

ஒரு மிகப்பெரிய ஜனத்திரளின் முன் மேடையிலோ அல்லது படப்பிடிப்பிலோ ஒரு நடிகர் பங்கேற்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தன் எதிரே இருக்கும் ஆடியன்ஸைப் பற்றிய எண்ணம் அவர் மனதில் இருக்கும்வரை அவரால் நல்ல நடிப்பை வழங்க முடியாமல் போகலாம். ‘Stage fear’ என்று சொல்லக்கூடிய இந்தப் பயம் அவரது நெஞ்சைக் கவ்வலாம். இந்தப் பயத்தை விட்டொழித்து நல்ல நடிப்பை வழங்க உதவும் வழிமுறையே இந்த ஒருமுகப்படுத்துதல்.
2. ஒருமுகப்படுத்துதல் (Concentration)
ஸ்ட்ராஸ்பெர்க் வகுத்துத் தந்த முக்கியமான வழிமுறை இது. ஒருமுகப்படுத்துதல் ஒரு நடிகனுக்கு மிக முக்கியமான முன்தயாரிப்பு. பொதுவாக கான்ஸண்ட்ரேட் செய் என்றால் எப்படி? எதாவது குறிப்பான வழிமுறை இருக்கிறதா? இருக்கிறது. அதுதான் நான்காவது சுவர் (The Fourth Wall).
நான்காவது சுவர் என்றால், நாடக மேடைகளில் மூன்று பக்கங்களிலும் சுவர்கள் இருக்கும். நான்காவது பக்கம் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் மேடை. இந்த இடத்தில் பார்வையாளர்களுக்கும் ஒரு நடிகனுக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகக் கற்பனை செய்வதே Fourth wall. அப்படிக் கற்பனை செய்துகொண்டு அந்த சுவரின் மேல் கவனத்தை ஒருமுகப்படுத்தினால், ஆடியன்ஸ் என்ற பகுதியே நினைவை விட்டு மறந்துபோய், நடிப்பில் கவனம் செலுத்த முடியும்.
3. மீள் உணர்ச்சி ( Sense Memory)
ஒருமுகப்படுத்தும் திறன் பெற்ற பிறகு நடிப்பைத் தர வேண்டும். அங்கேதான் கைகொடுக்கிறது மீள் உணர்ச்சி. ஐந்து புலன்களினாலும் அனுபவிக்கப்படும் உணர்ச்சிகளை மறுபடி அனுபவித்தலே sense memory. மறுபடி அனுபவித்தல் என்பதை விளக்குகையில், ’மறுபடி வாழ்தல்’- Re-living - என்ற வார்த்தையை ஸ்ட்ராஸ்பெர்க் உபயோகித்திருக்கிறார். அதாவது, வெறுமனே நினைவுபடுத்திக்கொள்ளுதல் மட்டுமில்லை. மறுபடி அந்த உணர்ச்சிகளை வாழ்தல்.
ஸ்ட்ராஸ்பெர்க் இங்கே உளவியலைத் துணைக்கு அழைக்கிறார்.
மனித மனம் விசித்திரமானது. நமது உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தொடர்ந்து எண்ண ஆரம்பித்தால், அதுவே உடலில் உபாதையை உண்டு பண்ணிவிடும். இதுதான் sense memory. ஒரு குறிப்பிட்ட அனுபவம் நமது மனதில் தூண்டிய எண்ணங்களை மறுபடி உருவாக்குவதன் மூலம் உடலிலிருந்து ஒரு எதிர்வினையை உருவாக்குவது.
இதைக் கொஞ்சம் தெளிவாக ஒரு உதாரணத்தின் மூலமாகப் பார்ப்போம். ஸ்ட்ராஸ்பெர்க் மிக எளிதான உதாரணத்தையே கொடுக்கிறார். சென்றமுறை திரையரங்குக்குச் சென்றபோது நீங்கள் வாங்கிய பாப்கார்னின் நினைவு உங்களுக்கு இருக்கிறதா? அந்த பாப்கார்னின் மணம் எப்படி இருந்தது என்று யோசியுங்கள். இந்த யோசனையின் மூலம் நீங்கள் திரையரங்குக்குச் சென்றது நினைவு வருகிறதா? அந்த அரங்கின் இருக்கைகள் எப்படி இருந்தன? அரையிருளில் கூரையின் சிவப்பு விளக்குகள் எத்தனை அழகாக இருந்தன? திரையில் படம் துல்லியமாக இருந்தது அல்லவா? அதன் ஒலி எவ்வாறு இருந்தது? திரைப்படம் முடிந்து வீட்டுக்கு எப்படி வந்தீர்கள்?
இப்படி, ஒரு பாப்கார்னின் மணத்தை நினைவுகூர்வதன்மூலம் திரையரங்குக்கு சென்றுவந்த முழு அனுபவத்தையும் எண்ணிப் பார்க்க முடிகிறது அல்லவா? இதில் ‘மணம்’என்பது ஐம்புலன்களில் ஒரு குறிப்பிட்ட புலனின் உணர்ச்சிதானே?
இப்படி, நிஜமான பொருட்களை நினைத்துப் பார்ப்பதன்மூலம் மேடையிலோ, படப்பிடிப்பிலோ தத்ரூபமான உடல்மொழியோடு கூடிய நடிப்பை வழங்குதலே இந்த வழிமுறையின் நோக்கம். அதாவது, அந்த நேரத்தில் நிஜமாக இல்லாத ஒரு நினைவின் மூலம், டக்கென்று அதன் விளைவுகள் அத்தனையையும் நிஜமாக்குதல். அந்த நினைவுகளை வாழ்தல். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், பாப்கார்னின் மணம் அந்த நேரத்தில் பொய். ஏனெனில் அது மேடை. அங்கே பாப்கார்ன் இல்லை.
