Published : 17 Jul 2020 09:24 AM
Last Updated : 17 Jul 2020 09:24 AM

சின்ன அண்ணாமலை நூற்றாண்டு நிறைவு 100: ஒரு தேச பக்தரின் திரைப் பயணம்!

ஆர்.சி.ஜெயந்தன்

சற்றும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு எக்காலத்திலும் வசிய சக்தி உண்டு. சிலருக்கு மட்டுமே சினிமாவை விஞ்சும் நிஜ வாழ்க்கை அமையும். இப்படியும் கூட ஒருவர், தேச நலனுக்காக, தமிழ்ச் சமூகத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்க முடியுமா என்று ஆச்சரியம் அள்ளுகிறது. ‘பதிப்புலகின் பிதாமகன்’ எனப் போற்றப்படும் சின்ன அண்ணாமலையின் வாழ்க்கை, பரபரப்பும் விறுவிறுப்பும் கொண்ட சாகசச் சரித்திரம். அவர் எழுதிய ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போது அதை உணர்ந்துகொள்ளலாம். இங்கே திரைப்படத்தை அவரது வாழ்க்கைக்கு உதாரணம் காட்ட, திரையுலகுடன் அவருக்கு வலுவான தொடர்புகள் இருக்கின்றன.

‘தங்கமலை ரகசியம்’, ‘நான் யார் தெரியுமா?’, ‘தர்மராஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் கதாசிரியர் சின்ன அண்ணாமலை. ‘கடவுளின் குழந்தை’ உள்ளிட்ட பல படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர். அது மட்டுமல்ல, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ‘கடவுளின் குழந்தை’, ‘ஜெனரல் சக்ரவர்த்தி’, ‘தர்மராஜா’ ஆகிய படங்களைத் தயாரித்தவர். பதிப்புலகில் இவர் அடிவைத்து, பின்னால் உலகப் புகழ்பெற்ற ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் கண்டபோது, அதன் மூலம் பதிப்பித்த பல நாவல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் திரைப்படங்கள் ஆயின.

இன்றைய தலைமுறையும் நினைவில் வைத்திருக்கும் இரண்டு உதாரணங்கள்: ம.பொ.சி.எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூலைப் பதிப்பித்தார் சின்ன அண்ணாமலை. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டே ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்துக்குத் திரைக்கதை அமைக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவலைப் பதிப்பித்து, அந்த நாவலின் சிறப்பை, கோவையில் நடந்த ‘வேலைக்காரி’ படத்தின் நூறாம் நாள் வெற்றிவிழாவில் அண்ணாவைப் பேச வைத்து, அது திரைப்படமாகக் காரணமாக இருந்தவர்.

சின்ன அண்ணாமலையின் திரையுலகத் தொடர்புகள் போதாது என்று நினைப்பவர்களுக்கு மற்றொரு ஆச்சர்யமான தகவல். தாம் வளர்ந்து சிறந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அரசியல் பின்னடைவைச் சந்தித்தபோது, இளைஞர்களை காங்கிரஸை நோக்கி இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது ஆத்ம நண்பராகிப்போன ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ‘அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற’த்தை 1969-ல் தொடங்கி நடத்தினார். அது மட்டுமல்ல; சிவாஜியின் ரசிகர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த ‘சிவாஜி ரசிகன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

