Last Updated : 14 Aug, 2020 09:39 AM

Published : 14 Aug 2020 09:39 AM
Last Updated : 14 Aug 2020 09:39 AM

காட்சியும் ரசனையும்: ஸ்டைலாகப் பாம்பைப் பிடிக்கும் ரஜினி

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. திரையரங்குகளில் பாம்பு தொடர்பான திரைப்படக் காட்சிகளின்போது இன்றும் பலர் கால்களைத் தன்னிச்சையாக நாற்காலிகளின் மேலே தூக்கிவைத்துக் கொள்கிறார்கள். காரணம் பயம். இந்தப் பயத்துக்கு என்ன அடிப்படைக் காரணம்? ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் குரங்குகளாகச் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக பாம்பே இருந்துள்ளது என்றும் அதனால் மரபணு வழியே மனிதருக்கு அந்தப் பயம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் சொல்கிறார்கள். சுற்றுச்சூழல், உயிர்ச்சங்கிலி போன்ற புரிதல்கள் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்திலும் பாம்பைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோர் எண்ணமாக உள்ளது.

ஒருவகையில் பாம்பைத் திறம்படக் கையாள்வது வீரம் என்றே நாம் பொருள்கொள்கிறோம். வீரம் என்று சொல்லும்போது அங்கே நாயகன் வர மாட்டானா? நாயகன் என்றால், படத்தின் கதாநாயகனைச் சொல்கிறேன். கதாநாயகன் என்றால் சூப்பர் ஸ்டார் என்று தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினி உங்கள் மனத்தில் வந்தே தீர வேண்டும். ரஜினி திரைப்படங்களில் பாம்பு என்னும் உயிரினம் பல வகைகளில் காட்சிகளை நகர்த்த உதவியுள்ளது. அந்தக் காட்சிகள் பற்றி ஒரு சிறிய நினைவோட்டம் இது.

வாயைக் கட்டிய பாம்பு

பொதுவாகவே ரஜினி காந்த் தனது படங்களில் வெளிப்படுத்திய பல்வேறு ஸ்டைல்கள் வழியே தன் ரசிகர்களைக் கவர்ந்தார். ரஜினியைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை அவர் தீவிரமாகவோ, நகைச்சுவை மேலிடவோ எப்படிக் கையாண்டாலும் சரி, அவருடைய ரசிகர்கள் அவரை ரசித்தார்கள். அப்படித்தான் ரஜினியின் சில படங்களில் அவருடன் இடம்பெற்ற பாம்பு தொடர்பான காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்துள்ளார்கள்.

ரஜினி முதலில் நாயகனாக நடித்த ‘பைரவி’ படத்திலேயே பாம்பு இடம்பெறும் முக்கியமான காட்சி ஒன்று உண்டு. அதை எந்த அளவுக்கு ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்களோ தெரியவில்லை. ஆனால், அந்தப் பாம்புக் காட்சி தொடர்பான ரசிகளைக் கவரும் ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. அது இந்தக் கட்டுரையின் கடைசியில் வருகிறது. அதற்கு முன்னதாக ரஜினி ரசிகர்களைக் கவர்ந்த, பலரின் நினைவில் நிற்கும் சில காட்சிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘தம்பிக்கு எந்த ஊரு?’. இந்தப் படத்தில் சாமியாராக உவமைப்படுத்தப்படும் பாம்பும் அவரருகே ரஜினிக்கு இணையாகப் படமெடுத்து நிற்கும். இந்தக் காட்சியில் ரஜினி காந்த் பாம்பைப் பார்த்த பயத்தில் முகத்தை அஷ்டகோணலாக்கி ‘பாம்பு’ என்று சொல்லக்கூட முடியாமல், பயத்தில் வாய் கட்டியதுபோல தவிக்கும் தவிப்பு ரசிகர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது. அவர் படும் பாட்டைப் பார்த்து பாம்பே தானாக ஊர்ந்துசென்றுவிடுவதுபோல காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

‘அண்ணாமலை’யின் பதற்றம்

அடுத்து ’அண்ணாமலை’. இதில் மகளிர் விடுதியில் பாம்பு புகுந்துவிடும். அந்த நேரத்தில் அங்கே வரும் பால்கார அண்ணாமலையிடம் அதை விரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இப்போது அண்ணாமலை சாவகாசமாகப் பாம்பு முன் அமர்ந்து மந்திரம் சொல்வார். அது அப்படியே ஊர்ந்து வந்து அவரது மேலேயே ஏறிவிடும். பயந்து நடுங்கினாலும் அதை வெளிக்காட்டாமல் அவர் சமாளிப்பார். பாம்பு தானாகவே வெளியேறிச் சென்றுவிடும். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த குஷ்புவும் ‘அப்பாடா பாம்பு போயிருச்சு’ என்று ஆசுவாசம் கொள்ளும்போது அங்கே வந்து நிற்கும் ரஜினியைப் பார்த்து அலறிவிடுவார். ரஜினியும் குஷ்புவைப் பார்த்து தடுமாற்றம் கொள்வார். உடனே ரஜினி முகத்தில் அதிர்ச்சியை தேக்கியவராக, ‘கடவுளே கடவுளே’ என்று பிதற்றத் தொடங்கிவிடுவார். இந்த நகைச்சுவைக் காட்சி அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

‘படையப்பா’ படத்தில் கோயில் பாம்பைப் புற்றுக்குள்ளிருந்து எடுத்துப் படு ஸ்டைலாக ரசிகர்களுக்கு சல்யூட் அடித்துவிட்டு, பாம்புக்கு முத்தம் கொடுப்பார். பின்னர், அதன் தலையைத் தடவிக்கொடுத்துப் பாம்பைத் தரையில் விடுவார். அதுவும் வந்த வேலை முடிந்துவிட்டது என்று கிளம்பிவிடும். ரஜினியின் வீரத்தைப் பார்த்து ஊரே அதிசயிக்கும்.

மேலே நாம் பார்த்த மூன்று காட்சிகளிலும் பல் பிடுங்கப்பட்ட பாம்புதான் ரஜினியுடன் நடித்திருந்தது. ஆனால், முதலில் குறிப்பிட்ட ‘பைரவி’ படத்தில் நடித்திருந்ததோ பல் பிடுங்கப்படாத பாம்பாம். படத்தில் போலீஸுக்கு மறைந்து ரஜினி மரத்தடியில் பதுங்கியிருப்பார். அப்போது பாம்பு ஒன்று வர அதை அப்படியே கையில் பிடித்து ‘சத்தம்.. மூச்..’ என்பதுபோல் பாவனை

காட்டிக்கொண்டிருப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, முதல் ஷாட்டில் ரஜினி நடித்துமுடித்த பின்னர் தான் அது பல் பிடுங்கப்படாத பாம்பு என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது ஷாட்டில் அந்தப் பாம்பைப் பிடித்து நடிக்க ரஜினி பயந்திருக்கிறார். ஆனாலும், ஒருவழியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அந்தக் காட்சிக்கும் அப்போது பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

ரஜினிக்கும் பாம்புக்கும் ஏதோ ஒரு பூர்வஜென்ம உறவு இருந்திருக்கும்போல. ரஜினியின் மன்றத்தின் லோகோவில் கூட முதலில் பாம்பு இடம்பெற்றிருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டது.

தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

 
x