

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. ஸ்ரீபதி இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமானார். ‘800’ என்கிற தலைப்புடன் முதன்மைக் கதாபாத்திரத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முத்தையா முரளிதரன் சாதனை புரிந்திருப்பதால், இப்படியொரு தலைப்பு என படக்குழு அறிவித்தது.
‘800' படத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே அவர் இதில் நடிக்கக் கூடாது என்கிற எதிர்ப்புக்குரல் எல்லா மட்டத்திலிருந்தும் ஒலித்தது. ஆனால், படக்குழு அதைப் பெரிதாகக் காதில் போட்டுக்கொள்ளாமலேயே முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட்டது.
இலங்கை, புலம்பெயர் நாடுகள், தமிழகம் என உலகம் முழுவதிலுமிருந்து விஜய் சேதுபதிக்கு எதிராகக் கண்டனம் எழுந்துவருகிறது. சமூக வலைதளத்திலும் இது வலுவாக எதிரொலித்தது. #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் நெட்டிசன்கள் பிரபலமாக்கியிருக்கிறார்கள். இந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்காத படக்குழு, உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ‘இது கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படமே தவிர, அரசியல் கிடையாது’ என்றும், ‘ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் கிடையாது’ என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம், திரையுலகிலிருந்தே தனக்கு எதிர்ப்பு வரும் என்று விஜய் சேதுபதியே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சேரன் எனப் பிரபலங்கள் பலரும் ‘இதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை தனது முகநூல் பதிவில் ‘முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். ஆனால், தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார்.' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேநேரம், விஜய்சேதுபதியிடம் ‘சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது! அதை ஏற்று நடியுங்கள். தேசியத் தலைவர் மாவீரர் பிரபாகரனின் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை. படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டு, விஜய்சேதுபதி - பிரபாகரன் தோற்றப் பொருத்தத்தை சுட்டும்விதமாக ஒளிப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
‘800' படத்தின் சர்ச்சையால், விஜய் சேதுபதி நடித்துவரும் மற்ற படங்களுக்கும் சிக்கல் உருவாகிவிடுமோ என்கிற அச்சத்தில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ‘800' படத்தில் நடிப்பது தொடர்பாக விஜய் சேதுபதியின் முடிவு இறுதியானதா அல்லது மறுபரிசீலனை செய்வாரா என்பது விரைவில் தெரியவரும்.