

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து, ‘கணித மேதை’ என்று கொண்டாடப்படுபவர் சகுந்தலா தேவி. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை வரலாறு, அனு மேனன் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன். கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்தது பற்றி வித்யா பாலனிடம் பேசியதிலிருந்து...
‘சகுந்தலா தேவி’யாக நடிக்க உங்களுக்கு எந்த அளவு முன்தயாரிப்பு தேவைப்பட்டது?
தென்னிந்திய பேச்சுவழக்கில் பேசக்கூடியவர் சகுந்தலா தேவி. எனவே அதற்கான பயிற்சிகளை நான்மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறந்த பெண்மணி, அழகானவர், அழகான ஆடைகளை உடுத்தக்கூடியவர் ஆகிய விஷயங்களை எல்லாம் தாண்டி நான் அவருடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் முக்கிமானதாக இருந்தது.
சகுந்தலா தேவியின் சிறப்பம்சம் என எதைச் சொல்வீர்கள்?
சகுந்தலா தேவியின் சிறப்பே ‘நம்மாளும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க முடியும்’ என சக மனிதர்களை நினைக்க வைத்ததுதான். கணிதம் அனைத்திலுமே இருக்கிறது என்று மக்களுக்கு அவர் புரியவைத்தார். கணிதம் இயற்கையிலும் இருக்கிறது, இசையிலும் இருக்கிறது, சமையலிலும் இருக்கிறது என்று அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் அவர்களுக்குக் கணிதத்தின் மீது இருந்த அச்ச உணர்வு குறைந்தது. எனவே, சகுந்தலா தேவியின் நம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய பகுதியை நான் எடுத்துக்கொண்டேன். எனக்குக் கணிதத்தில் ஓரளவு ஆர்வம் உண்டு என்பதால் என்னால் அவரது கதாபாத்திரத்துடன் ஒன்ற முடிந்தது.
சகுந்தலா தேவியின் கதாபாத்திரத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்ட விஷயம் என்ன?
நீங்கள் நட்சத்திரங்களைத் தொடவிரும்பினால் உங்களால் அதைத் தொட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும். ‘உன் கனவு பலிக்காது’ என்று யாரையும் நீங்கள் சொல்ல அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்கள். இதுதான் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம்.
ஆளுமை மிகுந்த பெண்களைத் திரையில் வெளிப்படுத்தி வருகிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள் ஒரு விஷயத்தை விட்டுச் செல்கிறது; எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. ஏதோ ஒரு வகையில் அவை எனக்கு நிம்மதியை வழங்குகின்றன. சகுந்தலா தேவியிடமிருந்து நான் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொண்டேன். உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் பள்ளிக்குக்கூடச் சென்றதில்லை. ஆனால், ‘மனிதக் கணினி’ என்று உலகமே அவரை அடையாளம் கண்டுகொண்டது. எனவே, உங்களை நீங்கள் நம்பினால் எல்லாமே சாத்தியம்தான்.
குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும் பெண்கள் - குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பெண்கள். இந்த இருவகையில் ‘சகுந்தலா தேவி’ எந்தத் தளத்திலிருந்து வந்தவர்?
நீங்கள் ஒரு தாயாக இருந்தால் உங்கள் வாழ்க்கையே குழந்தைகளைச் சுற்றித்தான் இருக்கிறது. ஆனால், ‘சகுந்தலா தேவி’ தன் குழந்தையை எந்த அளவு நேசித்தாரோ அதே அளவு தன் கனவுகளையும் நேசித்தார். உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட பெண்களை நாம் ஆதரிக்க மறுக்கிறோம். மகள், தாய்,மனைவி என்ற நிலைகளைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. ‘சகுந்தலா தேவி’ இந்த எல்லா நிலைகளையும் எப்படிக் கடந்து வந்தார் என்பதுதான் படம்.
வெற்றிபெற்ற பெண்களை உலகுக்குக் காட்டும் பயோபிக் படங்கள் அதிகமாக வருவதில்லை. அதேநேரம் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறதே?
எல்லாத் துறைகளைச் சேர்ந்த பெண்களையும் கொண்டாடும் காலம் இது. பெண்களைப் பற்றி இன்னும் அதிகமான பயோபிக் படங்கள் வரப்போகின்றன. சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம். பாலினரீதியாகத் திரைப்படங்கள் எப்போதுமே சரியானவையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஆனால், ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
கற்பனைக் கதாபாத்திரம், நிஜக் கதாபாத்திரம், இரண்டில் எது கடினம் என நினைக்கிறீர்கள்?
இரண்டுமே சம அளவில் கடினமானவைதாம். ஆனால், நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. நமக்கு வெளியில் குறிப்புகள் கிடைக்கும். நாம் அவர்களைப் பற்றிய காணொலிகள், கட்டுரைகளைப் படித்து ஓரளவுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியும். கற்பனையையும் தாண்டி நிஜ வாழ்வில் அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் திரையில் கொண்டு வரவேண்டும். எனவே, நிச்சயமாக நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பும் சவாலும் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
குடும்பம், சமூக அழுத்தங்கள் காரணமாகப் பெண்களுக்கு நிறையச் சிரமங்கள் உள்ளன. ஆனால், வேறு வழியில்லை. உங்களுக்குக் கனவுகளும் குறிக்கோளும் இருக்கும்போது நீங்கள் மிகவும் உறுதியுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை மட்டுமே. அதிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழாமல் பிறர் தங்கள் வாழ்க்கையை வாழ உதவிக் கொண்டே இருப்பதைத் தியாகமாகக் கருதிக்கொண்டு தூங்கிவிடாதீர்கள்.