

அரசியலில் ஆர்வம் காட்டினாலும் உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை சினிமாதான் அவரது முதல் தேர்வாக இருந்து வருகிறது. ‘சைக்கோ’ படத்தின் வெற்றியில் இளைப்பாறிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், கரோனா பரபரப்பிலிருந்து வெளியே வந்து தனது அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதுவும் ‘கனா’ படத்தின் மூலம் அசத்தலாக ஹிட் அடித்த அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி, அரசியல், சமூக மட்டத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய ‘ஆர்டிகிள் 15’ இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் வழங்க, தமிழில் இதை ரோமியோ பிக்சர்ஸ் பட நிறுனத்தின் ராகுல் தயாரிக்கிறார். உதயநிதி ஏற்கெனவே ஒப்புக்கொண்டு நடித்துவந்த ‘கண்ணை நம்பாதே’ இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். மகிழ் திருமேனி இயக்கத்திலும் படம் தயாரித்து, நடிக்க இருக்கிறார். முதலில் ஒரே மூச்சில் ‘ஆர்டிக்கிள் 15’ மறு ஆக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்-25
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துப் பல படங்கள் வெளியாகவில்லை. ஆனால், ஏற்கும் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துவிடுவதில் கெட்டிக்காரரான அவர், தற்போது தெலுங்கில் நானி ஜோடியாக ‘டக் ஜெகதீஷ்’ படத்தில் நடிக்கிறார். விஜய்சேதுபதியுடன் நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘பூமிகா’ என்ற கதாநாயகியை மையப்படுத்திய படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இது அவருக்கு 25-ம் படம். கதாநாயகனாக பாவெல் நவகீதன் நடித்திருக்கிறார். நீலகிரி மலைக்காடுகளில் 35 நாட்களில் ஒரே வீச்சில் படமாக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவீந்திரன் ஆர்.பிரசாத். படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தையும் ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.
தொல்லியல் ஆய்வில் ‘திகில்’
கீழடி, கொந்தகைப் பகுதியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகள் இவ்வளவு காலமும் தமிழ் சினிமாவில் தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்குமா? பரணி சேகரன் இயக்கத்தில் பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘தாழ் திறவா' படத்தில் தொல்லியல் ஆய்வுதான் கதைக் களம். படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். கதாநாயகனாக ஆதவ் கண்ணதாசன், நாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்கள். இவர்களுடன் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு என நிறைய நடிகர்கள். ஒரு தென்னகத் தமிழ் கிராமம். அங்கே தொல்லியல் ஆய்வு நடக்கிறது.
நாயகன் தொல்லியல் ஆய்வாளன். ஆய்வுக் களத்தில் கீழடி போன்ற மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கே பழைய முதுமக்கள் தாழி ஒன்று கிடைக்கிறது. அதைத் திறக்கப்போய் ஏற்படும் விபரீதங்களைக் கற்பனையாகக் கூறியிருக்கிறோம். இதில் ஒரு ‘ஸ்பெஷல்’ கேரக்டர் வருகிறது. அது சஸ்பென்ஸ். படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளின் பங்கு முக்கியமானது. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த செந்தில் தலைமையிலான குழுவினர்தாம் கிராஃபிக்ஸ் பணிகளை இரவு பகலாகச் செய்து வருகிறார்கள்” என்கிறார்.