Published : 09 Oct 2020 10:07 am

Updated : 09 Oct 2020 10:07 am

 

Published : 09 Oct 2020 10:07 AM
Last Updated : 09 Oct 2020 10:07 AM

கூட்டணிப் பேட்டி: ஓடிடிக்கு தணிக்கை வேண்டாம்!

do-not-censor-ott

பல குறும்படங்களின் தொகுப்பே ‘ஆந்தாலஜி’ (Anthology) என்கிற திரைப்பட வகை. கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சில்லுக் கருப்பட்டி’ படத்துக்குப்பின், தமிழில் இவ்வகை முயற்சிகள் சூடுபிடித்திருக்கின்றன எனலாம். தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 போன்ற ஓ.டி.டி. தளங்கள், தமிழின் முன்னணி இயக்குநர்களை வைத்து ஆந்தாலஜி படங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அவ்வகையில், அமேசானின் ‘புத்தம் புது காலை’, நெட்ஃபிளிக்ஸின் ‘பாவக் கதைகள்’ ஆகிய படங்கள், ஓ.டி.டி. ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றன. இவற்றில் ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி தொகுப்பில் இடம்பெற்றுள்ள 4 குறும்படங்களை, சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ‘பாவக் கதைகள்’ குறித்து நால்வரும் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…

இந்த ஆந்தாலஜியை இயக்க யார் முதலில் முன்வந்தார்கள்?

வெற்றிமாறன்: தயாரிப்பாளர் ஆஷி, அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியவர். அவர், சென்னை வந்து என்னை சந்தித்து ‘ஆந்தாலஜி படம் எடுக்க வேண்டும்’ என்றார். இன்னும் சிலருடன் பேசுங்கள் என்றேன். நான், கௌதம் மேனன், அமீர், வெங்கட் பிரபு ஆகியோர் முதலில் ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அது நடக்கவில்லை. இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இந்தக் குழுவை உருவாக்கியது தயாரிப்பாளர்களின் முயற்சியே.

நீங்கள் இப்படி ஒரு படம் இயக்க என்ன காரணம்?

விக்னேஷ் சிவன்: இதற்குமுன் நான் ஆந்தாலஜி பற்றி யோசித்திருக்கவில்லை. வெற்றி சார், கௌதம் மேனன் சார், சுதா மேடம் போன்ற இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதைவிட பெரிய வாய்ப்பு என்ன கிடைத்துவிடப் போகிறது. அதனால், அழைத்தவுடனேயே ஒப்புக்கொண்டு விட்டேன்.

நீங்கள் ஒப்புக்கொண்ட காரணத்தைக் கூறுங்களேன்…

சுதா கொங்கரா: முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால், நான் இதுவரை குறும்படம் எடுத்ததில்லை. எனக்கு அதில் அனுபவமோ பயிற்சியோ கிடையாது. முழு நீளத் திரைப்படங்களை இயக்கிவரும் வாழ்க்கை நல்லபடியாகப் போகும்போது, ஏன் குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற சின்ன பயம் இருந்தது. பின்னர் வெற்றிமாறன், கௌதம் மேனன் பெயரைச் சொன்னார்கள். முதல்முறையாக ஒரு குறும்படம், அதுவும் இப்படியான இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என்கிற சிந்தனை எனக்குப் பிடித்திருந்தது. அதுதான் நான் ஒப்புக்கொள்ள ஒரே காரணம்.

பொதுவான கதைக் கரு இது எனத் தயாரிப்பு தரப்பில் கொடுத்தார்களா, நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா?

வெற்றிமாறன்: முதலில் பொதுவான ஒரு களத்தைச் சொன்னார்கள். அப்படித்தானே எடுக்கிறோம், எனவே புதிதாக ஏதாவது எடுக்கலாம் என்று உத்தேசித்தேன். மற்ற இயக்குநர்களும் அதை ஒப்புக்கொண்டார்கள்.

நீங்கள் ஜாலியான படங்களை இயக்குபவர். உங்களிடம் இப்படி ஒரு தீவிரமான சிந்தனையைக் கொண்டு வரும்போது, அதை உங்கள் பாணிக்கு மாற்றினீர்களா?

விக்னேஷ் சிவன்: ஆமாம்! அப்படித்தான் முயற்சித்தேன். சவாலாக இருந்தது. ஆழமாகச் சொல்லும் அதே வேளையில், அது அபத்தமாகவும் மாறிவிடக் கூடாது. ஏனென்றால், எதை வைத்து நகைச்சுவை செய்கிறோம் என்பது முக்கியம். எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கிவிட முடியாது. இது, சற்று உணர்ச்சிகரமான கரு. அதற்குள் என்ன முடியுமோ, அதைச் செய்திருக்கிறேன். திணிக்கப்பட்ட நகைச்சுவையாக இல்லாமல், இயல்பாக எங்கெல்லாம் சரியாக இருக்குமோ அங்கெல்லாம் வைத்திருக்கிறேன். என்னுடைய பாணியுடன் இந்தச் சிந்தனையையும் சேர்த்துச் சொன்னது நல்ல அனுபவமாக இருந்தது.