‘சிவாஜி ரசிகன்’ பத்திரிகை

13 வயதில் பிரபலம்

1920 ஜூன் 18 அன்று பிறந்த சின்ன அண்ணாமலை, பதிப்புலகிலும் கலையுலகிலும் கால்பதிக்கக் காரணமாக அமைந்தது அவரது தேசப்பற்று. காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்ட காரைக்குடி சா.கணேசனால் 10 வயதில் ஈர்க்கப்பட்டார். 12 வயதில் காந்தியை காரைக்குடியில் வெகு அருகில் சந்தித்து உந்துதல் பெறுகிறார். 1936-ல் கமலா நேரு மறைந்தபோது, தான் பயின்ற தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களைத் திரட்டி ‘வேலைநிறுத்தம்’ செய்ததால் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனந்த விகடனில் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி எழுதிய தேசிய எழுச்சியூட்டும் தலையங்கங்களைப் படித்து, முதலில் மனப்பாடம் செய்துகொண்டார். பின்னர் தனது மொழியில் ‘மைக்’ இல்லாத காலத்தில் ஒரு குட்டி எரிமலைபோல மேடைகளில் அவர் பேசத் தொடங்கியபோது அவருக்கு வயது 14. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் 144 தடையுத்தரவை மீறி இளைஞர்களைக் கூட்டம் கூட்டிப் பேசிய குற்றத்துக்காக போலீஸிடம் அடிக்கடி அடிவாங்கும் மாணவனுக்கு உள்ளூர்ப் பள்ளியில் இடமில்லாமல் போனது. அதனால் அவருடைய தந்தையார் கோபிச்செட்டிபாளையம் டயமண்ட் ஜூபிளி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார்.

அங்கேயும் சின்ன அண்ணாமலை சும்மா இருந்தாரா என்றால், இல்லை. கோபிச்செட்டிப்பாளையம் அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தீரர் சத்தியமூர்த்தியைப் பள்ளியின் மாணவர் சங்கச் செயலாளராக இருந்த சின்ன அண்ணாமலை தனது பள்ளிக்குப் பேச அழைத்தார். தீரர் பேசி முடித்ததும் நன்றியுரை என்ற பெயரில் சின்ன அண்ணாமலை ஆற்றிய எழுச்சியுரையைக் கண்டு வியந்த தீரர், அன்று மாலை நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் சின்ன அண்ணாமலையைப் பேச வைத்தார். அன்று தீரர் சத்தியமூர்த்தி கதர் அணியும்படி ஆணையிட்டதை ஏற்று, அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். மாணவனாக இருந்த காலத்தில் பேண்ட் அணிந்தாலும் அதைக் கதர் துணியிலேயே தைத்து அணிந்தார்.

கதர் பேண்ட் அணிந்து 19 வயதில் சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலைக்காகச் சிறையுடைப்பு

மகன் முழுநேர காங்கிரஸ் தொண்டனாகிவிட்டதைக் கண்ட தந்தையார், அவரை மலேசியாவிலுள்ள பினாங்கு நகருக்குத் தனது தோட்டத் தொழிலைப் பார்த்துக்கொள்ள அனுப்பினார். அங்கே, கள்ளுக்கடையால் தமிழ்த் தொழிலாளர்கள் தள்ளாடுவதைப் பார்த்து, மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவரது இடிமுழக்க உரைகளைக் கேட்ட பெண்கள், கள்ளுக்கடைகளுக்குத் தீவைத்து எரிக்க, பினாங்கு கவர்னர் இவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தினார். தமிழகம் வந்து சேர்ந்ததும் மீண்டும் காங்கிரஸ் மேடைகளில் முழங்கத் தொடங்கினார். இவரது உரையைக் கேட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக காங்கிரஸ் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்தது. காந்தியடிகள் யுத்த எதிர்ப்புச் சத்தியாகிரகம் தொடங்கியபோது, அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சின்ன அண்ணாமலை தேவகோட்டையிலிருந்து யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துகொண்டு 270 மைல் பாத யாத்திரையாக சென்னையை வந்தடைந்தபோது கைதுசெய்யப்பட்டு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்றார்.

ஒருபக்கம் சுதந்திர வேட்கை என்றால் இன்னொரு பக்கம் தமிழ் வேட்கையும் சின்ன அண்ணாமலையைத் தீவிரப் போராளியாக மாற்றியிருந்தது.1941-ல் நடந்த ‘தமிழிசைக் கிளர்ச்சி’யில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தேவகோட்டையில் நண்பர்களுடன் இணைந்து பிரம்மாண்டத் தமிழிசை மாநாட்டை நடத்தியபோது இவருக்கு வயது 21. இதன் பின்னர்தான் சின்ன அண்ணாமலையின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

