Published : 24 Jul 2020 09:20 am

Updated : 24 Jul 2020 09:20 am

 

Published : 24 Jul 2020 09:20 AM
Last Updated : 24 Jul 2020 09:20 AM

ஜூலை 28: ஏவி. எம் 113-ம் பிறந்த நாள் - மூன்றெழுத்தில் ஒரு பல்கலைக்கழகம்

avm
ஏவி.எம்.- ராஜேஸ்வரி தம்பதி

எம். சரவணன்

உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏவி.எம் (AVM) என்ற மூன்றெழுத்தை இசையுடன் பார்த்ததும் எங்கள் அப்பச்சி ஏவி.மெய்யப்பன் அவர்களும், அவர் எடுத்த திரைப்படங்களும் நினைவுக்கு வரும். செட்டிநாட்டில் தந்தையை ‘அப்பச்சி’ என்று அழைப்பார்கள். அவரைப் பற்றி நினைத்தாலே மெய் சிலிர்க்கும். அவர் எங்களுக்குப் பொருளையும் புகழையும் கொடுத்தார் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் வாழ்வு பலரும் பின்பற்றத்தக்கது என்பதற்காக.


தமிழ்நாட்டில் செட்டிநாட்டுப் பகுதியில் காரைக்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை ஆவிச்சி செட்டியார், அந்தக் காலத்திலேயே காரைக்குடியில் ஏவி & சன்ஸ் என்ற சூப்பர் மார்கெட் வைத்திருந்தார். அந்தக் கடையில் ஊசி முதல் கார் வரை கிடைக்கும். அப்பச்சி, அந்தக் கடைக்கு ஓய்வு நேரத்தில் சென்று தொழில் பழகினார்.

ஆவிச்சி செட்டியாருக்கு உடல் நிலை சரியில்லாதபோது அவரே கடையைக் கவனித்துக் கொண்டார். படித்தது எட்டாவது வரைதான். ‘தி இந்து’ (The Hindu) ஆங்கில நாளிதழைப் படித்து, அதில் தனக்குப் புரியாத வார்த்தைகளை அகராதியில் படித்துத் தெரிந்து கொண்டு மீண்டும் அதைப் படிப்பார். இப்படித் தான் அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அவருக்கு ஆங்கிலத்தில் குரு ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகைதான்.

முதல் 11 ஆண்டுகள்

1934-ல் கல்கத்தா நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் ‘அல்லி அர்ஜுனா’ என்ற படத்தை எடுத்தார். அடுத்த படமான ‘ரத்னாவளி’யை கல்கத்தாவில் எடுத்தார். மூன்றாவதாக ‘நந்தகுமார்’ படத்தை பூனாவில் எடுத்தார். மூன்று படங்களும் தோல்வி. துவண்டு விடாமல் தோல்விகளுக்கான காரணம் என்ன என்று யோசித்தார். ‘நம்மிடம் ஸ்டுடியோ இல்லாததால் நம் விருப்பப்படி படம் எடுக்க முடியவில்லை; நாமே சென்னையில் ஸ்டுடியோ தொடங்கி படம் எடுக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்தார். வேறு சில பாகஸ்தர்களைச் சேர்த்துக்கொண்டு அடையாறில் உள்ள அட்மிராலிடி ஹவுஸில் 1940-ல் பிரகதி ஸ்டுடியோவை நிறுவினார்.

அங்கே ‘பூகைலாஸ்’, ‘வசந்தசேனா’, ‘வாயாடி’, ‘போலி பாஞ்சாலி’, ‘என் மனைவி’ போன்ற படங்களை எடுத்தார். 1942-ல் ‘சபாபதி’ படத்தை எடுத்தார். அந்தப் படத்தை இயக்கியதும் அவர்தான். படத்தைப் பார்த்த ‘கல்கி’ கிருஷ்ணமுர்த்தி, கல்கி பத்திரிகையின் அட்டையில் அப்பச்சியின் படத்தைப் போட்டு, ‘ஏவி.எம் இயக்கிய ‘சபாபதி’ மிகச் சிறந்த படம்’ என்று பாராட்டினார்.

