

கரோனா பொதுமுடக்கத்தில் பெருமளவுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவி்ட்டாலும், திரையரங்குகளுக்கான தடை தொடர்கிறது. இதனால் மாஸ் படங்களும் ஓ.டி.டி. ஓட்டப்பந்தயத்துக்கு வந்துவிட்டன. தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான,தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகன் நானியின் 25-வது படமான 'வி' ஓ.டி.டி. தளத்துக்கு வந்துவிட்டது. நானி வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‘பாபநாசம்’, ‘தர்பார்’ படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சென்னைப் பெண் நிவேதா தாமஸ். அவருடன் ஒரு சிறு பேட்டி:
கரோனா ஊரடங்கில் என்ன செய்தீர்கள்?
அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள்செய்வது, புத்தகங்கள் படிப்பது, சாப்பிட்டுத் தூங்குவது என நாள்கள் கழிந்தன. முக்கியமாக மாலை நேரத்தில் நிறைய 'வெப் சீரிஸ்' பார்த்து வியந்தேன். பல விஷயங்கள் புரிந்தன. இன்று பல இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றல் திறனை விரிவுபடுத்த ஓ.டி.டி. தளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நிதானமாகவும் அதேநேரம் நிலையாகவும் ஓ.டி.டி.யில் நாம் வளர்ந்துவருகிறோம். நாம் நினைத்தாலும் ஓ.டி.டி.யை விலக்கிவைக்க முடியாது.
நானி - சுதீர் பாபு இருவருக்கும் இடையிலான துரத்தல் கதையைக் கொண்ட படம் 'வி'. அதில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?
நானியுடன் எனக்கு இது 3-வது படம்; இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோருடன் 2-வது படம். அபூர்வா என்ற பெண்ணாக, இலக்கை நோக்கி உழைக்கும் தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரம். அதை சிறப்பாகச்செய்ய இயக்குநர் எனக்கு நிறைய சுதந்திரம் அளித்தார். என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தில் உள்ள நடிகர்கள் அனைவருமே சிறந்த நடிப்பை கொடுக்க முனைய வேண்டுமென்றே நினைப்பேன். ஒரு குழுவாகப் பணிபுரிந்தால்தான், படம் வெற்றியடையும். படப்பிடிப்புத் தளத்தில், நடிப்பில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.
‘வி' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதில் வருத்தம் உள்ளதா?
‘வி' திரைப்படம் முழுக்க பெரிய திரைக்காகவே உருவாக்கப்பட்டது. சின்ன படம், பெரிய படம் என எதுவாக இருந்தாலும் படைப்பாளிகளும் பார்வையாளர்களும் திரையரங்குகளில் பார்க்கத்தான் விரும்புவார்கள். நாங்களும் நிலைமை சரியாக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அமேசான் எங்களை அணுகிய பிறகு, தற்போதுள்ள சூழலில் எது சிறந்த தீர்வு என்று யோசிக்கும்போது, ஓ.டி.டி.யே சரியென்று தோன்றியது. ஓ.டி.டி. வெளியீட்டை, ஒருபடி கீழே என்ற ரீதியில் நான் பார்க்கவில்லை.
ரஜினி, கமல், விஜய் உடன் நடித்தாலும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தக் காரணம் என்ன?
தமிழில் கவனம் செலுத்தவில்லை என்று சொல்ல முடியாது. எனக்கு தெலுங்கிலிருந்து நல்ல கதைகள் வருகின்றன, அவ்வளவே. ‘தர்பார்' படத்துக்குப் பிறகு தமிழில் நல்ல கதைகளுக்காக, கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன். தற்போது தமிழில் சில கதைகளையும் கேட்டிருக்கிறேன். விரைவில் அந்தப் படங்கள் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.