

ஒரு கனவு அனுபவம்
‘தமாஷா’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோன்.
“இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எல்லா எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ‘ஹே ஜவானி ஹை திவானி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது ‘தமாஷா’” என்கிறார் தீபிகா. இம்தியாஸ் அலி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூரும் நடித்திருக்கிறார்.
“இந்தப் படத்தின் குழு என் கனவுக் குழு. இம்தியாஸ் அலியுடனும், ரன்பீருடனும் பணியாற்றுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே மாதிரி, படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் தீபிகா. ‘தமாஷா’ நவம்பர் 27ந் தேதி வெளியாகிறது.
காத்திருக்கும் ஷாஹித்
மேக்னா குல்சார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தல்வார்’ படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ஷாஹித் கபூர். ஆருஷி தல்வார் கொலை வழக்கைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். “எந்தக் கோணத்தில் இந்தக் கதை கையாளப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன். கோங்கணா சென், இர்ஃபான் கான் என இரு தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இது நிச்சயமாக ஒரு நல்ல படமாக இருக்கும்” என்கிறார் ஷாஹித்.
இந்தப் படத்தின் கதையை விஷால் பரத்வாஜ் எழுதியிருக்கிறார். ஷாஹித் நடிப்பில் வெளிவந்த ‘கமினே’, ‘ஹைதர்’ போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான். இவர்கள் இருவரும் மீண்டும் ‘ரங்கூன்’படத்துக்காக இணைந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாக வைத்து எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஷாஹித்துடன் சயீஃப் அலி கானும், கங்கனாவும் நடிக்கின்றனர்.
நட்சத்திரக் குழந்தைகள்
நட்சத்திரங்களின் குழந்தைகளைவிட, சாதாரணப் பின்னணியில் இருந்து வரும் இளம் நடிகர்களே தனக்கு முக்கியம் என்று சொல்லியிருக்கிறார் நசீருதீன் ஷா. “ஸ்டார் குழந்தைகளை நினைத்து நான் என் நேரத்தை வீணடிப்பதில்லை. ஏனென்றால், இவர்களுக்கு எல்லாமே எளிமையாகக் கிடைத்துவிடுகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் நின்று சாதித்திருக்கும் இளம் நடிகர்களைப் பற்றியே நான் யோசிக்கிறேன்”என்று சொல்கிறார் நசீருதீன் ஷா.
இப்போதைய இளம் நடிகர்கள் முந்தைய தலைமுறையைவிட திறமைசாலிகளாக இருப்பதாகத் தெரிவிக்கிறார் இவர். “நான் நிறைய இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். பெரும்பாலானோர் திறமையான நடிகர்களாகவும், தொழில்நுட்பத் திறனோடும் இருக்கின்றனர். ஆனால், கலைஞர்கள் எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் கடுந்துயரத்தைக் கடந்துதான் இந்தத் துறையில் நிலைக்க முடியும். அதற்கு ஸ்டார் வாரிசுகளும் விதிவிலக்கல்ல” என்றும் சொல்கிறார் நசீருதீன் ஷா.