1942-ல் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ ஆகஸ்டு புரட்சியைத் தொடங்கியபோது ஊர் ஊராகப்போய் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மேடைப் பிரச்சாரம் செய்தார். அதனால், சின்ன அண்ணாமலையைக் கைதுசெய்ய போலீஸார் நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 1942 ஆகஸ்டு 9 அன்று காந்தி கைதுசெய்யப்பட்ட தினத்தில், தேவகோட்டை ஜவஹர் மைதானத்தில் சின்ன அண்ணாமலை பேச ஏற்பாடாகியிருந்தது. பெருங்கடலென தேச பக்தர்களின் கூட்டம் கூடியிருந்தது. அப்போது மேடையேறி கைதுசெய்ய முடியாமல் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட போலீஸார், பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அவரைக் கைதுசெய்து, தேவகோட்டையிலிருந்து 22 மைல் தொலைவிலிருந்த திருவாடானை சிறையில் அடைத்தார்கள்.

துணைவியர் உமையாள் உடன்

சின்ன அண்ணாமலை கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி தீயாகப் பரவியது. தேவகோட்டை மக்கள் கொதித்தெழுந்து சுமார் 20 ஆயிரம் பேர் திருவாடானை சிறையை நோக்கிக் கூட்டம் கூட்டமாக நடந்தே சிறைச்சாலையை அடைந்தனர். பின்னர், சிறையை உடைத்துத் தகர்த்து, சின்ன அண்ணாமலையை விடுதலைசெய்து, அவரைத் தோளில் தூக்கி அமர்த்திக்கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கங்களுடன் தேவகோட்டை நோக்கி வந்தார்கள். இந்த எழுச்சிகரமான நிகழ்வு நாட்டின் தென்பகுதியில் நடந்ததாலோ என்னவோ தேசமெங்கும் சென்று சேராமல் போய்விட்டது.

இப்படிப் பெரும் புரட்சி செய்த மக்கள் கூட்டம் தேவகோட்டையை நெருங்கிக்கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் போலீஸ் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சின்ன அண்ணாமலையின் உயிரைக் காக்கப் பல தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்தது செந்நீரால் எழுதப்பட்ட தியாக வரலாறு. அதன்பின் ஒரு மாத கால தலைமறைவுக்குப்பின் சரணடைந்த சின்ன அண்ணாமலைக்கு, நான்கரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. வெகுண்ட மூதறிஞர் ராஜாஜி, மேல்முறையீடு செய்து தனது வாதத் திறமையால் ஆறே மாதத்தில் சின்ன அண்ணாமலையின் விடுதலையைச் சாத்தியமாக்கினார்.

பதிப்பியக்கம்

அதன்பின் ராஜாஜியின் அறிவுரையை ஏற்று சென்னைக்கு இடம்பெயர்ந்த சின்ன அண்ணாமலை, தொடங்கியதுதான் ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம். ராஜாஜி தொடங்கி வைக்க ‘தமிழன் இதயம்’ என்ற முதல் நூலுடன் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கி, ஒரு பதிப்பியக்கமாக மாறி, மலிவு விலையிலும் தரமான அச்சாக்கத்திலும் புத்தகங்களை வெளியிட்டது அந்தப் பதிப்பகம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் சுதந்திர வேட்கையூட்டும் பாடல்களும், காந்தியின் தரிசனமும் சா.கணேசன், தீரர் சத்தியமூர்த்தி போன்ற முன்னோடித் தலைவர்களும் சின்ன அண்ணாமலையை தேச பக்தர் ஆக்கினார்கள் என்றால், கற்பனைத் திறனும் சொல்லாடலும் மிகுந்த கலை ஆளுமையாக சின்ன அண்ணாமலை உயர கல்கியின் எழுத்துகள் இவருக்குத் தாக்கம் கொடுத்தன. ராஜாஜியின் தலைமை இவருக்குச் சென்னையில் ராஜபாட்டை அமைக்க வழிகாட்டியது.

