

விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.
விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.
தியாக தீபம்
கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.
மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.
ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.
இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.
கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.
இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.
ஒரு பொங்கல் இரு திலகங்கள்
1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.
ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.
விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.
விருதும் தாக்கமும்
படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.
சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.
மறக்க முடியாத பாடல்கள்
இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.