ஏவி.எம். தயாரித்த கன்னடப் படமான ‘ஹரிச்சந்திரா’வைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இந்தியாவின் முதல் டப்பிங் படம் இதுதான். டப்பிங் கலையை நாட்டுக்கு முதலில் அறிமுகப்படுத்திய வகையில் திரையில் அதுவொரு மைல்கல் நகர்வு எனலாம். அதன்பிறகு, டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிப்பில், அப்பச்சி இயக்கி, தயாரித்து 1945-ல் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

ஏவி.எம் ஸ்டுடியோ பிறந்தது

ஏவி.எம் புரடெக்‌ஷன்ஸ் (AVM Productions) நிறுவனத்தை 1945 அக்டோபர் 14 அன்று சென்னையில் தொடங்கினார். சென்னையில் புதிய மின்சார இணைப்புகள் கிடைக்காததால் ஏவி.எம் தன் சொந்த ஊரான காரைக்குடிக்கு அருகில் தேவகோட்டை ரஸ்தாவில் 1946-ல் ஏவி.எம் ஸ்டுடியோவை உருவாக்கினார். 1947-ல் அங்கே ‘நாம் இருவர்’ படத்தை எடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களின் உரிமையை ஜேசிங்லால் மேத்தா என்பவரிடமிருந்து வாங்கி, ‘நாம் இருவர்’ படத்தில் பாரதியின் பல பாடல்களைச் சேர்த்தார்.

பாரதியார் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவியது. பிற்காலத்தில் பாரதியார் பாடல்களை எந்தப் பணமும் வாங்கிக் கொள்ளாமல் தேசிய உடைமையாக்கினார். பின்னர், தேவகோட்டை ரஸ்தாவில் இருந்த ஸ்டுடியோவை சென்னைக்கு மாற்றினார். அந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு ஏற்ற எல்லா வசதிகளையும் செய்தார். அங்கு எடுக்கப்பட்ட முதல் படம் ‘வாழ்க்கை’. அந்தப் படம் 22.12.1949-ல் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இதில் தான் வைஜெயந்திமாலா அறிமுகமானார்.

துல்லியமும் நேர நிர்வாகமும்

காரைக்குடி ஸ்டுடியோவில் வேலை செய்த அனைவரையும் சென்னைக்கு அழைத்துவந்தார் அப்பச்சி. சினிமாவிலே முதன்முறையாகத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை, குடியிருக்க வீடு கட்டி ஏவி.எம் நகர், ஏவி.எம் காலனி போன்ற குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்தினார். தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆவிச்சி உயர்நிலைப் பள்ளியை ஏற்படுத்தினார்.
தன் தொழிலுடன், குடும்பம், அரசியல், நட்பு ஆகியவற்றைக் கலக்காதவர். காந்தி மேல் பக்தியும், காமராஜர் மேல் அன்பும் கொண்ட காங்கிரஸ்காரர். ஆனால், எக்காரணம் கொண்டும் தன்னை அரசியல் சார்புள்ளவராகக் காட்டிக்கொள்ளாதவர். மற்ற கட்சித் தலைவர்களுடன் நல்ல நட்புடன் பழகுவார். எங்கும் எதிலும் ‘துல்லியம்’ (Perfection) வேண்டும் என்பதில் சமரசம் செய்யாதவர். அவர் ஒரு ‘பர்ஃபெக் ஷனிஸ்ட்’ என்றால் அது மிகை அன்று.

அப்பச்சியைப் பற்றிச் சொல்லும்போது அவரின் ‘டைம் மேனேஜ்மெண்ட்’ பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். நேரம் தவறாமை என்பது அவர் உடன் பிறந்தது. எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார். ஒருமுறை என் நண்பர் கிருஷ்ணராஜ் வானவராயர் எங்கள் பள்ளியில் பேசும்போது, ‘ஏவி.எம் அன்று நடைமுறைப்படுத்திய டைம் மேனேஜ்மென்ட்டைத் தான் இன்று பல கல்லூரிகளில் பாடமாக நடத்துகின்றனர்!’ என்று சொன்னார்.

அவர் ஒரு பல்கலைக்கழகம்

சென்னைக் கம்பன் கழகத்தின் துணைத் தலைவராகத் தொடக்கம் முதல் வாழ்வின் இறுதிவரை பணியாற்றினார். ஆண்டுக்கொருமுறை கம்பன் விழா நடக்கும். அந்த மூன்று நாட்களுக்கும் ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தார். இன்றுவரை அந்த நடைமுறையை நாங்களும் கடைப்பிடித்து வருகிறோம். எங்கள் தயார் ஏவி.எம் இராஜேஸ்வரி அப்பச்சியின் அனைத்து வெற்றிகளுக்கும் துணையாக இருந்தவர். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திருமண மண்டபத்துக்குத் தாயாரின் பெயரைச் சூட்டினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஒரு பேட்டியில், ‘ஏவி.எம். தன் மனைவி இராஜேஸ்வரி அம்மையார் பெயரில் திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். இது ஏவி.எம் தன் மனைவிக்கு கட்டிய தாஜ்மஹால்!’ என்று குறிப்பிட்டார்.