இயல்பிலேயே தமிழ்மொழியின் மீது தீராக் காதல் கொண்டிருந்தவரை ம.பொ.சியின் தோழமை, தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தைத் தேசபக்தர்களின் நிழற்குடையாகவும் தமிழ் எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகவும் மாற்ற உதவியது. ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.கே.சி, கல்கி, வ.ரா, டி.எஸ்.சொக்கலிங்கம், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், நாடோடி போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிட்டது தமிழ்ப் பண்ணை. அதேபோல அன்று கவிஞர் வாலி போன்ற புதிய இளம் திறமையாளர்களின் படைப்புகளையும் பதிப்பிக்கத் தவறவில்லை. வறுமையில் நலிவுற்ற நாமக்கல் கவிஞருக்கு, ராஜாஜி தலைமையில் 1944-ல் விழா எடுத்து 20 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பு வழங்கித் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தியவர் சின்ன அண்ணாமலை.

காந்தியின் ஆசியும் திரையுலக நுழைவும்

தீண்டாமைக் கொடுமையை ஒழித்துக்கட்ட காந்திஜி தொடங்கிய ஆங்கில வாரப் பத்திரிகை ‘ஹரிஜன்’. அதை குஜராத்தி, இந்தி போன்ற பிராந்திய மொழிகளிலும் நடத்தியபோது தமிழில் அதை நடத்த கொள்கைப் பிடிப்பு மிக்க ஒரு இளைஞர் தேவைப்பட்டார். அப்போது ராஜாஜி பரிந்துரைத்த பெயர் சின்ன அண்ணாமலை. சின்ன அண்ணாமலை சிறையுடைத்து மீட்கப்பட்டதை ஆங்கிலத்தில் வெளியான ஹரிஜன் பத்திரிகையில் எழுதி, தமிழ் பதிப்பை நடத்த அனுமதியும் ஆசியும் வழங்கினார் காந்தியடிகள்.

தமிழ்ப் பண்ணை வெளியீடுகளின் வெற்றி, சென்னை தியாகராய நகரில், பனகல் பார்க் அருகே ஒரு அழகிய கட்டிடத்தில் புத்தகக் கடையுடன் எப்போதும் எழுத்தாளர்கள், தொண்டர்கள் எனச் சுறுசுறுப்பாக இயங்கிய அதன் அலுவலகத்துக்குப் பிரபலங்கள் பலரையும் வரவழைத்தது. சிவாஜி கணேசனும் தமிழ்ப் பண்ணைக்குப் புத்தகங்கள் வாங்க அடிக்கடி வருகை தந்து, சின்ன அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக மாறிப்போனார். சிவாஜியை வைத்துப் பல திரைப்படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு அவர்களது நட்பு பலமடைந்தது. ‘தர்மதுரை’ என்ற படத்தை சிவாஜிக்காக ஜப்பானில் படமாக்கினார் சின்ன அண்ணாமலை.

பி.ஆர்.பந்துலுவுடன் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் கதாசிரியராகப் பணியாற்றியபோது ஏற்பட்ட ஏற்பட்ட நட்பில் ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஆகிய படங்களை உருவாக்க அவருக்குப் பெரும் அழுத்தமும் ஆலோசனைகளும் கொடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் சின்ன அண்ணாமலை. அந்தப் படங்களின் வழியே தான் சுதந்திரப்போராட்ட புருஷர்களின் தீரங்களையும் தியாகங்களையும் அடுத்துவந்த தலைமுறையினர் திரையின் வழியே எளிதாகவும் உணர்ச்சிகரமாகவும் அறிந்துகொண்டார்கள் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தேசியச் செல்வர், தியாகச் செம்மல், தமிழ்த் தொண்டர், தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பிதாமகன் எனப் பல முத்திரைகளையும் பதித்த சின்ன அண்ணாமலையைக் குறித்து எந்த மேடையாக இருந்தாலும் பொருத்தப்பாட்டுடன் இன்றைய தலைமுறைக்கு அவரை நினைவூட்டிப் பேசியும் எழுதியும் வருபவர் பத்ம நல்லி குப்புசாமி செட்டியார். சின்ன அண்ணாமலையின் புதல்வர் கருணாநிதியின் வகுப்புத் தோழரான இவர், தற்போது சின்ன அண்ணாமலையின் ஒரே பேரன் திலக் என்கிற மீனாட்சி சுந்தரத்துடன் இணைந்து சின்ன அண்ணாமலை குறித்த நூற்றாண்டுத் தகவல் களஞ்சியம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு:jesudoss.c@hindutami.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x