மும்பை மசாலா: ‘நல்ல படங்கள்’

மும்பை மசாலா: ‘நல்ல படங்கள்’
Updated on
1 min read

பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப், எல்லா நல்ல படங்களையும் கமர்ஷியல் படங்களாகவே கருத வேண்டும் எனச் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். “நல்ல படங்கள் எப்போதும் கமர்ஷியல் படங்களாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை, மக்கள் எந்தப் படங்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்களோ, எந்தப் படங்களோடு அவர்கள் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ, அவை எல்லாமே கமர்ஷியல் படங்கள்தான்.

அப்படியொரு படம்தான் திதளி. தற்போது ‘திதளி’ மாதிரி படங்கள் ஒவ்வொரு மாதமும் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது” என அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் அனுராக். இந்தப் படம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது.

தீபாவளி தமாகா

பாலிவுட்டின் ‘கோல்டன் ஜோடி’ என்றழைக்கப்படும் ஷாருக்-காஜோல் ஜோடியின் ‘தில்வாலே’ படத்தின் டிரைலரும், சல்மானின் ‘பிரேம் ரதன் தன் பாயோ’ படமும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாகவிருக்கிறது.

பாலிவுட்டில் நடிகர்களின் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்படி சமீப காலமாக, ஷாருக்-சல்மான் இருவருமே நடந்துகொள்கின்றனர். ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் ‘முதல் லுக்’கை ஷாருக் வெளியிட்டதும், இப்போது ‘தில்வாலே’ படத்தின் டிரைலரை சல்மான் வெளியிடுவதும் எல்லாம் இந்த ‘ஆரோக்கிய போட்டியின்’ ஸ்டண்ட்தான் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

அத்துடன், சல்மானின் ‘சுல்தான்’ படமும், ஷாருக்கின் ‘ரயீஸ்’ படமும் 2018 ஈத் திருநாளில் ஒன்றாக வெளியாகவிருக்கிறது. ‘ரசிகர்களுக்கு இது ‘டபுள் தமாகா’வாக இருக்கும்’ என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் சல்மான். இப்போது அதே காரணத்துக்காக ‘தில்வாலே’ படத்தின் ட்ரைலரை தன் படத்துடன் இணைத்திருக்கிறார். இருவருடைய இந்த மாற்றத்தையும் பார்த்து பாலிவுட் அசந்துதான் போயிருக்கிறது.

‘போரிங்’ ஸ்டைல்

பாலிவுட்டின் சிறந்த ‘ஸ்டிலிஷ்’ நடிகைகளில் ஒருவரான தீபிகா, தன் தனிப்பட்ட ஸ்டைல் வெளிப்படையான சுய விமர்சனம் செய்திருக்கிறார்.

சஞ்ஜய் லீலா பன்சாலியின் ‘பாஜிராவ் மஸ்தானி’யின் ‘தீவானி மஸ்தானி’ பாடல் வெளியீட்டுக்காக நடைபெற்ற பேஷன் ஷோவில் சமீபத்தில் தீபிகா கலந்துகொண்டார். “என் தனிப்பட்ட ஸ்டைல் ‘போரிங்’கானது என்றே நான் நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், எனக்கென்று தனியாக ஒரு ஸ்டைல் கிடையாது. அதனால்தான், நான் என் ஸ்டைலிஸ்ட் அஞ்சு போன்றவர்களை நம்புகிறேன்.

அதுதான் திரையில் நான் ஜொலிப்பதற்கு காரணம். அத்துடன், எப்போதும் ஏதோவொரு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருப்பதால், சாதாரண நாட்களில் நான் சாதாரண ஜீன்ஸ்-டிஷர்ட்ஸ்தான் அணிகிறேன். என் தனிப்பட்ட வார்ட்ரோபில் அவற்றை மட்டும்தான் வைத்திருக்கிறேன் “என்று சொல்கிறார் தீபிகா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in