

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பிரபாஸ் நடித்துவரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்திவருகிறது படக்குழு. ஐரோப்பாவில் நடக்கும் காவியக் காதல் கதைதான் படம். ‘கரோனாவால் காதல் படங்களுக்குத் தடையில்லை’ என்கிறார்கள் இந்தப் படத்தை பல மொழிகளில் தயாரித்துவரும் வம்சியும் பிரமோத்தும். பிரபாஸின் காதலியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் கதாபாத்திர முதல் தோற்றங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டாடிவருகிறார்கள் பிரபாஸின் ரசிகர்கள்.
மூன்று அணிகள்
ஒரு பக்கம் பாரதிராஜா தலைமையில் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் அரசு கண்காணிப்புக்குள் இருந்துவந்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். தற்போது நவம்பர் 22-ம் தேதி அதற்குத் தேர்தல். தயாரிப்பாளர் முரளி, டி.ராஜேந்தர் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. தேனப்பன் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி அறிவிக்கப்படலாம்.
‘பிரம்மாண்ட’ காடன்
‘கும்கி' படத்துக்குப் பிறகு, யானைகளை வைத்து பெரும் பொருள்செலவில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதன்மை நாயகன் ‘பாகுபலி’ புகழ் ராணா. அவருடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருக்கிறார். ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து கரோனாவுக்கு முன்பே தாய்லாந்தில் 40 நாள் படப்பிடிப்பு நடத்தினார்கள். பின்பு உன்னி என்கிற யானையை வைத்து கேரளாவில் 60 நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்படியும் போதாமல் புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாள் படப்பிடிப்பை நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. பெரும் காடுகள், மலைகள் எனக் கஷ்டப்பட்டு படமாக்கியதற்கானப் பலனை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்கிறது படக்குழு. 2021 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது காடன்.
விமர்சனத்துக்கு விருது!
தரமான திரை விமர்சனத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன், சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் - சென்னையில் உள்ள தென்கொரியக் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து தற்கால கொரியத் திரைப்படங்களுக்கான விமர்சனப் போட்டியை நடத்தியது. மாநிலம் தழுவிய இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான திரை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம், திரைத் தாரகை சுகன்யா, சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் இயக்குநர் இ.தங்கராஜ் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பு வகித்தனர். இந்தப் போட்டியில் தங்க. ஜெய் சக்திவேல் முதல் பரிசையும் ஸ்ரீனிவாச சந்தானம், அனிருத் மிஸ்ரா இரண்டாம் பரிசையும் பால் போக்யே, வருண் ரகு, அஜய் அருண் ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றுள்ளனர். இவர்களுக்கான பரிசுகளை இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனின் துணைத் தலைவர் பி.ராமகிருஷ்ணன் வழங்கினார்.