ஆனால், அதன் மணத்தை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அதனோடு தொடர்புகொண்ட அத்தனையும் உங்கள் மனதில் ஓடும். இதுதான் ஒரு அனுபவத்தை வாழ்வது. அந்த உணர்ச்சிகளை வாழ்வது. இதன்மூலம் நமது உடல்மொழியும் நிஜமானதாக ஆகிவிடும். நமது மனம் அப்போது நிகழும் உணர்ச்சிகளை உண்மை என்று நம்பும். ஆகவே சிறந்த நடிப்பு சாத்தியமாகும்.
ஆராய்ச்சிகளின் மூலம், மணமே மனித நினைவுகளோடு மிகவும் நெருக்கமான தொடர்புடைய புலன் என்று நிரூபணம் ஆகியுள்ளது. மணம், நினைவுகளை மீட்டுக் கொணர்கிறது. பல விரிவான நினைவுகளோடு மணம் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே, ஒரு நடிகன், இதுபோன்ற புலன்களோடு தொடர்புடைய விஷயங்களையும் அவற்றின் எதிர்வினைகளையும் பற்றிய கூர்ந்த கவனம் கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும்.
தொடர்ந்த இடைவிடாத பயிற்சியின் மூலம், எந்தப் பொருளின்மூலம் எத்தகைய உணர்ச்சி வெளிப்படுகிறது என்பது தெரியும். அப்போது, குறிப்பிட்ட காட்சியில் எத்தகைய உணர்ச்சி வெளிப்பட வேண்டுமோ அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொருளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே போதும். ஆனால், இது சுலபம் அல்ல. மிகக் கடினம். தன்னுடைய பயிற்சிகளின் மூலம் இதனையும் சாத்தியமாக்கினார் ஸ்ட்ராஸ்பெர்க்.
கற்பனையில் ஒரு காபி
இந்த Sense memory என்ற பயிற்சியில் நான்கு முக்கியமான பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது The Breakfast drink. இந்தப் பயிற்சியின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பானத்தின் மூலம் வெளிப்படும் உணர்ச்சிகளை ஆராய்ந்து, அவற்றைத் தத்ரூபமாக மறுபடி வாழ்ந்து பார்ப்பது. ஏதோ ஒரு பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஃபில்டர் காஃபி.
சூடான அந்த ஃபில்டர் காஃபியை உங்கள் இரண்டு கைகளிலும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஐம்புலன்களையும் ஒவ்வொன்றாக அந்தப் பானத்தின் மூலம் அனுபவியுங்கள். அந்தப் பானத்திலிருந்து வெளிப்படும் மணத்தை மெதுவாக முகருங்கள். அந்த வாசனையின்மேல் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.
அந்தப் பானம் அடங்கியுள்ள கோப்பையின் சூட்டை நன்றாக அனுபவியுங்கள். அந்தக் கோப்பையை இரண்டு கைகளாலும் தொட்டு, அதன் எடை, வடிவம், நீளம், வண்ணம் ஆகியவற்றை நன்றாக உணருங்கள். அந்தக் கோப்பையில் உள்ள வேலைப்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் ஏதேனும் உடைந்துபோய் இருக்கிறதா? எங்காவது மூளியாக இருக்கிறதா? அந்த ஃபில்டர் காஃபியைக் கலக்கும்போது அந்தத் திரவம் கோப்பையினுள் சுழலுவதை அனுபவியுங்கள். அந்த காஃபியை சுவையுங்கள். அதன் வெப்பநிலை, சுவை ஆகியவற்றை அனுபவியுங்கள். அந்தக் கோப்பை எப்படி உங்களது வாயில் பொருந்துகிறது என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
இந்த முழுப் பயிற்சியையும் மிக மெதுவாக ஒரு நடிகன் செய்யவேண்டும். இதன் நோக்கம், அந்த குறிப்பிட்ட பானத்தின் மீது முழுமையாக அவனது கவனத்தை ஒருங்குபடுத்துவதே. எத்தனைக்கெத்தனை மெதுவாக இது நடைபெறுகிறதோ அத்தனைக்கத்தனை நல்லது. அந்த நடிகனின் அத்தனை உணர்ச்சிகளையும் அவன் அனுபவித்தல் வேண்டும்.
இதன் பின், அந்தக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, திரும்பி நின்றுகொண்டு, கோப்பையுடன் அனுபவித்த அத்தனை உணர்ச்சிகளையும் கோப்பை இல்லாமலேயே அனுபவிக்க முயல வேண்டும். ஒரு சில உணர்ச்சிகளை அனுபவிக்க முடியவில்லை என்று அந்த நடிகன் கருதினால், அந்தக் கோப்பையைக் கைகளில் எடுத்துக்கொண்டு அதே உணர்ச்சிகளை அனுபவிக்க வேண்டும்.
குறிப்பாக, மிகச் சிறிய உணர்ச்சிகளின்மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக, பானத்தின் மணம். இப்படிச் செய்துகொண்டே இருந்தால், பானம் கையில் இல்லாமலேயே அந்த உணர்ச்சிகளை மறுபடி வாழ்தல் சாத்தியமாகும். இந்தப் பயிற்சியின் நோக்கம், ஒரு நடிகனுக்கு எத்தனை உணர்ச்சிகள் வேலை செய்கின்றன என்று பரிசோதிப்பதே. மீதமுள்ள மூன்று முறைகளை அடுத்துக் கற்றுக்கொள்வோம்.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com