தில் பிரியங்கா, பேஷ்வா பாஜிராவ்வின் முதல் மனைவி காஷிபாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், தீபிகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். பிரியங்கா தற்போது சர்வதேச தொலைக்காட்சி தொடரான ‘குவான்டிகோ’வில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் அவரது ‘எஃப்.பி.ஐ’ ஏஜென்ட் கதாபாத்திரத்துக்குப் பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

ஆலியாவின் பயம்

பாலிவுட்டின் துறுதுறு நாயகி ஆலியா பட் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ஷாருக் கானுடன் இணைந்து நடிப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பயமாக இருப்பதாகச் சொல்கிறார் ஆலியா. “என்னுடைய இந்த பயம் நல்லதுதான். இதனால், நடிக்கும்போது எப்போதும் கவனமாக இருப்பேன். ஆரம்பத்தில் ஷாஹித்துடன் நடிக்கும்போதும் இப்படி பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது என்னை பயம் தொற்றிக்கொள்கிறது” என்கிறார் ஆலியா. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க, கவுரி ஷிண்டே இயக்குகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in