கோடம்பாக்கம் சந்திப்பு: அசத்தும் நடிப்பு

கோடம்பாக்கம் சந்திப்பு: அசத்தும் நடிப்பு
Updated on
3 min read

‘சரபம்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சலோனி லுத்ரா. அறிமுகப் படத்திலேயே இரட்டை வேடத்தில் அசத்தினார். நாடக அரங்கிலிருந்து திரைக்கு வந்த இவர், பார்வையற்ற பெண்ணாக நடித்த ‘ஒளியும் ஒளியும்’ படம் சிக்காகோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது. ‘கஜல்’ என்ற இந்திக் குறும்படத்தில் இவரது நடிப்பை மொழிகள் கடந்து நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்கள். ‘ஃபர்பிட்டன்’, ‘டர்னட் அவுட்’ என மாறுபட்ட படங்களில் இடம்பெற்று நிறைவான நடிப்பால் தடம் பதித்து வருகிறார். கரோனா ஊரடங்குக்கு முன் வெளியான ‘பானுமதி ராமகிருஷ்ணா’ என்ற தெலுங்குப் படத்தில் இவரது நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டுகள் குவிய, அதன் தாக்கத்தால் மீண்டும் தமிழ் சினிமாக்களிலிருந்து அவருக்கு பல அழைப்புகளாம்.

திரண்ட திரையுலகம்

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் மனத்தில் வாழும் மாபெரும் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கரோனாவிலிருந்து அவர் மீண்டு வந்து இன்னும் பல்லாயிரம் பாடல்களைப் பாட வேண்டும் எனத் தமிழ்த் திரையுலகினர் அனைவரும் ஏக இறைவனிடம் மண்டியிட்டுக் கெஞ்சியிருக்கிறார்கள். திரையுலகினரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழகம் முழுவதும், அவரது குரலின் ரசிகர்கள் எஸ்.பி.பியின் பாடலை ஒரேநேரத்தில் ஒலிக்கவிட்டு, அவரது குரலின் இருப்பை எவ்வளவு விரும்புகிறோம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கமல், ரஜினி, இளையராஜா, பாரதிராஜா தொடங்கி எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டி, காணொலி வழியே கனத்த இதயத்துடன் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

சசியும் சிம்புவும்

கதாநாயகி இல்லாமல் ஒரு விறுவிறுப்பான படத்தைத் தரமுடியும் என்று ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் மூலம் காட்டினார் மலையாளப் படவுலகின் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் சச்சி. அந்தப் படத்தின் தமிழ் மறு ஆக்கம் முடிவாகியிருக்கிறது. பிஜு மேனன் ஏற்றிருந்த அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர், நடிகர் சசிகுமார் உறுதி செய்யப்பட்டிருந்தார். பிருத்விராஜ் ஏற்றிருந்த கோஷி கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் திடீரென மறைந்தார் இயக்குநர் சச்சி. அவர், ‘கார்த்தியும் பார்த்திபனும்’ இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். சசியும் சிம்புவும்கூட சளைத்த கூட்டணி அல்ல என்கிறார்கள் வசூல் களத்தின் ஜாம்பவான்கள்.

எதிர்பாராத இரண்டு!

ஹாலிவுட்டில் அசோக் அமிர்தராஜ், மனோஜ் நைட் ஷியாமளன் போன்ற தமிழர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வணிகரீதியாக லாபம் ஈட்டும் ஆங்கிலப் படங்களை அங்கே தயாரித்து வருகிறார் டெல் கே.கணேசன். இவர் தற்போது தயாரித்து முடித்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் ‘ட்ராப் சிட்டி’. ஒரு மக்கள் பாடகன் போலீஸ் வன்முறையில் சிக்கி மீளும் கதை. இந்தப் படத்தில் தாக்கப்பட்ட பாடகருக்கு சிகிச்சை அளிக்கும் அமெரிக்க வாழ் இந்திய டாக்டராக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கதை எழுதி முடிக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையை அப்படியே பிரதிபலிப்பதுபோல் நிகழ்ந்துவிட்டதாம் அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம்.

‘இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ எனும் டெல் கணேசன் மற்றொரு சந்திப்பும் சற்றும் எதிர்பாராத ஒன்று என்கிறார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா தேவி ஹாரீஸைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்பாராமல் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். “ஒரு இந்தியப் பெண், துணை அதிபருக்கான வேட்பாளராக உயர்ந்திருப்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வென்றால் அவருக்குப் பின் அடுத்த தேர்தலில் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளர் ஆகிவிடுவார்” என்கிறார்.

ஆதிபுருஷனாக பிரபாஸ்

‘பாகுபலி’யாக நடித்து இந்தியாவைத் தாண்டியும் புகழ்பெற்றிருக்கிறார் பிரபாஸ். தற்போது அவரது 22-ம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. ‘ஆதிபுருஷ்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவின் புகழ்பெற்ற காவியமான இராமாயணத்தைத் தழுவி உருவாக்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் முதல் தோற்றத்தில் நாண் பூட்டிய வில்லைத் தலைக்குமேல் நாயகன் தூக்கிப் பிடித்திருக்க, பின்னணியில் அனுமன் கதாயுதத்துடன் நிற்கும் காட்சியும் பத்துத் தலைகளுடன் ராவணன் சித்தரிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. ஓம் ரவுத் இயக்கத்தில், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தை டி - சீரிஸ் தயாரிக்கிறது. சீதையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in