

‘‘அஞ்சல' ஒரு பாத்திரத்தின் பெயர்தான். அது யார் என்பதை மட்டும் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை மட்டும் என்னால் சொல்ல முடியாது’’ என்று பேட்டி தொடங்கும் முன்பே கூறினார் ‘அஞ்சல’ படத்தை இயக்கிவரும் புதுமுக இயக்குநர் தங்கம் சரவணன். அவரிடம் பேசியதிலிருந்து...
‘அஞ்சல' படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
டீக்கடையைச் சுற்றியே நடக்கும் கதை. நாம் தினமும் போய் டீ குடிக்கும் கடை ஒரு நாள் விடுமுறை என்றால், ஏன் லீவு, என்னாச்சு என்று விசாரிக்கிறோம். அந்த அளவுக்கு ஒரு டீக்கடை நம் வாழ்க்கையில் முக்கியமான இடமாக மாறியிருக்கிறது. மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்ற ஊரில் இருக்கும் ஒரு டீக்கடையில் என்ன நடக்கிறது என்பதைத்தான் திரைக்கதையாக அமைத்திருக்கிறேன்.
அதனால்தான் போஸ்டர்களில் எல்லாம் டீ கிளாஸ் இடம்பெறுகிறதா?
என்னுடைய படத்தில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதைப் படத்தின் முதல் போஸ்டரிலிருந்தே பிரதிபலிக்க வேண்டும் என விரும்பினேன். அதனால்தான் டீ கிளாஸில் விமல், பசுபதி, நந்திதா இருப்பது போன்ற வடிவமைப்புகளெல்லாம் வெளியாகின. இனிமேல் வரும் போஸ்டர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். என்னுடைய போஸ்டரில் என்ன பார்க்கிறீர்களோ, அதுதான் படம்.
மதுரை கதைக்களம் என்கிறீர்கள். வெட்டுக்குத்து எல்லாம் இருக்கிறதா?
படத்தை நீங்கள் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நீங்கள் டீ குடித்த கடையின் ஞாபகங்கள் தாலாட்டும். அந்த மாதிரி மனசுக்கு இதமான ஒரு படமாகத்தான் பண்ணியிருக்கிறேன். வெட்டுக்குத்து எல்லாம் படத்தில் கிடையாது, இன்னொரு விஷயம் நான் படத்தில் அரிவாளைக் காட்டவே இல்லை. விமல், பசுபதி, நந்திதா, இமான் அண்ணாச்சி, சுப்பு பஞ்சு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இப்படிப் பலரையும் படத்தின் பிரதான பாத்திரங்களாக நடிக்க வைத்திருக்கிறேன். முதன்முறையாக இயக்குநர் எழில் என் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘வெயில்' படத்துக்குப் பிறகு பசுபதியின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக ‘அஞ்சல' இருக்கும். படம் பார்க்கும்போது அதை உணர்வீர்கள்.
இப்படியொரு கதையைப் பண்ணியதற்கு காரணம் என்ன?
என்னுடைய தாத்தா டீக்கடை வைத்திருந்தார். அப்பாவும் டீக்கடைதான். அப்பாவால் தனியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் இப்போது அந்த டீக்கடை இல்லை. என்னுடைய வாழ்க்கையில் டீக்கடையில் அதிக நேரங்கள் செலவழித்திருக்கிறேன். அங்கு வருபவர்களிடம் சிரித்து, பேசி, விளையாடியிருக்கிறேன். என் முதல் படமாக என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பண்ணியிருக்கிறேன்.
படத்தின் புதுமையான அம்சங்கள் என்ன?
படமாகப் பார்க்கும்போது உங்களுடைய வாழ்க்கையோடு நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். வாழ்க்கையில் தினமும் வெவ்வேறு டீக்கடைகளில் டீ குடித்தாலும், நம்ம மனசுக்கு நெருக்கமான டீக்கடை என்று ஒன்று இருக்கும். சென்னை சாலிகிராமத்தில் பல டீக்கடைகளில் நீங்கள் வருங்கால இயக்குநர்களைக் காணலாம். எவ்வளவு பெரிய இயக்குநராக ஆனாலும், அந்த டீக்கடை நினைவுகள் அவர்களுடைய மனதை விட்டு நீங்காது.
பிரபல சண்டைப் பயிற்சியாளரை எப்படித் தயாரிப்பாளராக மாற்றினீர்கள்?
‘ஆரண்ய காண்டம்' படத்தில் திலீப் சுப்புராயன் மாஸ்டர் பணியாற்றும்போது இந்தக் கதையைச் சொன்னேன். கேட்டவுடன் ‘டீக்கடை பின்னணியில் கதையா? நன்றாக இருக்கிறது, நானே தயாரிக்கிறேன்’ என்று முன்வந்தார். அவருக்கு சினிமா மீது அளவு கடந்த மோகம். டீக்கடையைச் சுற்றியே கதை என்பதால் ஒளிப்பதிவாளர் ரவிகண்ணன், இசையமைப்பாளர் கோபி சுந்தர், எடிட்டர் பிரவீன் ஆகியோரின் பெரிய பங்கு இப்படத்தில் இருக்கிறது. அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இவ்வளவு அருமையாக வந்திருக்காது. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.