ஏவி.எம். ஒரு பல்கலைக்கழகம். அதில் அப்பச்சிதான் வேந்தர். ‘நான் தமிழில் சரியான உச்சரிப்பில் பாடுகிறேன் என்றால் அதற்கு ஏவி.எம்மில் எனக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிதான் காரணம்’ எனப் பலமுறை பி.சுசீலா கூறியிருக்கிறார். ஏவி.எம். எனும் பல்கலைக்கழகத்திலிருந்து தயாராகி பிரபலமானவர்கள் பலர். நடிகர்களில் டி.ஆர்.மகாலிங்கம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கன்னட ராஜ்குமார், எஸ்.எஸ்.ஆர், கமல்ஹாசன், வி.கே.ராமசாமி, சிவகுமார். நடிகைகளில் வைஜயந்திமாலா, குமாரி ருக்மணி, விஜயகுமாரி, குட்டி பத்மினி.

ஏவி.எம். நிறுவனத்தில் ஐந்து முதலமைச்சர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா - ‘ஓர் இரவு’ (கதை, வசனம்), கலைஞர் மு.கருணாநிதி - ‘பராசக்தி’ (வசனம்) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - ‘அன்பே வா’, சிறந்த நடிகர் என்.டி.ராமா ராவ் - ‘பூ கைலாஷ்’, ‘நாதி ஆட ஜென்மே’, ‘ராமு’, ‘சிட்டி செல்லலு’, செல்வி ஜெயலலிதா - ‘அனாதை ஆனந்தன்’, ‘எங்க மாமா’, ‘மேஜர் சந்திரகாந்த்’.
75 ஆண்டுகளைக் கடந்து...

அப்பச்சி உடல் நிலை குன்றி மருத்துவமனையில் படுத்திருந்தார். எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அப்பச்சி என்னை அழைத்து ‘சரவணா பாத்ரூமில் வீணாக எரியும் விளக்கை அணை’ என்றார், நான் அணைத்தேன். அவர் உயிரும் அணைந்தது. எப்போதும் வீணாக எதையும் செய்யக் கூடாது என்பது அவர் கொள்கை. அவரின் இறுதிச் சொல்லும் அதுதான். அப்பச்சி என்னிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனத்தின் மோனோகிராமைச் சுட்டிக்காட்டி, ‘இது வெறும் மூன்று எழுத்து அல்ல. என் 50 வருட உழைப்பின் அடையாளம். இதை எந்த அளவுக்கு உயரக்கொண்டு போகிறீர்களோ, அந்த அளவுக்கு வளருவீர்கள்’ என்றார்.

அவர் உருவாக்கிய ஏவி.எம். ஸ்டுடியோவை, தொடர்ந்து 75 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி, 175 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமை.‘அயன்’, ‘சிவாஜி’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த மாற்றங்கள் வரும்போது மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டு, எங்கள் அப்பச்சியின் எண்ணத்தைச் செயலாக்குவோம். இந்த உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஆசை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அப்பச்சி எங்கு பிறந்திருக்கிறாரோ அங்கு அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதுதான்.

முயற்சி திருவினையாக்கும்!

சிறப்புக் காணொலி

ஏவி.மெய்யப்பன் அவர்களின் 113-ம் பிறந்த நாளை முன்னிட்டு ஏவி.எம் நிறுவனம் சிறப்புக் காணொலி ஒன்றைத் தயாரித்துள்ளது. அது அவரது பிறந்தநாளான ஜூலை 28 அன்று இந்து தமிழ் நாளிதழின் யூடியூப் பக்கத்தில் பிரத்யேகமாக வெளியாகும். காணொலியைக் காண இணையச் சுட்டி இதோ:

https://www.youtube.com/user/tamithehindu

கட்டுரையாளர்: ஏவி.எம்மின் மூன்றாவது குமாரர்,
ஏவி.எம் புரடெக்‌ஷன் நிறுவனத்தின்
தலைமை நிர்வாகி.ஏவி எம்Avmபல்கலைக்கழகம்ஏவி.மெய்யப்பன்ஸ்டுடியோAVM Productionsசிறப்புக் காணொலிபாரதிஆவிச்சி உயர்நிலைப் பள்ளிபிறந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x