ஓ.டி.டி.க்கு தணிக்கை தேவையா?

வெற்றிமாறன்: ஓ.டி.டி.க்கு 100 சதவீதம் தணிக்கை இருக்கக் கூடாது. அப்படி யோசித்தால், அவசியமாக எதைச் சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லவிடாமல் தடுக்கிறார்கள் என்றே சொல்வேன். இன்று, எந்த ஒரு ஊடகமும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியையோ கார்ப்பரேட் நிறுவனத்தையோ சார்ந்துதான் இயங்குகின்றன. சமூக ஊடகம், ஓ.டி.டி. ஆகிய இடங்களில்தான் மக்களின் குரல் கேட்கிறது. உலகத்தில், ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு அரசும் இதை எப்படி ஒடுக்குவது என, அந்தந்த நாட்டுக்கு ஏற்ப யோசிக்கிறார்கள்.

விதிகளை உருவாக்குகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், ஓ.டி.டி.யில் வரும் படைப்புகள் பலரைக் காயப்படுத்துகின்றன, நையாண்டி பண்ணுகின்றன, தவறான தகவல்களைத் தருகின்றன என்று கூறி, தணிக்கையை கொண்டுவரப் பார்க்கிறார்கள். ஆனால், இவற்றைக் கடந்து நிறைய முக்கியமான விஷயங்கள் இதில் சொல்லப்படுகின்றன. ஓ.டி.டி.க்கு தணிக்கைக் கொண்டுவந்தால், ஜனநாயகத்தில் மிச்சமிருக்கும் கடைசி குரலையும் நசுக்கும் முயற்சியாகவே அது இருக்கும்.

கௌதம் மேனன்: யாருடைய படங்களிலும் தேவையில்லாத விஷயங்கள் இல்லை. இந்த மாதிரியான கதைகளை பெரிய திரையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெரிய நாயகனை சம்மதிக்க வைக்க வேண்டும். தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் ஓ.டி.டி.யில் எளிதாகச் சொல்ல முடிகிறது.

யார் யார் நடித்திருக்கிறார்கள்?

விக்னேஷ்: என் படத்தில் அஞ்சலி, கல்கி கேக்லான், பதம் குமார்

சுதா: காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, பவானிஸ்ரீ

கௌதம்: சிம்ரன், கௌதம் மேனன்

வெற்றி: பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, 'மெட்ராஸ்’ ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.

உங்களுக்குள் என்ன மாதிரியான உரையாடல்கள் நடந்தன? ஒருவருக்கு மற்றொருவரின் கதை தெரிந்திருந்ததா, ஒரு படத்தில் நடித்தவர்கள் மற்ற படங்களுக்குத் தேவைப்பட்டார்களா?

கௌதம் மேனன்: அப்படி எதுவும் நடக்கவில்லை. நான்தான் கடைசியாக படப்பிடிப்பு நடத்தினேன். மற்ற மூவரும் என்ன குறும்படம் எடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். வெற்றி எடுத்த குறும்படத்தின் ஒரு அம்சம் எனது குறும்படத்தில் இருக்கலாம் என்று நினைத்து, அவரிடம் அது பற்றிப் பேசி வைத்தேன். மற்றபடி, எல்லாம் தனிக் கதைகள்தான். யாரும் இன்னொருவரின் களத்துக்குள் வரவில்லை.

வெற்றிமாறன்: முதலில் இந்த நான்கு கதைகளையும் ஏதாவதொரு வகையில் இணைக்க வேண்டுமா என்று பேசினோம். நான், கௌதம், சுதா, விக்னேஷ் என நால்வருமே அப்படிச் செய்யலாம் என விரும்பினோம். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் தரப்பில், தனித்தனி கதையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அடுத்த முறை, நாங்கள் விரும்பியபடி ஒரு இணைப்புடன் ஆந்தாலஜி எடுப்போம் என நினைக்கிறேன்.


கூட்டணிப் பேட்டிஓடிடிதணிக்கை வேண்டாம்Ottகுறும்படங்கள்ஆந்தாலஜிAnthologyநெட்ஃபிளிக்ஸ்அமேசான் பிரைம்ஜீ5கௌதம் மேனன்சுதா கொங்கராவிக்னேஷ் சிவன்வெற்றிமாறன்புத்தம் புது காலைPutham Pudhu Kaalai

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author