Last Updated : 02 Oct, 2015 11:03 AM

 

Published : 02 Oct 2015 11:03 AM
Last Updated : 02 Oct 2015 11:03 AM

காற்றில் கலந்த இசை 24: உருவமற்ற காதலின் இசை வடிவம்

‘ராஜபார்வை’. கமலின் 100-வது படம். உணர்வுபூர்வமான கதைப்பின்னலும், இயல்பான பாத்திர அமைப்பும் கொண்ட இப்படம் அப்போதைய ரசிகர்களால் அவ்வளவாக உள்வாங்கிக்கொள்ளப்படவில்லை. நாயகன் வயலின் இசைக் கலைஞன். திரைப்பட இசைக் குழுவில் வாசிப்பவன். கண்பார்வை இல்லாதவன். பின் எப்படிப் படத்துக்கு ‘ராஜபார்வை’ என்று பெயர் வந்தது எனும் இயல்பான கேள்வி எழும். படத்துக்கு இசை இளையராஜா என்பதால், ஒருவேளை அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சர்வதேசத் தரத்திலான இசையைத் தந்தார் இளையராஜா. பின்னணி இசையிலும் பாடல்களிலும் வயலின் இசைப் பிரவாகங்கள் பொங்கி வழிந்தன.

படத்தில் கமல், சசிரேகா பாடும் ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே’ பாடல், சொல்லொணாத் துக்கத்தை உணர்த்தும் பாடல்களில் ஒன்று. தங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியை விதியின் இருள் நிறைத்துவிட, செய்வதறியாது தவிக்கும் காதலர்களின் நிலையை விளக்கும் பாடல் இது. வயலின் கலைஞனான கமல், எத்தனையோ உருக்கமான வயலின் இசைக் குறிப்புகளை வாசித்திருப்பார். ஆனால், காதல் தோல்வியின் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் அவர், ரெக்கார்டிங்கின்போது சக வயலின் கலைஞர் வாசிக்கும் உருக்கமான இசையைக் கேட்டதும் உடைந்து அழுதுவிடுவார். அந்த இசைக் குறிப்பை வாசித்திருக்க வேண்டியது அவர்தான். ஆனால், மனதில் அலைமோதும் உணர்வுகளால், இசையுடன் ஒன்ற முடியாமல் அவர் தடுமாறும்போது வேறொருவர் அதை வாசிப்பார். அந்த ஒற்றை வயலின் இசையிலிருந்தே இந்தப் பாடல் தொடங்கும்.

தேர்ந்த பாடகரைப் போல் அத்தனை உயிர்ப்புடன் பாடியிருப்பார் கமல். இடையில் வரும் ஆலாபனையை அவரும் சசிரேகாவும் பாடும்போது, வார்த்தைகளற்ற புலம்பலின் இசை வடிவத்தைப் போல் இருக்கும். காதலனின் இருப்பை உணர்வதுபோல் மகிழ்ச்சியடையும் காதலி, நிதர்சனத்தை உணர்ந்து உடைந்து அழும் கணத்தில் இன்னொரு முறை ஒற்றை வயலினை ஒலிக்க விடுவார் இளையராஜா. மனிதருக்கு இரக்கமே இல்லையோ என்று தோன்றும்!

கண் பார்வையற்ற நாயகன், தன் நுண்ணுணர்வின் வழியே அறிந்துவைத்திருக்கும் விஷயங்களை வைத்து, நாயகியின் அழகை வர்ணிக்கும் ‘அழகே… அழகு தேவதை’ பாடல் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. நாயகன் தனது மன உலகின் உருவமற்ற உருவங்களைப் பயன்படுத்தி வார்த்தைகளைக் கோத்துக்கொண்டே செல்வான். மெல்லிய ஹம்மிங்குடன் இப்பாடலை ஜேசுதாஸ் தொடங்கும்போதே கேட்டுக்கொண்டிருப்பவரின் மனம் கிளர்ந்தெழத் தொடங்கிவிடும். கஜல் பாணியிலான தபேலா தாளக்கட்டுடன் வீணை, வயலின், புல்லாங்குழல் இசைக் கருவிகள் உருவாக்கிய இசையிழைகளைக் கோத்துக்கொண்டே செல்வார் இளையராஜா. நகரப் பரபரப்பின் பார்வைக்குத் தப்பி, மரங்கள் சூழ்ந்த பழைய கட்டிடத்தின் ஓர் அறையில் தங்கியிருப்பார் கமல்.

எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து சென்ற அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கும் அந்த அறையின் ஜன்னல்கள், கதவுகளில் வாழ்வின் எச்சம் மிச்சமிருக்கும். அந்த அறையில்தான் மாதவியிடம் இப்பாடலைப் பாடிக்காட்டுவார் கமல். காலம், நிலப்பரப்பு போன்றவற்றின் கூறுகளை உள்வாங்கி இசையமைக்கும் இளையராஜா, இந்தப் பழைய அறைக்குப் பொருத்தமான இசையைத் தந்திருப்பார். ‘மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்’ என்று ஒரே வரியில் முழுப்பாடலின் சூழலையும் சொல்லிவிடுவார் கண்ணதாசன்.

பல கோடி முறைக்கும் மேல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று ‘அந்திமழை பொழிகிறது’. இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி., ஜானகி என்று தேர்ந்த கலைஞர்களின் கூட்டணியில் விளைந்த உயர்தர விளைபொருள் இப்பாடல். பார்வையற்ற குழந்தைகளின் பள்ளியில் படித்து வளர்ந்தவரான கமல், அக்குழந்தைகளுடன் சேர்ந்து ‘பனிவிழும் பொழுதினில் இருவிழி நனைந்தது நேற்று’ என்று பாடும்போது, கண்களை நீர் மறைக்க நின்று பார்த்துக்கொண்டிருப்பார் மாதவி. பரிவும் காதலும் பெருகப் பெருக, அவரது மனம் வேறொரு உலகை நோக்கி மேலெழுவது போன்ற காட்சியமைப்பு அது. மிருதங்கத்தின் மாலை நேரத்து மேகங்களில் உலவும் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க, மிருதங்கத்தின் தாளக்கட்டில் பியானோ என்று இரு வேறு உலகின் இசைக் கருவிகளை ஒன்றிணைத்து இசைக்கத் தொடங்குவார் இளையராஜா. ஏகாந்த ரசனையுடன் ‘அந்தி மழை பொழிகிறது’ எனும் பல்லவியை எஸ்.பி.பி. பாடியதும், காதல் உலகத்துக்குள் புதிதாக நுழையும் ஜோடியை வரவேற்கும் வயலின் இசைக்கோவையை ஒலிக்க விடுவார். அதைத் தொடர்ந்து, தொடுவானத்தைத் தொட முயலும் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஆலாபனை மேலெழும். ஆலாபனை காற்றில் மறையும் கணத்தில், மற்றொரு வயலின் கோவை பாடலைப் பூமிக்கு இழுத்துவரும். இரண்டாவது நிரவல் இசையில் பியானோ, பெண் குரல்களின் ஹம்மிங், மிருதங்கம் என்று மூன்று அடுக்குகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இசை ஒன்றிலொன்று கலந்து கரைய, வயலின் இசைக் கோவையின் நீளமான ஒலிக்கற்றை மாலை நேர வானை நோக்கிப் பாய்வது போல் இசையமைத்திருப்பார் இளையராஜா. ‘தாவணி விசிறிகள் வீசுகிறேன்’ எனும் வைரமுத்துவின் வரிகளைக் கேட்டு காதலிக்கத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x